டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு, இப்போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள பல வீரர், வீராங்கனைகளைப் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகின.
குறிப்பாக இந்திய விளையாட்டு வீராங்கனைகளான வினேஷ் பொகத், மேரி கோம், பி.வி.சிந்து, மனு பாகர், மீராபாய் சானு போன்றவர்களைப் பற்றி பல கட்டுரைகள் வெளியாகின.
ஆனால் இந்தப் புகழ் வெளிச்சத்தின் நிழல்கூட தன்மேல் படாத நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அமைதியாக சாதித்தவர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா பர்கோஹயின்.
இந்த ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக யாரும் அவரைப் பற்றி அதிகம் எழுதியதில்லை. பதக்கத்தின் அருகில்கூட அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் மற்றவர்கள் தன்னைப் பற்றி பெரிதாக மதிக்காத நிலையிலும் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து கால் இறுதிக்கு முன்னேறினார், லாவ்லினா. 30ஆம் தேதி நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் வென்று தனது பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்தியாவுக்கு அதிக விளையாட்டு நட்சத்திரங்களைத் தரும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பிறந்தவர்தான் லாவ்லினா. அவரது அப்பா சிறுதொழில் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். 3 பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் லாவ்லினாதான் கடைக்குட்டி.
அவரது மூத்த சகோதரிகள் இருவரும் கிக் பாக்ஸிங் போட்டியில் பயிற்சி பெற்று வந்ததால், லாவ்லினும் அவர்களைப் பின்பற்றி கிக் பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அவரது ஆர்வம் குத்துச்சண்டைப் பக்கம் திரும்பியுள்ளது.
அசாமில் உள்ள பர்பதார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, இந்திய விளையாட்டு ஆணையம், லாவ்லினாவின் குத்துச்சண்டை திறமையை அறிந்து அவரை தத்தெடுத்துள்ளது. அங்கிருந்த பயிற்சியாளரான பாடும் பரோ, அவரது திறமைகளை வெளிக்கொண்டுவந்தார்.
ஆரம்பத்தில் உள்ளூர் போட்டிகளில் வென்ற லாவ்லினா, பின்னர் மெல்ல மெல்ல பன்னாட்டு போட்டிகளில் தலைதூக்கியுள்ளார். உலக குத்துச்சண்டை வாகையர் பட்டப் போட்டியில் 2 முறை (2018 மற்றும் 2019) வெண்கலப் பதக்கங்களை வென்ற அவர், ஆசிய குத்துச்சண்டை வாகையர் பட்டப் போட்டியிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனைகள் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள லாவ்லினா, அதிகம் பேசமாட்டார். அதனாலேயே அவரைப் பற்றிய செய்திகளும் அதிகமாக வருவதில்லை.
வெளியில் அமைதியாகத் திரியும் லாவ்லினா, குத்துச்சண்டை களத்தில் புகுந்தால் புலியென பாய்வார். அந்தப் பாய்ச்சல்தான் கால் இறுதிச் சுற்றில் சீன தைபேவைச் சேர்ந்த நீன் சின் சென்னை எதிர்த்து மோதி வெற்றிபெறவைத்தது.
2018ஆம் ஆண்டில் நடந்த உலக குத்துச்சண்டை வாகையர் பட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீன் சின், லாவ்லினாவை அரை இறுதியில் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று தோற்றதற்கு லாவ்லினா பழிவாங்கி இந்தியாவிற்கான பதக்கத்தை உறுதி செய்தார் தொடர்ச்சியாக 4.8.2021 அன்று நடைபெற்ற 69 கிலோ எடைப்பிரிவின் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் லாவ்லினா துருக்கி வீராங்கனை புஷானேஸ் கர்மெனஸியை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் லாவ்லினா தோற்றதால், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உலகின் முன்னணி வீராங்கனையை இந்திய வீராங்கனை துணிச்சலாக எதிர்கொண்டு விளையாடினார். இவரது போட்டியைக் காண அசாம் மாநில சட்டப்பேரவை ஒரு நாள் தன்னுடைய நிகழ்வை நிறுத்திவைத்தது,
பதக்கம் வென்ற லாவ்லினாவின் கிராமத்தில் இன்றுவரை மின்சாரவசதிகளும் சாலை வசதியும் இல்லை, பதக்கம் வென்ற மறுநிமிடமே அவரது ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உள்ளூர் சாலைக்கு இணைப்புச்சாலை அமைக்கும் பணியும் அவரது ஊருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் வேலையும் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment