திராவிடர் கழக தலைமைச் செயற்குழு, மாநில செயலாளர்கள், மண்டல, மாவட்டக் கழகத் தலைவர், செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை (4.9.2021) சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் இரங்கல் தீர்மானம் உள்பட 8 முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கால கட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் இவை:
தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நாடு தழுவிய அளவில் கொண்டாடுவது என்பது, பெரியாருக்காக அல்ல - புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சம அளவில் எடை போடக் கூடிய மகத்தான தலைவர் அவர்.
"என்னை 'வாழ்க!' என்பதற்காக நான் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், என்னை 'ஒழிக' என்று சொன்னவர்களும் அதிகம் உண்டே - அதற்காக நான் வருத்தப்பட நேரிடுமே" என்ற தனித்த சிந்தனையாளர் தத்துவத் தலைவர் தந்தை பெரியார்!
அறிவு ஆசான் அய்யாவுக்கு பிறந்த நாள் விழா என்பதன் நோக்கமே - அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதும் - சூழ்ந்து வரும் பிற்போக்கு வாதங்களை - அவர் யாத்த பகுத்தறிவுப் பேராயுதம் கொண்டு வீழ்த்தவுமான உணர்வுகளை உண்டாக்குவதற்காகத்தான்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தை தந்தை பெரியார் முன்னெடுத்ததற்குக் காரணம் - கடவுள் நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல - மாறாக கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகர்களாக உரிமை கிடையாது; காரணம் அவர்கள் சூத்திரர்கள் - பஞ்சமர்கள் - பிறப்பின் அடிப்படையில் இழிந்தவர்கள்; அவர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் அது தீட்டுப்பட்டு விடும், சாமி செத்துப் போய்விடும் என்று சொல்லும் ஒரு நிலை தாண்டவமாடுவதை மனித உரிமையில் அக்கறையும் சமத்துவத்தில் கவலையும் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
பிறவியில் உயர்வு - தாழ்வு கூடாது என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்டம் - கோயிலுக்குள் நிலவும் இந்தப் பிறப்பின் அடிப்படையிலான இழி நிலையை எப்படி அனுமதிக்கிறது?
அதனால்தான் தந்தை பெரியார் இறுதியாக சென்னையில் நடத்திய மாநாட்டுக்குக்கூட 'தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு' என்று பெயர் சூட்டினார். தந்தை பெரியார் இறுதியாக - மரண சாசனம் போல 1973 டிசம்பர் 19இல் சென்னை தியாகராயர் நகரில் ஆற்றிய உரையில்கூட இன இழிவு ஒழிப்பை முன்னிலைப் படுத்திப் பேசினார். 'உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டு விட்டு சாகப் போகிறேனே!' என்று குமுறினார்.
தந்தை பெரியார் அவர்களின் அந்த இழிவு ஒழிப்புப் போராட்டம் - திராவிட ஆட்சியாம் தி.மு.க. ஆட்சியில் வெற்றிவாகை சூடியது.
'அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை' என்ற திசையில் 58 பேர் கோயில்களில் பணியாற்றிட மானமிகு, மாண்புமிகு முதல் அமைச்சர் தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், தமது ஆட்சியின் நூறாம் நாளில் பணி நியமன ஆணையை நேரில் வழங்கி, முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் - அவருக்கே உரித்தான மொழியில் சொல்ல வேண்டுமானால் - தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை அகற்றினார்.
இதன் பின்னணியை இளைஞர்களுக்கும் வரும் தலைமுறை யினருக்கும் தெரிய வைக்க வேண்டாமா? இந்த மகத்தான மனித உரிமை - ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கொள்கையைக்கூடக் கொச்சைப்படுத்தும் பேர் வழிகளின் முகத்திரையைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிய வேண்டாமா? அதற்குத்தான் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா என்ற பெயரில் நடக்கும் பரப்புரையாகும்.
பெரியார் ஒரு கட்சிக்காரருக்கு மட்டும் சொந்தமானவரல்ல, ஓட்டு மொத்த இனத்திற்கே பொதுவான தந்தை, குன்றக்குடி அடிகளாருக்கும் தலைவர்தான்! சமூகநீதி, சமதர்மம், சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு, பொதுவுடைமை, பொதுவுரிமை, பெண்ணுரிமை, மானுட உரிமை விரும்பும், கோரும் அனை வரையும் ஈர்க்கும் மய்யப் புள்ளி, 'வசீகரிக்கும்' - ஈர்க்கும் காந்தமும் அவரே! இந்தத் துறைகளில் பெற்ற வெற்றி, அந்த வெற்றியால் சுவாசிக்கும் பயன் பெற்று வாழும் அனைவரின் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தவும், பெற்ற உரிமைகளைப் பேணிக் காக்கவும் - இவற்றிற்கு அவ்வப்போது ஏற்படும் எதிர்ப்புகளை வீழ்த்துவதற்கும் தந்தை பெரியார் ஊட்டிய கொள்கைகளுக்கு உணர்வுகளும் என்றும் தேவைதானே.
அதன் கூர் மழுங்காமல் நீட்டித்து தொடரவும், பத்திரப்படுத்தி வைக்கவும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா என்பது தேவை! தேவையே!
பிறக்காத கடவுளுக்கே பிறந்த நாள் விழா கொண்டாடும் (இராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி) நாட்டில், உண்மையிலேயே பிறந்து உண்மையாகவே உழைத்து, உருக்குலைந்து போன சமூகத்தின் மீட்சிக்குக் காரணமான தலைவர் தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளை என்றும் - எங்கும் கொண்டாடு வோம் - கொண்டாடுவோம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
No comments:
Post a Comment