சென்னை, செப். 28- தமிழ்நாட்டின் மூத்த பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் ஆவார். முதுபெருங்கவிஞராகிய அவர்கள் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, குறள் பீட விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது உள்ளிட்ட பல தலையாய விருதுகளையும், இந்திய அர சின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றவர். இந்த ஆண்டு, தமிழ்மொழிக்குப் பன்னாட்டு அளவில் கனடா நாட்டின் டொரொண்டோ பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் மிக உயரிய விரு தாகிய "தகைசால் தமிழ் இலக்கிய விருது" அறிவிக்கப் பட்டுள்ள வரலாற்றுப் பெருமைக்கும் உரியவர் ஆவார்.
தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், மார்க்சியச் சிந்தனைகளையும் உள்வாங்கிய இன்றைய கவிதைப் பேராளுமையாகிய கவிஞர் தமிழன்பன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பின்னர் அதிக எண்ணிக்கையிலும், அதிக வகைமையிலுமாக 75க்கும் மேலான கவிதை இலக்கியங்களைப் படைத்திருப்பவர்.
இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் இவரது நூல்கள் பல மொழிபெயர்ப்பாகி உள்ளன. கிரிகோரி ஜேம்ஸ், லொரெய்னிபோக் முதலிய அயல் நாட்டு அறி ஞர்கள் இவருடைய நூல்களை மொழிபெயர்த்துள்ளனர்.
கவிஞர் தமிழன்பன் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் இன்று செவ்வாய்க்கிழமை 28-092021ஆம் நாள் மலர் கின்றது. இதனைச் சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் மாதந்தோறும் ஓர் இலக்கிய நிகழ்வைத் தலை சிறந்த ஆளுமைகளைக் கொண்டு தமிழன்பன் படைப்பு களை மய்யமிட்டுச் சொற்பொழிவாற்றும் வகையில் இணைய வழியாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
28.9.2021ஆம் நாள் முதல் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசர் அரங்க. மகா தேவன் அவர்கள் ‘கவிஞர் தமிழன்பனின் கவிமொழி' என்னும் பொருளில் உரையாற்ற உள்ளார்கள்.
இணையவழி இணைப்பு: https://www.youtube.com/watch?v=yISb38kOrds
இவ்வாறு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறை, துணைத் தலைவர் முனைவர் மணிகண்டன் தெரி வித்துள்ளார்.
No comments:
Post a Comment