ஊற்றங்கரை, செப்.5 ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக தலைவர் செ.பொன்முடி -ஜெயா ஆகியோர்களின் புதல்வனும் ஊற்றங்கரை ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி பொறுப்பாளருமான பொன்.கவுதமன் அவர்களுக்கும் திருப்பத்தூர் முருகேசன் -சங்கீதா ஆகியோர்களின் புதல்வி மு..பவித்ரா அவர்களுக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா திராவிடர் கழக பொது செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் கொள்கை திருவிழாவாக நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லாவி சுபா திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா நடைபெற்றது. மண்டபத்தை சுற்றி கழக கொடிகள் கட்டப்பட்டும் பதாகைகள் வைக்கப்பட்டும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மணமக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி பதாகையாக மணவிழா மண்டபத்தின் வாயிலில் கட்டப்பட்டிருந்தது. மிக எளிமையாக எவ்வித சடங்கு சம்பிரதாயமும் இன்றி தாலி மறுத்து கருப்பு சட்டையில் மணமகன் வாழ்க்கை இணை நல ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இந்த மணவிழாவிற்கு மணமக்கள் சார்பாக பொ.தம்புசெல்வன் வரவேற்புரையாற்ற கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் த.அறிவரசன் தலைமை தாங்கி உரையாற்றினார் . மாநில அமைப்பு செயலாளர் செயல்வீரர் ஊமை.ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா.சரவணன் , தருமபுரி மண்டல தலைவர் அ.தமிழ் செல்வன், மண்டல செயலாளர் பழ.பிரபு, கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் உள்ளிட்ட தோழர்கள் முன்னிலை வகித்து வாழ்த்துரையாற்றினார்கள்
மணவிழாவை நடத்தி வைக்க வருகை தந்த திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் சுய மரியாதை திருமணத்தின் சிறப்புகளை மக்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் எளிமையாகவும் அனைவரையும் ஈர்க்கும் வகையிலும் உரையாற்றி மணமக்களை ஒப்பந்த உறுதிமொழியினை கூறச் செய்து வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்தார். ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் செ.சிவராஜ் .ஒன்றிய அமைப்பாளர் அண்ணா.அப்பாசாமி , பொதுக்குழு உறுப்பினர் ஜான்சிராணி, மண்டல மகளிர் பாசறை தலைவர் இந்திராகாந்தி ஊற்றங்கரை ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.பழனி செயலர் வே.முருகேசன், ஊற்றங்கரை நகர தலைவர் இரா.வேங்கடம் உள்ளிட்ட தருமபுரி - கிருட்டினகிரி மாவட்ட, ஒன்றிய, நகர கழக பொறுப்பாளர்களும், பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்
எவ்வித சடங்கும் ,எவ்வித மத அடையாளமும் இன்றி தாலியை மறுத்து தந்தை பெரியார் கொள்கை வழி நின்று சுயமரியாதை முறையில் நடைபெற்ற திருமணத்தை பலரும் பாராட்டி மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment