புனை சுருட்டுகளால் "பூதேவர்கள்" அச்சுறுத்தல் இனி நடக்காது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

புனை சுருட்டுகளால் "பூதேவர்கள்" அச்சுறுத்தல் இனி நடக்காது!

"பிராமணர்களை துன்புறுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும், அவர்கள் பரம்பரையும் கொடூரமான முறையில் அழிந்து போவார்கள் என்பதை உணர்த்தும் ஒரு உண்மைச் சம்பவம் இது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் காதக்கிணறு அருகே அமைந்துள்ள சிறீநடனகோபால நாயகி சுவாமிகள் பிருந்தாவனத்தில் சேவை செய்து வந்த அர்ச்சகரையும், அவரது குடும்பத்தையும் அந்தப் பகுதியை சேர்ந்த சண்டியர் ஒருவன் அர்ச்சகரை கேலி செய்வதும், அவர் வீட்டு மாமியை கேலி செய்வதும், மாமியை தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என்று மிரட்டுவதுமாக துன்புறுத்தி வந்தான். யாரிடம் முறையிட்டாலும் கேட்பாரில்லை. அரசியல் செல்வாக்கையும், பணபலத்தையும் வைத்து அவன் பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்று தற்கொலையாக மாற்றியிருக்கிறான்.

இந்நிலையில் அர்ச்சகர் குடும்பத்திற்கும் குறி வைத்து விட்டான். நிர்க்கதியான நிலையில் அர்ச்சகர். பக்தனுக்காக தூணைப்பிளந்து கொண்டுவந்து அருளிய நரசிம்மரிடம் சங்கல்பம் வைத்து, 48 நாட்கள் உபவாசம் இருந்து, இந்த கொடூரமான அரக்கனை சம்ஹாரம் பண்ண வேண்டிக் கொண்டார் 48ஆவது நாளுக்குப் பிறகும் பகவான் அருள் செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள உத்தேசித்திருந்தார். 48ஆவது நாள் யானைமலை நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு நேர் எதிராக இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறீநடனகோபால நாயகி சுவாமிகள் பிருந்தாவனத்திற்கு முன் நடுரோட்டில் ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரியில் அடிபட்டு அந்த சண்டியர் தலை நசுங்கி உருத்தெரியாமல் அழிந்து போனான். அவனது குடும்பத்தினரும் சொத்துக்காக ஒருவரையொருவர் கொலை செய்து மாண்டு போக, மீதம் இருந்தவர்கள் வந்த விலைக்கு சொத்துக்களை விற்று விட்டு ஊரை விட்டு ஓடிப் போனார்கள். இதை முன்னுதாரணமாக கொண்டு பிராமண அர்ச்சகர்கள் அனைவரும் தாங்கள் சேவை செய்து வரும் திருக்கோவில் தெய்வத்திடம் சங்கல்பம் வைத்து, 48 நாட்கள் உபவாசம் இருந்து, இந்து மதத்தையும், இந்து ஆலயங்களையும், பிராமணர்களையும் அழிக்கத் துடிக்கும் இந்த கொடூரமான அரக்கர்கள் கூட்டத்தை சம்ஹாரம் பண்ண வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் அரக்கர்கள் கூட்டம் அழியும். இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த பிராமணர்கள் அனைவருக்கும் பகிர்ந்திடுங்கள். 'ஜெய் சிறீராம் ஜெய் நரசிம்ஹா'''

இந்திய விமானப் படையில் பணியாற்றினாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவில்லை என்பதற்கு அடையாளம்தான்  இந்தச் சமூக வலைதளச் செய்தி.

இவர் யார் என்பது அதிலேயே குறிப்பிடப் பட்டுள்ளது Srinivasan Subramanian.G - Indian Air Force Veteran, Nationalist Hindu Indian Tamilian Entrepreneur.

பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் ஒரு பார்ப்பனர், பார்ப்பனப் பாதுகாப்பில் எவ்வளவு உயிர்த் துடிப்போடு குதிக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

மதுரையில் நடந்ததாக ஒரு நிகழ்வைப் பூணூல்காரர் கயிறு திரிக்கிறார். எந்த ஒரு தனிப்பட்ட பார்ப்பனரையும் குடும்பத்தாரையும் பெண்களையும் இழிவுபடுத்துவது, வன்முறைப் படுத்துவது என்பது நம்மால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றே.

அதே நேரத்தில் ஒரு பார்ப்பனர் அர்ச்சகருக்கு ஏற்பட்டதாகக் கூறும் கஷ்டத்தால் அதற்குக் காரணமானவர் லாரியில் அடிபட்டார், குடும்பத் துக்குள் கொலை நடந்தது என்பன எல்லாம் பார்ப் பனர்களுக்கே உரித்தான கோயபல்சு தனம்தானே.

சிறீரங்கம் கோயில் கல்யாண மண்டபத்தில் கல்யாணம் நடக்கும் போதே தீப்பிடித்து மண மகனும், உற்றார், உறவினரும் வெந்து மடிந்தனரே - அதன் பின்னணி என்ன? யாரைக் குற்றம் சொல்லப் போகிறார்கள்?

அர்ச்சகர் சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. கடவுளுக்குச் சக்தியிருந்தால் வராமல் தடுத்து இருக்க வேண்டியதுதானே!

அச்சுறுத்தல் - ஆபாசப் பொய்களை அவிழ்த்து விடுதல் - இவை எல்லாம் காலம் கடந்த கந்தாயம். இனியும் அந்தப் பருப்பு வேகாது இது பெரியார் சகாப்தம் என்று பார்ப்பனர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment