அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-17 அறநிலையத்துறைக்குத் தனி வாரியம் கூடாது தற்போதைய நிலையே தொடரட்டும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமை கடந்து வந்த பாதை-17 அறநிலையத்துறைக்குத் தனி வாரியம் கூடாது தற்போதைய நிலையே தொடரட்டும்!

01.10.1991 நாளிட்ட விடுதலையில் பொதுச் செயலாளர் அறிக்கை

கோயில் உபரி நிதிகளை மக்கள் நலப் பணிகளுக்குச் செலவு செய்வதே கால மாற்றத்தையொட்டிய அறப் பணிகளாகும் என்பதே அதன் முக்கிய மாற்றம் ஆகும்.

எடுத்துக்காட்டாக, பழைய காலத்தில் பிராமண போஜனம்  (Feeding Brahmins) என்பது ஒரு முக்கிய தர்மமாக ஆக்கப்பட்டது.அதில்கூட ஏழைப் பார்ப்பனர்களுக்கு என்றுதான் எல்லா தர்ம கட்டளைகளும் குறிப்பிட்டன.

கர்ப்பக்கிரகத்திற்குள் பிற ஜாதியார் நுழைந்து பூஜை செய்துவிட்டால் அதற்குப் பரிகார நடவடிக்கைகளில் ஒன்று பிராமண போஜனம் என்று வைகானச ஆகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இப்போது அறப்பணிகள் என்று சொல்லும்போது அக்கருத்து எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. அதேபோல்தான் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை தோற்றுவிக்கப்பட்டு கோயில்களின் உபரி நிதிகள் மக்கள் நல அறப் பணிகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது.

அறங்காவலரின் பணி என்ன?

அத்துடன் கோயில் அறங்காவலர்களின் பணி என்பது அர்ச்சகர்களின் பூஜை, புனஸ்காரம் போன்ற பணி அல்ல. தணிக்கை அதிகாரிகளின் பணி போன்றதாகும்.

பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம்!

அதற்குப் பிறகு, 1947க்குப் பின் வந்த காங்கிரஸ் ஆட்சிகள் மெல்ல இந்த நிலையிலிருந்து மாறி கோயில்களுக்கு "ஜீரணோத்தாரண பூரண கும்பாபிஷேகம்" செய்து வைத்து சாயமடித்துத் திருப்பணிகள் செய்வதற்கே அந்த நிதிகளைப் பெரிதும் பயன்படுத்த முனைந்தன. குறிப்பாக பக்தவத்சலம் போன்றவர்கள் அறநிலைய அமைச்சர்களாக ஆனநிலையில் பக்தியை வளர்க்கும் பக்தவத்சலம் என்று பார்ப்பன ஏடுகள் தலையங்கம் தீட்டி பாராட்டிடும் அளவுக்குப் பார்ப்பன சடகோபத்துக்கு ஆளான திசை திருப்பம் ஏற்பட்டது!

1967இல் தி.மு.. ஆட்சி, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் ஏற்பட்டபோது அறநிலைய பாதுகாப்புத் துறையின் அமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை நியமித்தார். அவர் சிதம்பரம் நடராசன் கோயிலுக்கு அறநிலையப் பாதுகாப்பமைச்சர் என்ற முறையில் சென்றபோது, வழங்கப்பட்ட விபூதியைக் கூட நெற்றியில் பூசிக்கொள்ளாமல், பக்கத்தில் இருந்தவரிடம் தந்து விட்டார்.இதை அவர் வீசி எறிந்தார் என்று கூறிக்கூடத் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள். அன்று மாலை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேசிய நாவலர், அறநிலையப் பாதுகாப்பமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் தில்லை நடராசர் கோயிலுக்குச் சென்றேனே தவிர, தனிப்பட்ட நெடுஞ்செழியனாக அல்ல. அறநிலையப் பாதுகாப்பமைச்சர் வேலையும்கூட 8 மரக்கால் சமைத்துப் போடவேண்டும் என்று சொல்லப்பட்டால் அதில் 6 மரக்கால் போட்டுவிட்டு மீதி உள்ள 2 மரக் கால் வேறுவழியில் எங்காவது போகிறதா என்று பார்த்து கண்காணித்து ஆட்சி புரிவதுதான் என்று பேசினார்.

இது விடுதலையில் வெளிவந்தவுடன் இதைப் படித்துவிட்டு தந்தை பெரியார் அவர்கள் பலே நெடுஞ்செழியன் பலே பலே என்று ஓர் அறிக்கை எழுதினார். நீண்டதொரு தலையங்கமும் எழுதினார். ஈரோட்டில் கோயில் தேவஸ்தான பிரசிடெண்டாக, தான் இருந்தபோது எப்படி எல்லாம் கோயில் வருமானத்தை அதில் உள்ள ஓட்டைகளைத் தடுத்து, சேமித்து பற்றாக்குறையை உபரியாக்கினேன் என்று எழுதி விளக்கியிருந்தார்கள்.

.தி.மு.. ஆட்சியில் கொஞ்சக் காலத்திற்கு அறநிலையப் பாதுகாப்புத் துறை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களது பொறுப்பில் இருந்தது. அதற்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் அவர்களது பொறுப்பில் சென்றது.

சங்கரமடத் தொடர்பின் விளைவு

அது முதற்கொண்டு காஞ்சி சங்கரமடத்தின் கருத்திற்கேற்ப செயல்படும் தன்மை ஏற்பட்டதன் தொடர் விளைவு - இன்று கோயில் பராமரிப்பு நிதியை, இன்றுள்ள முதலமைச்சர் அவர்கள் துவக்கியுள்ளதன் தொடர்ச்சி, இப்போது வேத ஆகமக் கல்லூரியை ஒரு கோடி ரூபாய் செலவழித்து ஏற்படுத்தி, சமஸ்கிருதத்தில் உள்ளதைத் தமிழில் மொழி பெயர்க்கப்படும் என்றெல்லாம் கூறப்படும் நிலைக்குச் சென்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் வேதாகமப் பள்ளிகள்

சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறநிலையப் பாதுகாப்பு மானியத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் (1991-1992) வேத ஆகம பாடசாலைகள் - 4 ஏற்கெனவே நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1982ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமன முறைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்த ஜஸ்டிஸ் மகராஜன் குழுவின் அறிக்கையில் - தமிழ்நாட்டில் சில பெருங்கோயில்கள் சார்பில் வேத ஆகம பாடசாலைகள் நடைபெறுகின்றன என்று, கோயில் நிதி உதவியினால், அறங்காவலர்களின் மேற்பார்வையில் அவை நடைபெறுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி நடைபெற்ற வேத ஆகம பாடசாலைகள் 6 என்றும், ஒவ்வொரு வேத ஆகம பாடசாலையிலும் பயிற்சிக் காலம் 5 ஆண்டு. ஆனால், அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருவரே உள்ளனர். ஒருவர் வேதத்திற்கு; இன்னொருவர் ஆகமத்திற்கு  சில பாடசாலைகளில் தேவாரமும் கற்பிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளர்ச்சிக்கு வழி வகுக்கும்!

இதனையொட்டி வேதாகமக் கல்லூரிக்கு ரூ.1 கோடி என்று ஒதுக்கி அதன்மூலம் சமஸ்கிருத மயமாக்கி பார்ப்பனர் ஆதிக்கம் செலுத்த ஒரு ஜாதி அர்ச்சகர்களையே பயிற்றுவித்தல் என்ற நிலைக்கு வித்திடுவதாக இருப்பின், அது நாட்டில் நிச்சயம் பெரும் புயலைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை; நமது வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும். கிளர்ச்சிக்கும் வழி வகுக்கும்!

அதுபற்றிய தமிழ்நாடு அரசின் நிலை மிகவும் தெளிவாக்கப்படுதல் அவசர அவசியமாகும்!

ஜஸ்டிஸ் மகராஜன் குழு அறிக்கையின் பரிந்துரை

ஜாதி வேறுபாடு இன்றி அனைத்து ஜாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதும் மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல. ஜஸ்டிஸ் மகராஜன் குழு பரிந்துரையில், தமிழ்நாட்டுக் கோயில்களின் பெரும் எண்ணிக்கையையும் கருதி, சில ஆகமப் பயிற்சிக் கல்லூரிகளையேனும் அறநிலையத் துறை பொறுப்பேற்று நடத்திவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனைச் செயல்படுத்த ஏற்கெனவே இருந்த .தி.மு.. அரசு சட்டப் பேரவையில், இதே அறநிலையப் பாதுகாப்புத் துறையில் மானியக் கோரிக்கையின்போது பழனியில் ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேதங்களைப் பரப்புவதற்கு என்று ரூ.1 கோடி ஒதுக்குவோம் என்பதை மாற்றி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக, ஆகமங்கள் சொல்லிக் கொடுக்க மகராஜன் குழு பரிந்துரைத்தபடி, குறைந்தபட்சம் 6 இடங்களில் அமைப்பது சரியாக இருக்கும்! ஆகமக் கல்விப்படி பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமித்தால், அது உச்சநீதிமன்றத்தின் பழைய தீர்ப்புப்படி செல்லுபடியாகும். சிலர் எதிர்த்து மீண்டும் அங்கே படையெடுத்தால்கூட!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தற்போது அறிவித்துள்ள சில அறிவிப்புகளை மாற்றி, ஒரு பெரும் சமுதாய மாற்றத்திற்கு இந்து அறநிலையத் துறையும் பயன்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

பார்ப்பன ஆதிக்கத்திற்கு வித்திடவே இந்த வேத ஆகமக் கல்லூரி என்ற நியாயமான அய்யப்பாட்டினை அறவே நீக்கிடவும் இந்த மாற்று ஏற்பாடு உதவும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், இந்து அறநிலையத் துறையை அரசின் கீழ் இல்லாமல் தனியே ஒரு அமைப்பாக ஆக்குவது என்ற முடிவானது, அதன் துவக்க அடிப்படையையே மாற்றி அமைக்கும் மிகப்பெரிய கேடான செயலாகிவிடும். அதற்காக மாநில அரசேகூட பிறகு வருந்தக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கவும் விரும்புகிறோம்.

- கி.வீரமணி,

பொதுச் செயலாளர்,  திராவிடர் கழகம்,

விடுதலை 01.10.1991

அர்ச்சகர் பிரச்சினையும் - வேதாகமக் கல்லூரியும் என்னும் பொருள் பற்றிய சிறப்புப் பொதுக்கூட்டம் 02.11.1991 அன்று இரவு 7 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தென்மாநில சமூக நீதிக்குழு அமைப்பின் தலைவரும் தமிழ்நாடு மூதறிஞர்கள் குழு தலைவருமான நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.

அடுத்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது பற்றியும், வேதாகமக் கல்லூரி பற்றியும் சிறப்புரையாற்றினார்.

09.04.1992 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் மீது உரையாற்றிய தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இந்தக் கல்லூரியில் வேதங்கள், ஆகம சாஸ்திரங்கள், உபநிடதங்கள், பன்னிரு திருமறைகள், மற்றும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்கள் ஆகிய வற்றைக் கற்பிப்பதற்கான பாடத் திட்டங்களையும், பிரிவுகளையும் உருவாக்குவது பற்றி 02.03.1992 அன்று நடைபெற்ற கோயில் நிர்வாக வாரியக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இதுகுறித்து கருத்துகளையும், ஆலோசனை களையும் வழங்குமாறு வாரிய உறுப்பினர்களும், சமயச் சான்றோர்களும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில், ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும் அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் தற்போது பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும். இடஒதுக்கீட்டு முறை அதாவது ஆதிதிராவிடர்களுக்கு 18 விழுக்காடு இடங்களும், பழங்குடியினருக்கு ஒரு விழுக்காடு இடங்களும், பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடு இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இடங்களும் ஒதுக்கப்படும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

1991-1996 காலகட்டத்தில் ...தி.மு.. ஆட்சியில் இருந்தபோது, 1996-இல் திருச்சி மாவட்டம் கம்பரசன்பேட்டையில், அர்ச்சகர் பயிற்றி தொடங்கப்பட்டு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.

(தினமணி - 24.01.1996)


No comments:

Post a Comment