கரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம்தேதி வரை நீட்டிப்பு - ஒன்றிய அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 29, 2021

கரோனா பரவலை கட்டுக்குள் வைக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31ஆம்தேதி வரை நீட்டிப்பு - ஒன்றிய அரசு உத்தரவு

புதுடில்லி, செப்.29 நாடு முழுவதும் கரோனா பரவலை தொடர்ந்து கட்டுக்குள் வைக்க அக்டோபர் 31ஆம்தேதி வரை கட்டுப்பாடுகளை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு தழுவிய ஊரடங்கு, பொதுமுடக்கம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ஆம்தேதி தொடங்கி ஏப்ரல் 14ஆம்தேதி போடப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 15ஆம்தேதி, மே 4ஆம்தேதி, மே 18ஆம்தேதி என மாதம் இரு முறை நீட்டிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ஜூன் 1ஆம்தேதி முதல் மாதம் ஒருமுறை கரோனா ஊரடங்கு, பொதுமுடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு பொதுமுடக்கம் நாளை (30.9.2021) முடிவுக்கு வருகிறது.

அந்தநிலையில், கரோனா பரவலைத்தொடர்ந்து கட்டுக்குள் வைக்க ஏதுவாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பொதுமுடக்கத்தை ஒன்றிய அரசு மேலும் ஒருமாத காலத்துக்கு, அதாவது அக்டோபர் 31ஆம்தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அதிகாரபூர்வ உத்தரவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச்செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தகவல் அனுப்பி உள்ளார்.

அதில் அவர் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கரோனா கால கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் பின்பற்றி வராவிட்டால், விழா காலத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து விடும்.

* தற்போது கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும்கூட, வழக்கமான மத விழாக்களை முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், கரோனா கால கட்டுப்பாடுகளுடனும் கொண்டாட கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது முக்கியம் ஆகும்.

* கரோனா வைரஸ் தினசரி பாதிப்பும், நாட்டில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் சில மாநிலங்களில் உள்ளூர் பரவல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தொடர்ந்து கரோனா வைரஸ், நாட்டின் சுகாதார சவாலாக நீடிக்கிறது.

* பொதுமக்கள் கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளில் தீவிரமான கண்காணிப்பு நடைபெற வேண்டும். அப்போதுதான் கரோனா பாதிப்பு அதிகரிப்பைத் தவிர்க்க முடியும்.

* கண்காட்சி,  மத நிகழ்ச்சிகள் போன்றவை கரோனா தொற்று அதிகரிப்புக்கு வழிநடத்திவிடலாம். எனவே மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாவட்டங்களில் தினசரி பாதிப்பு விகிதம், மருத்துவமனை மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிப்பதை வழக்கப்படுத்தி விட வேண்டும்.

* எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். பரவலையும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

* சாத்தியமான அதிகரிப்பு அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கியம். இதில், கடந்த 21ஆம்தேதி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியபடி உள்ளூர் அணுகுமுறை தேவைப்படும்.

* பரிசோதனை, தடம் அறிதம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் ஆகிய 5 அம்ச உத்திகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

* மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தகுதி வாய்ந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடுவதை வேகப்படுத்த வேண்டும். தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ் போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* ஒன்றிய சுகாதார அமைச்சகத் தின் அறிவுரைப்படி, கரோனா வைரஸ் தொற்றை வலுவுடன் நிர்வகிப்பதற்கு மாவட்டம் மற் றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை தலைமைச்செயலாளர்கள் வழங்க வேண்டும்.

* மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அல்லது மாவட்ட அதிகாரிகள் இதையொட்டி பிறப்பிக்கிற உத்தரவுகள், முறையாக அமல்படுத்தப்படுவதற்காக பொதுமக்களிடமும், கள பணியாளர்களிடம் பரப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment