தருமபுரி செப்.5- தருமபுரி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டமும், அதைத் தொடர்ந்து திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டமும் தருமபுரி திருப்பத்தூர் சாலையில் உள்ள சிவாஜி - செல்வி திருமண மண்டபத்தில் 29.8.2021 அன்று பிற்பகல் 3 மணி அளவில் மாவட்ட. தலைவர் வீ. சிவாஜி தலைமையில் நடைபெற்றது. 135 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் மாணவர்களிடையே புரட்சி முழக்கமிட்டார்.
கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி மாவட்ட. கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மு.பரமசிவம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.கோவிந்தராஜ் கடவுள் மறுப்பு கூறினார். மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா.சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் இ.மாதன், நகர தலைவர் கரு.பாலன், மாவட்ட துணைத்தலைவர் இரா.வேட்டராயன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.சரவணன், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரையாற்றினர். திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் சிறப்புரையாற்றினார்.
மாணவர் சந்திப்பு கூட்டம்
தருமபுரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் மாலை 4 மணி அளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன் தலைமை ஏற்று பேசினார். அதைத் தொடர்ந்து மாநில மாணவர் கழக துணை செயலாளர் த.மு. யாழ்.திலீபன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.பிரதாப், மண்டல மாணவர் கழக செயலாளர் செல்லதுரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழக அமைப்பாளர் இரா.குணசேகரன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பெரியார் பற்றிய கேள்விகளை எழுப்பி பதில்களை பெற்றார். தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாணவர் சந்திப்பு கூட்டத்தில் இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் அதிக மாணவர்கள் பங்கேற்ற சந்திப்பு கூட்டமாக தருமபுரி மாவட்டம் திகழ்கிறது.
குறுகிய காலத்தில் கிராமம் கிராமமாகச் சென்று மாணவர்களை சந்தித்து அவர்களை சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்க வைத்த மாணவர் கழக பொறுப்பாளர்கள் யாழ்.திலீபன், இ.சமரசம் மா.செல்லதுரை ஆகியோருக்கு சிறப்பு செய்து பாராட்டினர். தந்தை பெரியாரைப் பற்றி தாங்கள் அறிந்தவையை கூறுங்கள் என மாணவர்களுக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி வைஷ்ணவி என்னும் மாணவி பேசும்போது ,இதுவரை பல தலைவர்களைப் பற்றி பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறோம் அதைப் போலத்தான் தந்தை பெரியார் பற்றியும் படித்திருக்கிறோம் ஆனால் இங்கு வந்த பிறகுதான் பெரியார் பற்றிய சிறப்பை தெரிந்துகொள்ள முடிந்தது என்றார். அதைத் தொடர்ந்து அனுசிறீ என்ற மாணவி பேசும் போது, நான் கல்லூரியில் படித்து இருந்தாலும், பாடப் புத்தகத்தில் உள்ளதை தவிர பெரியாரை தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது, இங்கே வந்தபிறகுதான் பெரியார் ஜாதி ஒழிப்பாளராக, மத எதிர்ப்பாளராக, பெண்ணடிமை அழிப்பாளராக, பெண்ணுரிமை பெற்றுத் தந்தவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவரது கொள்கையை இலட்சியத்தை தொடர்ந்து பின்பற்றுவோம் என்று உறுதிபடக் கூறினார்.
அபிநயா என்னும் மாணவி பேசும்போது, எங்கள் வீட்டில் நான் உட்பட. கடவுள் பக்தி உள்ளவராக தான் இருந்தோம். கடவுளை பற்றி முழுமையாக தெரியாது ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொண்டேன். என் வீட்டுக்கு சென்றவுடன் எங்கள் வீட்டில் உள்ள கடவுள் படங்களை முதலில் எடுத்து வீசுவேன், இங்கு வந்த பின்பு தான் நிறைய தகவல்களை தெரிந்து இருக்கின்றோம். பெரியார் மற்ற தலைவர்கள் போல் இல்லாமல் தனித்தன்மையுடன் செயல்பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன். நம்மை மூடத்தனத்திற்கு உள்ளாக்கிய அந்த கடவுள் படத்தை என் வீட்டிலிருந்து எடுத்து வெளியே வீசப்போகிறேன் என்று கூறியபோது அரங்கம் அதிரும் அளவிற்கு கைத்தட்டி மாணவர்கள் வரவேற்றனர்.
மாணவர்கள் சார்பில் ராகுல் மற்றும் வைத்தீஸ்வரன் பேசும் போது இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை மீட்க போராடியவர்கள் தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் என்பதை நாம் மறுக்க முடியாது. அவர்களை நாம் மறந்தாலும் மறுத்தாலும் நமக்கு தீமைதான் உண்டாகும். அவர்களிருவரும் போட்டுத் தந்த பாதையில் மாணவ மாணவிகள் பயணிப்போம் என்று கூறினர்.
பாப்பிரெட்டிப்பட்டியிலிருந்து தனி வாகனத்தில் 55 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 35 பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மிட்டாரெட்டி அள்ளி, கொண்டகரஅள்ளி, வேப்பிலைபட்டி, வெதரம்பட்டி, தாதனூர், வாசி கவுண்டனூர் கிராமங்களைச் சேர்ந்த 135க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
பெரியார் செல்வன் உரை
அதிக அளவில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இருப்பதை பார்த்து ஒரு பயிற்சிக் களமாக, உணர்ச்சிப் பெருக்காக, புரட்சி கருத்து மழையாக திராவிடர் கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் கருத்து மழை பொழிந்தார்.
ஜாதிமத தோற்றம், பெண்ணடிமை ஒழிப்பு, பெரியார் ஆற்றிய பணிகளை பட்டியலிட்டு பேசியதுடன் தந்தை பெரியார் காலத்திற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் நடைபெற்ற சாதனைகளை பட்டியலிட்டடார்.
இன்று மாணவ மாணவிகள் மருத்துவ கனவை கலைத்து 16 மாணவிகளின் உயிர் பலிக்கு காரணமாக இருந்தவர்கள் எடப்பாடியும் மோடியும் தான் என்பதை மாணவர்களுக்கு உணர்ச்சிபட எடுத்துரைத்தார்..
அதைத்தொடர்ந்து ஜாதி ஒழிப்பிற்காக தந்தை பெரியார் காலமெல்லாம் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்ததால் எல்லா இடங்களிலும் இருந்த ஜாதி இறுதியில் கோயில் கருவறையில் ஓடி ஒளிந்து கொண்டது .அதை அகற்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை அறிவித்தார். ஆனால் பெரியார் இறக்கும்போது அந்த திட்டம் நிறைவேற்றப்படாமலேயே மறைந்து விட்டார். அதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் 206 மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளித்தார்.பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க இருந்த நிலையில் பார்ப்பன கூட்டம் அதைத் தடை செய்ய காரணமாக இருந்தது.
அதன் பிறகு ஆட்சிக்கு வந்த தளபதி மு .க .ஸ்டாலின் அவர்கள் அனைத்து ஜாதியினரும்அர்ச்சகர் ஆகும் சட்டத்தை ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல், இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்கி சாதனை படைத்துள்ளார் நம் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் என கூறிய போது அரங்கம் அதிரும் அளவுக்கு கையொலி எழுப்பி மாணவ-மாணவிகளும் கழகத் தோழர்களும் ஆரவாரம் செய்தனர்.
பெரியார் செல்வன் அவர்களின் புரட்சி மிகுந்த உணர்ச்சி உரையை மாணவ-மாணவிகள் பாராட்டி மகிழ்ந்தனர். வருகைதந்த 170க்கும் மேற்பட்ட தோழர்களுக்கு சிறப்பு உணவு அளிக்கப்பட்டது
தீர்மானம்-1 .தந்தை பெரியாரின் பெரும் பணியை சுமந்து நின்ற பெரியார் பெருந்தொண்டர் கே. ஆர். சின்னராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மா.கிருஷ்ணன், பெரியார் பெருந்தொண்டர் தமிழ்மணி,நகர தலைவர் கரு. பாலன் அவர்களின் மூத்த மகன்,மாவட்ட மாணவர் கழக செயலாளர் வி.பா .ஆதவன் மற்றும் கரோனா தொற்றால் மறைவுற்ற. மற்ற தோழர்களுக்கும் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மாணவர் கழகம் சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறது.
தீர்மானம் 2. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அரை நூற்றாண்டு காலம் தந்தை பெரியாரின் இறுதி போராட்டத்தை முன்னெடுத்து போராடி வெற்றி கண்ட. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கும், அதை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டுகளையும் :வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3. சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்தில் 135 அடி பெரியார் சிலை வைக்க உரிய அனுமதி தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தருமபுரி மாவட்டம் சார்பில் பெரும் நிதி சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
கலந்துகொண்டோர்
மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி துணைத் தலைவர் தீ.சிவாஜி,முன்னாள் திராவிடர் கழக இளைஞரணி தலைவர் காமலாபுரம் ராஜா, காமலாபுரம் முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சி காமராஜ், விடுதலை வாசகர் வட்ட தலைவர் க.சின்னராஜ், பாப்பரப்பட்டி சுந்தரம், தருமபுரி ஒன்றிய செயலாளர் சென்ராயன், வேப்பிலைப்பட்டி மாணவர் கழக தலைவர் பெரியார், வேப்பிலைப்பட்டி மாணவர் கழக அமைப்பாளர் அரிகரன், கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நிலவன்,கடத்தூர் விடுதலை வாசகர் வட்டத் தலைவர்ஆசிரியர் வ.நடராஜ், விடுதலை வாசகர் சொ.பாண்டியன், பாப்பிரெட்டிப்பட்டி மோகன்குமார், மத்தூர் மணிமொழி, பாப்பிரெட்டிபட்டி ஒன்றிய தலைவர் மதிவாணன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, தருமபுரி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் மு.பிரபாகரன்,படிப்பதை உதவியாளர் மல்லிகா, சவுலூர் சுரேசு,விடுதலை வாசகர் எம்.வஜ்ஜிரம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இறுதியில் மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் சமரசம் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment