கொள்கையா? ஆட்சியா? கொள்கைதான் முக்கியம்
அமெரிக்க தி.மு.க. சார்பில் நடைபெற்ற மெய்யிணைக் கலந்துரையாடலில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை,செப்.3 நெருக்கடி நிலையில், பிரதமராக இருந்த இந்திரா காந்தி கடிதம் கொடுத்து அனுப்புகிறார், எங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று சொல்லி. ஆனால், அப்படி செய்தாரா கலைஞர்? அவர் களை எதிர்த்துத் தீர்மானம் போட்டார். அதற்காக ஆட்சி யையும் பறிகொடுத்தார். அதைப்பற்றி கவலைப்பட வில்லை கலைஞர் அவர்கள். மாநில உரிமைக்காக ஆட்சி போனாலும் பரவாயில்லை என்றுதான் கலைஞர் நினைத்தார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்!''
கடந்த 8.8.2021 அன்று மாலை அமெரிக்க தி.மு.க.வின் மெய்யிணைக் கலந்துரையாடல் காணொலி கூட்டத்தில், ‘‘கலைஞரின் சாதனைகளும், நமது கடமைகளும்'' என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கலைஞரின் நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
அவரை எதிர்த்து முழக்கங்கள் எழுந்தபோதுகூட கலைஞர் அவர்கள் சொன்னார், ‘‘கருணாநிதி ஒழிக, கலைஞர் ஒழிக! என்று எழுதுகிறான்; நான் கட்டிக் கொடுத்த வீட்டு சுவற்றில்தான் எழுதுகிறான், அந்த வீட்டில் குடியிருக்கிறான்'' என்று.
அவருடைய நகைச்சுவை உணர்வுக்கு இன்னொரு வேடிக்கையான சம்பவம்,
ஒரு நண்பர் சொன்னார், உங்களை இவ்வளவு கடுமையாக அவர் பேசுகிறாரே? என்று.
அதற்கு ஆத்திரப்படாமல் கலைஞர் அவர்கள் பதில் சொன்னார், ‘‘நான் அவருக்கொன்றும் நன்மை செய்ய வில்லையே, பிறகு ஏன் கடுமையாகப் பேசுகிறார். வழக்கமாக நான் ஏதாவது உதவி செய்திருந்தால்தான், அந்த நண்பர்கள் என்னை கடுமையாகத் தாக்குவார்கள். ஆனால், இவருக்கு எனக்குத் தெரிந்த வரையில் நான் உதவி எதுவும் செய்யவில்லையே, பின் ஏன் என்னைத் தாக்குகிறார்?'' என்று கேட்டார்.
இதற்கு என்ன பொருள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
ஆகவே, நண்பர்களே, கலைஞர் அவர்களுடைய சாதனைகளை ஒவ்வொன்றையும் நீங்கள் அறிவீர்கள்.
அதனுடைய அடித்தளம் என்ன?
திராவிட இயக்கம் எப்படிப்பட்டது?
இன்றைக்கு அவ்வளவு பலமான ஓர் அடித்தளம் அமைந்த காரணத்தினால்தான், நாடாளுமன்றத் தேர் தலில் மிகப்பெரிய வெற்றி. சட்டமன்றத்திலே மீண்டும் ஆட்சி.
இன்றைக்கு விடியல் ஏற்பட்டு இருக்கிறது!
கடந்த 10 ஆண்டுகால இருண்ட கால ஆட்சிக்கு இன்றைக்கு விடை கொடுத்து,
உதயசூரியன் முகிலைக் கிழித்து முழு மதிபோன்று - காரிருள் நீங்கியது என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு விடியல் ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, இத்தனை பேருடைய உழைப்பு.
கலைஞரிடம் நன்றாகக் கற்றுக்கொண்டவர்தான் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கின்றவர். அவர் ஒன்றும் நேற்றைக்குப் பெய்த மழையில், இன்று முளைத்த காளான் அல்ல.
அது உதைப்பட்டு, அடிப்பட்டு, சிறைச்சாலையேகி, கிளர்ச்சி நடத்தி, தெருவிலே நின்று, மக்களைச் சந்தித்து, மக்கள் பிரதிநிதிகளாகி, மாநகராட்சியில் இருந்து, பிறகு ஆட்சிக்கு வந்து, மக்கள் பிரதிநிதியாகி - அதற்குப் பிறகு ஒவ்வொரு காலகட்டத்தையும் தாண்டி, துணை முதல மைச்சர் - முதலமைச்சர் - இவ்வளவு பயிற்சிக் களத்தைத் தாண்டியிருக்கிறார். அதனால்தான் அவருக்கு அந்தப் பக்குவம்.
ஜாதி ஒழிப்பில் எவ்வளவு பெரிய சாதனை - சாதாரணமானதா?
இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள்கூட ஆகவில்லை; இன்றைக்கு அவருக்கு உண்மையான எதிர்ப்பு என்று யாரும் இல்லை.
அரசியலில் முகவரியற்றுப் போய்விட்டோமே என்று கருதுகிறவர்கள் சில நேரங்களில் முகாரி பாடுகிறார்களே தவிர, வேறு கிடையாது.
கொள்கைகளைச் செய்வதற்குத்தான் ஆட்சி - ஜாதி ஒழிப்பு தானே இந்தத் திராவிட இயக்கத்தினுடைய அடித்தளம். அந்த ஜாதி ஒழிப்பில் எவ்வளவு பெரிய சாதனை - சாதாரணமானதா?
பாலம் கட்டலாம் யார் வேண்டுமானாலும், பள்ளிக் கூடம் நடத்துவதைக்கூட சிலர் எதிர்த்தாலும், பிறகு ஒப்புக்கொள்வார்கள். மருத்துவமனை என்றாலும், மதம்கூட உள்ளே நுழைவதற்கு அதனை வாய்ப்பாகப் பயன்படுத்தலாம்.
ஈரோட்டுச் சம்மட்டியால் மட்டும்தான் முடியும்
ஆனால், நம்முடைய நாட்டில் ஜாதியில் கை வைத்துத் தப்ப முடியுமா? ஏனென்றால், காலங்காலமாக மூளைக்கு விலங்கு போட்டு வைத்திருக்கிறார்கள். அந்த விலங்கை உடைப்பதற்கு ஈரோட்டுச் சம்மட்டியால் மட்டும்தான் முடியும். அதை திராவிடர் இயக்கம் லாவகமாக செய்துகொண்டிருக்கிறது.
கலப்பு மணங்களை, ஜாதி மறுப்பு மணங்களை ஊக்கப்படுத்திய ஆட்சி!
அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், கலப்பு மணங்களை, ஜாதி மறுப்பு மணங்களை ஊக்கப்படுவதற் குத் தங்கப் பதக்கம் அளித்தார். அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் அதனை விரிவுபடுத்தினார்.
விரிவுபடுத்தியதோடு மட்டுமல்ல நண்பர்களே, இன்னும் ஒருபடி மேலே போய், அவர்கள் எதைச் செய்தார்கள் என்று சொன்னால், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை நிறுவினார்.
நேற்றுகூட அருமைச்சகோதரர் விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அருமையாகச் சொன்னார்.
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்!
சேரி என்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்தி ருந்தவர்கள் எல்லாம் ஊருக்குள் கொண்டு வரவேண்டும் என்பது சாதாரணமா? எல்லோரையும் ஒன்று சேர்த்து பெரியார் நினைவு சமத்துவபுரங்களை எல்லா இடங் களிலும் நிறுவினார். அதற்கு செயல்வடிவம் கொடுத்தார்.
பெரியார் சொன்னார், ஜாதி எதிர்த்து, ஜாதி பாம்பை நான் அடிக்க ஆரம்பித்தது வைக்கத்தில். அது இங்கே ஓடி, அங்கே ஓடி தலையில் அடி வாங்கியிருக்கிறது. தனி தண்ணீர்ப் பானை, பள்ளிக்கூடம், சாப்பிடுவதற்குத் தனி இடம், சேரன்மாதேவி குருகுலம் - இவை எல்லா வற்றையும் தாண்டி கடைசியாக அந்தப் பாம்பு எங்கே போய் ஒளிந்தது என்றால், கோவில் கருவறைக்குள் போய் தஞ்சமடைந்தது.
ஆகவேதான், அனைத்து ஜாதியினரும் ஆதி திராவிடர் உள்பட அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொன்னோம். அர்ச்சகர் ஆனால், மோட்சத்தில் முன் சீட் கிடைக்கும் என்பதற்காக அல்ல - அல்லது வேலை வாய்ப்பிற்காக அல்ல.
மூன்று முறை சட்டம் கொண்டு வந்தார்
அதைவிட மிக முக்கியமானது - காலங்காலமாக இருந்து வரக்கூடிய சமுதாய இழிவு, பிறவி இழிவு - ஒரு மனிதனுக்கு இருக்கின்ற வாய்ப்பு, இன்னொரு மனிதனுக்குக் கிடைக்காது. அர்ச்சகராக மேல்ஜாதிக் காரனாகத்தான் இருக்கவேண்டும் என்பதை உடை என்று சொன்னவுடன், கலைஞர் அவர்கள் துணிச்சலாக மூன்று முறை சட்டம் கொண்டு வந்தார்கள். உச்சநீதி மன்றத்திற்கு சென்றார்கள், அதிலும் வென்று காட்டினார்.
பெரியார் மறைந்தவுடன், அவருக்கு அரசு மரியா தையுடன் அடக்கம் செய்தார். ஆட்சியை துச்சமென கருதி, அரசு மரியாதையைக் கொடுத்தார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.
பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்தால், அதனால் உங்களுடைய ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று சொன்ன அதிகாரிகளிடம்,
ஆட்சி போனால் என்ன? அதற்காக நான் பெருமை படுவேன். என்னுடைய தலைவர், என்னை ஆளாக்கிய தலைவர், தமிழ்நாட்டினுடைய நவீன தலைவர் அவர். இந்தியாவிற்கு மகாத்மா காந்தி எப்படிப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுகின்றீர்களே, அதுபோல, எங்களுக்குத் தமிழ்நாட்டினுடைய தந்தை அவர். காந்தியார் தேசத் தந்தை - இவர் தமிழ்நாட்டின் தந்தை. அவருக்கு அரசு மரியாதை கொடுத்தால், என்னுடைய ஆட்சி போகும் என்றால் பரவாயில்லை என்று சொன்னார்.
காமராஜர் அவர்கள், ஈ.வெ.கி.சம்பத் அவர்களிடம் சொல்லி மகிழ்ந்தார். நானே அந்த இடத்தில் இருந்தால் கூட, இதுபோன்ற முடிவை எடுத்திருக்க முடியுமா என்றால், சந்தேகம்தான் என்று சொன்னதாக, அன்னை மணியம்மையார் அவர்களிடம் வந்து ஈ.வெ.கி.சம்பத் சொன்னார்.
பிறகு கலைஞர் அவர்கள் என்ன சொன்னார், ‘‘பெரியாருக்கு அரசு மரியாதைதான் என்னால் கொடுக்க முடிந்தது. ஆனால், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை என்னால் எடுக்க முடியவில்லையே'' என்று வேத னைப்பட்டார்.
மாநில உரிமைக்காக ஆட்சி போனாலும் பரவாயில்லை!
அதேபோன்று நெருக்கடி நிலையில், பிரதமராக இந்திரா காந்தி கடிதம் கொடுத்த அனுப்புகிறார், எங்களை ஆதரித்து தீர்மானம் போடுங்கள் என்று சொல்லி. ஆனால், அப்படி செய்தாரா கலைஞர்? அவர்களை எதிர்த்துத் தீர்மானம் போட்டார். அதற்காக ஆட்சியையும் பறிகொடுத்தார். அதைப்பற்றி கவலைப்படவில்லை கலைஞர் அவர்கள். மாநில உரிமைக்காக ஆட்சி போனாலும் பரவாயில்லை என்றுதான் கலைஞர் நினைத்தார்.
செயத்தக்க செய்யாமை
செய்யத்தக்க செய்வது
இந்த இரண்டும் உண்டு. செயத்தக்க செய்வது எப்படி என்பதற்கு அடையாளம், டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் குழு; சந்திரா ரெட்டி -
அதேபோல, டாக்டர் ராஜமன்னார் தலைமையில், லட்சுமண சாமி முதலியார்.
இரண்டு தலைமை நீதிபதிகள்; ஒரு கல்வியாளர், துணைவேந்தர் - மிகப்பெரிய மருத்துவர் - நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை இணைத்து ஒரு அறிக்கை.
நாளைக்கும் அந்த அறிக்கைதான் - எதிர்காலத்தில் நிற்கப் போகிற அறிக்கை.
கொள்கையா? ஆட்சியா? கொள்கைதான் முக்கியம்
அதற்குப் பிறகு மாநில சுயாட்சி தீர்மானம். சட்டமன்றத்தில் - அப்படி தீர்மானம் போட்டால், ஆட்சி போய்விடும். பரவாயில்லை - கொள்கையா? ஆட்சியா? கொள்கைதான் முக்கியம்.
முதலாவது மாநில சுயாட்சி
இரண்டாவது பெரியாருக்கு அரசு மரியாதை -
மூன்றாவது நெருக்கடி காலம்
நினைத்துப் பாருங்கள், என்ன செய்தாவது ஆட்சி யைப் பிடிக்கவேண்டும்; ஆட்சியைப் பிடித்தவுடன் சம்பாதிக்கவேண்டும்; ஆட்சியைப் பிடித்தவுடன், அந்தக் கட்சியை யாரிடமும் அடகு வைக்கலாம் என்ற சிந்தனை. ஆனால், கலைஞர் அப்படிப்பட்டவர் அல்ல.
தந்தை பெரியாருடைய தொலைநோக்கு!
அதனால்தான், தந்தை பெரியாருடைய தொலை நோக்கு, அப்படி ஒருவரை அடையாளம் கண்டது?
ஏன் கலைஞர்தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று பெரியார் நினைத்தார்?
அவரால் ஆளாக்கப்பட்டு, அவரிடம் பயிற்சி பெற்று இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், அதே மாநில சுயாட்சியை, மாநிலக் கொள்கையை இன் றைக்கும் முழங்கிக் கொண்டிருக்கின்றார் நம்முடைய தளபதி அவர்கள்.
நூறு நாள்கள்கூட ஆகாத காலத்தில், நூறாண்டு சாதனைகளை செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்!
இன்றைக்கும் மக்கள் முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். நூறு நாள்கள்கூட ஆகாத காலத்தில், நூறாண்டு சாதனைகளை செய்திருக்கிறார். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் முதல் முதலமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார்.
திராவிடம் வெல்லும் என்பதற்கு அடையாளம் இவைகள் அல்லவா!
எனவேதான், கலைஞருடைய மூன்றாமாண்டு நினைவு என்பது இருக்கிறதே, அது ஒரு சூளுரை நாள்!
இது ஒரு தொடர் லட்சிய ஓட்டம்!
லட்சியப் பயணம்!
பாதை இல்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை அமைத்து - பெரியார் சமத்துவபுரமாக அமைத்து - நாடே சமத்துவபுரம் - மனிதநேயம் - அனைவருக்கும் அனைத்தும்.
சமூகநீதி என்றால் என்ன?
அனைவருக்கும் அனைத்தும்
பெரியார் ஒரே வார்த்தையில் சொன்னார், சமூகநீதி என்றால் என்ன? அனைவருக்கும் அனைத்தும் என்றார்.
எல்லாருக்கும் எல்லாமும் இருப்பதான இடம்நோக்கி நடக்கட்டும் இந்த வையம் - புரட்சிக்கவிஞர் வரிகளில்.
ஆகவே, நண்பர்களே! கலைஞருடைய நினைவு நாளில், நாம் என்ன கடமை ஏற்கவேண்டும்?
இந்த ஆட்சியைப் பாதுகாக்கவேண்டும் என்பது ஆட்சிக்காக அல்ல - இந்த இனத்தின் மீட்சிக்காக!
வெறும் மாட்சிக்காக மட்டுமல்ல - வெறும் பெரு மைக்காக மட்டுமல்ல - நம்முடைய தேவைக்கு - நம்முடைய மக்களின் பாதுகாப்புக்கு. நாளும் மதவெறி உச்சக்கட்டத்திற்குப் போய்க் கொண்டிருக்கும்பொழுது, தன்னிடத்தில் அதிகாரத்தை வைத்துக்கொண்டுள்ள வர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கின்ற நேரத்தில், அதற்கு அமைதியாக, ஆழ மாக, செயல்பூர்வமாக, கொள்கைபூர்வமாக ஒரு தெளிவான அரசியல் ரீதியான பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், இது சாதாரணமா?
ஆகவே நண்பர்களே, உங்களைப் பொறுத்த வரையில், இதற்கு எதிரான தத்துவங்கள் அங்கே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்க தி.மு.க.வின் நற்பணிகள்!
அமெரிக்க தி.மு.க. நல்ல பணிகளைச் செய்கின்ற இளைஞர்களை உருவாக்கி இருக்கிறது. அந்தப் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.
ஆனால், இங்கே இருக்கின்ற மதவெறிக் கும்பல் - அங்கே இருக்கிறது. இங்கே சமஸ்கிருதத்தை வளர்க்க முடியாதவர்கள், அங்கே சமஸ்கிருதத்திற்கென்று தனியே பெரிய வித்தைகளைக் காட்டுகிறார்கள்.
எனவேதான், நோய் எங்கேயும் வரும். எவ்வளவு நேரத்தில்? ஓரிடத்தில் உள்ள பரவுகின்ற நோய், விமானம்மூலமாக வருவதைப்போல, இந்த நோய் எல்லா இடங்களுக்கும் வரும். அதை நீங்கள் உணர வையுங்கள் அங்கே!
மதவெறி சக்திகள், சனாதன சக்திகள் அங்கே வாலாட்ட முடியாமல் செய்வதற்கு, இங்கு நாங்கள் எப்படி கவனத்தோடு இருக்கிறோமோ, அதேபோல கவனத்தை அங்கேயும் செலுத்துங்கள்.
தமிழர்களுடைய பண்பாடு என்ன?
‘சைனா டவுன்' என்று நான் சொல்வதுண்டு. அங்கே அந்த நாட்டுப் பண்பாட்டை அவர்கள் வைத்திருப் பார்கள். ஆனால், நம்முடைய நாட்டில் பண்பாடு என்றால், வெறும் கோவில் மட்டும்தான் கட்டுவது என்று நினைத்திருக்கிறார்கள்.
தமிழர்களுடைய பண்பாடு என்ன?
இன்றைக்குக் கீழடி நாகரிகம் - திராவிட நாகரிகம் மிகப்பெரிய அளவிற்கு விரிந்து பரந்து கொண்டிருக்கிறது.
மொழியால் மட்டும் தமிழர்கள் அல்ல -
வழியால் தமிழர்கள் மட்டுமல்ல -
நம்முடைய பார்வையிலே தெளிவு இருக்கவேண்டும். விழியால் தமிழர்களாக - திராவிடர்களாக இருக்க வேண்டும்.
மொழியால் நாம் தமிழர்கள் - இனத்தால் திராவிடர்கள்.
திராவிடப் பண்பு என்பது இருக்கிறதே, அது இனம் மட்டுமல்ல - பண்பாடு நான் சொன்னதைப்போல - சமத்துவத்தை சொல்லுவது - சம வாய்ப்பை சொல்லுவது - சம உரிமையை சொல்லுவது - எல்லோரும் ஓர் நிறை என்று சொல்லுவது - பெண்ணினம், ஆணினம் என்கிற பேதம் இல்லாதது என்று சொல்லுவது. மேல்ஜாதி - கீழ்ஜாதி இல்லை என்று சொல்லுவது.
வருணாசிரம விஷக் கிருமிகள் உள்ளே நுழைய இடந்தராதீர்!
கலிபோர்னியா போன்ற மாநிலங்களில் ஜாதிப் போராட்டங்கள் வருகிறது என்றால், ஒரு நாட்டின் கிருமிகள், இன்னொரு நாட்டிற்கு எளிதாக வரும் என்பதால், அதிலும் வருணாசிரமக் கிருமிகள் அங்கே உள்ளே நுழையும்பொழுது, அந்தக் கிருமிகளை அழிப்பதற்கு - அந்த விஷக் கிருமிகளுக்கு இடந்தராத அளவிற்கு நீங்கள் செயல்படுங்கள்.
அமெரிக்கத் தி.மு.க.வினருக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் இதுதான்.
எச்சரிக்கையோடு இருங்கள், எல்லா காலத்திலும்!
Eternal Vigilance is the price for our liberty என்று ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு.
எப்பொழுதும் கண்ணுங்கருத்துமாய் இருப்பதுதான் சுதந்திரத்தைக் காப்பாற்றுவது என்பது.
ஆனால், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதற்கு அதைவிட கண்ணுங்கருத்துமாக இருக்கவேண்டும்.
அதுதான் நம்முடைய சூளுரை!
எனவேதான், இன்னொரு மண்ணிலே இருக்கி றோமே என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள். அந்த மண்ணை நீங்கள் தூய்மையாக வைத்துக்கொள்வதற்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு நீங்கள் உதவு வதற்கு வாய்ப்புகள் என்பது சிறந்தது. அதைவிட நீங்கள் அங்கே ஓர் குலமாக இருங்கள்.
எது உங்களைப் பிரிக்கிறது என்பதைப்பற்றி கவலைப்படாதீர்கள்; அதை அலட்சியப்படுத்துங்கள்
எது உங்களைப் பிரிக்கிறது என்பதைப்பற்றி கவலைப் படாதீர்கள். அதை அலட்சியப்படுத்துங்கள் என்று தந்தை பெரியார் சொன்னார்.
எது உங்களை இணைக்கிறது என்பதைப்பற்றி நீங்கள் கவலைப்படுங்கள் - அதை ஆழப்படுத்துங்கள், அகலப்படுத்துங்கள். அதுதான் என்னுடைய அன்பான ஓர் வேண்டுகோளாக - ஒரு செய்தியாக இந்த கலைஞர் நினைவு நாளில் உங்களுக்கு வைக்கிறேன்.
வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! வாழ்க திராவிடம்!
திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு என்றும் இதை சொல்லும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:
Post a Comment