பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்
சென்னை, செப்.3 தமிழ்நாடு முழுதும் பள்ளிகள் 1.9.2021 அன்று திறக்கப்பட்ட நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹோபர்ட் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வு முடித்த பின்பு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தாலும், வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்வது குறித்து எந்த திட்டமும் இதுவரை இல்லை. அப்படி மாற்றினால், குழப்பத்தை தான் கொடுக்கும். அந்த குழப்பத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தேர்வு வரும்போது அதைப் பார்த்து கொள்ளலாம். மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், உடனே பாடங்களை நடத்திவிட வேண்டாம். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக என்ன செய்தார்கள்? அவர்கள் மனநிலை என்ன? என்பது குறித்து பேச சொல்லி இருக்கிறோம். அவர்கள் புத்துணர்வு ஆன பிறகு, பாடங்களை நடத்த அறிவுறுத்தி உள்ளோம்.
ஏற்கெனவே பாடத்திட்டங்களை குறைத்திருக்கிறோம். 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 35 முதல் 50 சதவீதம் வரையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமான பாடங்கள் எதையும் நாங்கள் குறைக்கவில்லை. எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தான் பாடத்திட்டங்களை குறைத்திருக்கிறோம். கரோனா காலத்தில் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு பணத்தை வழங்கினால் தான் தருவேன் என்று கூறக்கூடாது. அப்படி எதுவும் புகார் வந்தால் உடனடியாக அந்த பள்ளியை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுக்கிறோம். 14417 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று ஏற்கெனவே கூறி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment