எப்போது கேட்டாலும், எதற்கெடுத்தாலும் தங்களிடம் புள்ளி விவரங்கள் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

எப்போது கேட்டாலும், எதற்கெடுத்தாலும் தங்களிடம் புள்ளி விவரங்கள் இல்லை என்று ஒன்றிய அரசு கூறுவதா?

  சீமா காந்தி

(முக்கியமான பிரச்சினைகள் என்று வரும்போது, அவற்றுக்கான புள்ளி விவரங்கள்  தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு தொடர்ந்து அறிவித்து வருவது,  மிகப் பெரியதொரு அரசியல் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதேயகும்.)

அரசின் மீது மோசமான வெளிச்சத்தைப் போட்டுக் காட்டும் பிரச்சினைகளிலோ அல்லது மாற்று உண்மைகளை அரசு முன்வைக்கும்போதோ, தங்களிடம் அவற்றிற்கான புள்ளிவிவரங்கள் இல்லை என்று கூறுவது நரேந்திர மோடியின்  ஒன்றிய அரசுக்கு வாடிக்கையாகவே ஆகிப் போய்விட்டது. 2020 மார்ச் மாதம் 24 ஆம் தேதியன்று திடீரென்று ஊரடங்கு சட்டம் பிரகடனம் செய்யப்பட்டபோது, மிகமோசமான முறையில் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட புலம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு நடைப் பயணம் மேற்கொண்டது உலக ஊடகங்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 4 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பணிகளை இழந்தனர் என்று உலக வங்கி அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால்,  எவ்வளவு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பணிகளை இழந்தார்கள் என்று முதலில் ஒன்றிய அரசைக் கேட்டபோது, அரசு அளித்த பதில் தங்களிடம் அதற்கான புள்ளி விவரங்கள் இல்லை என்பதே. கோவிட்-19  நோய்த் தொற்று காரணமாக 2020 செப்டம்பர் மாதத்தில் எத்தனை களப்பணி சுகாதாரப் பணியாளர்கள்  இறந்தார்கள் என்று கேட்கப்பட்டபோதும் தங்களிடம் அதற்கான புள்ளி விவரங்கள் இல்லை என்று அப்போதைய சுகாதார அமைச்சரகம் அறிவித்தது.

நுகர்வோரின் நுகர்பொருள் புள்ளி விவரங்களும் இதர வழக்குகளும்

தேசிய புள்ளி விவர அலுவலகத்தினால் 2017-2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அகில இந்திய குடும்ப நுகர்பொருள் செலவு பற்றிய ஆய்வின் முடிவுகளை வெளியிடப்போவதில்லை என்று புள்ளி விவரம் மற்றும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைச்சரகம், கரோனா தொற்று நோய் பாதிப்பு தொடங்குவதற்கு வெகு காலத்துக்கு முன்னமேயே  முடிவு செய்துவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே வெளி வந்திருக்க வேண்டும். ஆனால் அந்த முடிவுகள் கிடைத்த பிறகும் கூட அவற்றில் புள்ளிவிவரத் தரப் பிரச்சினைகள் இருக்கின்றன என்ற சாக்கினைக்  கூறி அரசு அப் புள்ளி விவரங்களை வெளியிடாமல் இருந்தது. 1972-1973 ஆம் ஆண்டு  இதற்கான புள்ளி விவரங்கள் திரட்டப்பட்டு வந்தது முதல், முதல் முறையாக குடும்பங்களின் நுகர்பொருள் செலவினம் மிகப் பெரிய அளவில் சரிந்து போயிருந்தது என்று அரசின் புள்ளி விவரங்களில் இருந்து கசிந்த புள்ளி விவரங்கள்  தெரிவிக்கின்றன என்பது கவனிக்கத் தகுந்த ஒரு செய்தியாகும்.

புள்ளி விவரங்கள் இல்லை என்ற அரசின் அறிவிப்புகள் இந்த ஆண்டும் தொடர்ந்து வெளியிடப் பட்டு வந்துள்ளன. மனிதக் கழிவுகளை அகற்றும் மனிதர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ் வளவு என்று கேட்கப்பட்டபோது,  தங்களிடம் அதற்கான புள்ளி விவரங்கள் இல்லை என்று  நாடாளு மன்றத்திற்கு அரசு கூறியிருந்தது. கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாம் அலைவரிசைத் தாக்கு தலின்போது, ஆக்சிஜன் இல்லாததால் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி கேட்கப்பட்டபோது, தங்களிடம் அது பற்றிய விவரங்கள் இல்லை என்று அரசு கூறியது. விவசாயிகளின் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை பற்றி கேட்கப்பட்ட போது, அது பற்றிய புள்ளி விவரங்கள் தங்களிடம் இல்லை என்றே அரசு சாதித்தது. உலகிலேயே வேறெந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாதவாறு சரித்திரம் படைக்கும் அளவில் இன்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் இந்தியாவில் ஏற்பட்ட பொரு ளாதார இழப்பு பற்றி கேட்கப்பட்ட போதும், தங்களிடம் அது பற்றிய புள்ளி விவரங்கள் இல்லை என்றே அரசு பதில் கூறியது. தடுப்பூசி மருந்து பற்றாக் குறையால் பல தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டதை அனைவரும் நன்று அறிந்திருந்த நேரத்தில் கூட, நாடாளுமன்றக் கேள்வி ஒன்றிற்கு ஜூலை 20 அன்று மாநிலங்கள் அவையில் அளித்த எழுத்து மூலமான பதிலில், தடுப்பூசி மருந்து பற்றாக்குறை எதுவும் இல்லை என்று சுகாதார இணையமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு பரப்புரையைக் கட்டமைக்க இயன்ற ஆற்றலை அரசு நன்றாகவே புரிந்து கொண்டிருக்கிறது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில்  ஒலிக் கற்றைகள்  விற்கப்பட்டதன் மூலம் அரசுக்கு 1 . 76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்ற கற்பனையிலான புள்ளி விவரங்களைப் பயன் படுத்தி மிகுந்த திறமையுடன் கட்டமைக்கப்பட்ட பரப்புரையின் ஆற்றல் இதற்கு ஒரு சரியான எடுத்துக் காட்டாகும். எந்த ஒரு புள்ளி விவரமும் முக்கியமானது அல்ல என்று ஏன் அரசு கூறுகிறது என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்பட்ட தீவிரமான முயற்சிகள்  காரணமாக, அது ஒன்றும் ஒரு சாதாரணமான விஷயம் அல்ல என்பதும், ஒரு மிகப் பெரிய அரசியல் செயல்திட்டத்திற்கு மிகவும் இன்றியாமையாதது என்பதும் தெரிய வருகிறது.

ஒன்றிய அரசு தங்களது பொறுப்பைக் கைகழுவி விடல்

எந்த புள்ளி விவரமும் பராமரிக்கப்படக்கூடாது என்பதற்கான முதல் காரணம் புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிதானது. மிகமிக உயர்ந்த அளவில் குறைத்துக் காட்டப்பட்டதாக இருந்தாலும் கூட, அதனைப் போன்ற எந்த ஒரு புள்ளி விவரம் இருப்பதாக அரசு ஒப்புக் கொண்டால், நாட்டின் விவகாரங்களில் குழப்பமும் சீரழிவும் ஏற்பட்டதற்காகப் பொறுப்பேற்று பதில் கூறவேண்டிய ஒரு நெருக்கடியினை அரசு தனக்குத்தானே உருவாக்கிக் கொள்வதற்கு சமமானதாகும். நாடு முழுவதிலும்   அரசு விளம்பரங்களில் இருந்த அச்சி டின் (Acche Din) என்பதற்கு பதிலாக நன்றி மோடிஜி  (Thank You Modiji)  என்ற வாசகம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசாட்சியை ஒட்டு மொத்தமாக தனிப்பட்ட ஒரு வருடையது என்று குறிப்பதாகும் இது.  இதில் எதிர் மறை சூழல் ஏதேனும் ஏற்பட்டால்,  அரசு ஏதேனும் தவறு செய்தால், தொடர்ந்து தங்களது சாதனைகள் பற்றி பெருமை பேசிக் கொள்ளும் இந்த மய்யமாக்கப் பட்ட இயந்திரத்தின் தவறே அது என்பதாக ஆகி விடும்.

அரசாட்சியின் முக்கியமான குறியீடுகள், வினி யோகப் பிரச்சினைகள் மற்றும் மக்களுக்கு முக்கிய மானதாக உள்ள பிரச்சினைகள் - அது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றியாகட்டும்,  முன்பை விட மக்கள் குறைந்த அளவு உணவு உண்பது பற்றியாகட்டும், பசி அதிகரித்து வருவது பற்றியாகட்டும்,  கோவிட்-19 தொற்று நோயைத் தவறான முறையில் கையாண்டது பற்றியாகட்டும் அல்லது தடுப்பூசி கொள்கையை அரைகுறையாக நடைமுறைப் படுத்தியது பற்றியாகட்டும் - இவை அனைத்துக்கும் அரசை பொறுப்பாக்காமல் வைப்பதே அதன் நோக்கம். இந்த விவரங்கள் எல்லாம் அரசுக்கு தெரிந்து இருக்கிறது என்றால், அவற்றிற்கெல்லாம் அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அரசு அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை என்று கூறினால், பேச்சளவில் எவர் ஒருவரும் இறந்துவிடவில்லை  என்றோ அல்லது எவர் ஒருவரும் வேலையை இழந்துவிடவில்லை என்றோ, அத்தகைய தவறுகள் ஏதும் நடைபெறவே இல்லை என்றோ அரசு பாவனை செய்து கொள்ளலாம்.

தவறுகளுக்கான பொறுப்பு மாநில அரசுகள் மீது சுமத்தப்படுதல்

உண்மைகளையோ, புள்ளிவிவரங்களையோ அரசு ஒப்புக் கொள்ளாமல் இருப்பதற்கான இரண்டாவது காரணம் ஒன்றிய அரசை தொடர்ந்து நின்று எதிர்த்து சவால் விட்டுக் கொண்டிருக்கும் மாநில அரசுகள் மீது தவறுகளுக்கான பொறுப்பை சுமத்துவது என்ற அதன் கொள்கையும் நிலைப்பாடும் தான். மாநில அரசுகளுக்கு சேரவேண்டிய வரி வசூலின் பங்குத் தொகை  கடந்த அய்ந்தாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது மிகமிகக் குறைந்து போயுள்ளது. குடிமக்களைத் தொடர்ந்து மதி மயக்கம் கொள்ளச் செய்து வைத் திருப்பது, அதிகாரங்களை ஒன்றிய அரசு மயமாக் குவது, தவறுகளுக்கு பொறுப்பேற்காமல் கைகளைக் கழுவி விட்டுவிடுவது ஆகியவை ஒன்றிய அரசுக்கு மிகமிக முக்கியமானவையாகும். புள்ளி விவரங் களையோ அல்ல தவறுகள் பற்றிய செய்திகளையோ ஒப்புக் கொள்வது ஒன்றிய அரசின் செயல்திட்டத்தைத் தடம் புரளச் செய்து விடும் என்பதால், மாற்று உண்மைகளை உருவாக்குவது என்பது ஒன்றிய அரசுக்கு மிகமிக முக்கியமானதாகும். பொறுப்பைத் தட்டிக் கழிப்பது என்ற வரையறைக்குள்தான் அது இருக்க வேண்டும் என்ற தேவையில்லை என்பதுடன், மிகமிக முக்கியமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதும் தேவை யானது. அதனால்தான் சுகாதாரம் என்பது மாநில அரசின் அரசமைப்பு சட்டப் படியான பொறுப்பு என்பதை பல்வேறு வழிகளில் கூறப்படுவதை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆக்சிஜன் பற்றாக் குறையால் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் தராததாலேயே அது  பற்றிய புள்ளி விவரங்கள் தங்களிடம் இல்லை என்று மக்களுக்கு ஒன்றிய அரசால்  சொல்லப்படுகிறது. மாநில அரசுகள் அதற்கு பொறுப்பில்லை என்றால்,  அரசியல் எதிர்க்கட்சிகள் மீதோ அல்லது கடந்த கால ஆட்சிகள் மீதோ ஒன்றிய அரசு அத்தவறுகளுக்கான பொறுப்பை சுமத்தும்.

தவறுகளுக்குப் பொறுப்பேற்று பதில் கூறுவதை நேரடியாக தவிர்ப்பதற்காக மட்டுமன்றி,  தொடர்ந்து புள்ளி விவரங்கள் ஏன் பேணப்படுவதில்லை என்பதற்கான காரணம் அக்காலங்களின் சரித்திரத்தை   பின் நாட்களில் மாற்றி எழுதுவதற்கு ஆட்சியாளர்களை அது அனுமதிக்கிறது என்பதுதான். இது சரித்திரத்தை மாற்றி எழுதுவதல்ல; ஆனால் நிகழ்கால நிகழ்வுகளைப் பற்றி  எதிர்காலத்தில் என்றேனும் ஒரு நாள்  எழுதுவதற்கான ஆற்றலை தன்னிடம் தக்க வைத்துக் கொண்டிருப்பது பற்றியது அது. தேசிய சுகாதார செயல்திட்ட மேலாண்மைத் தகவல் நடைமுறையின் மிகமிக முக்கியமான சுகாதார தகவல் நடைமுறை அண்மையில் காணாமல் போனது. இது பற்றி புள்ளி விவரங்களை கண்காணிப்பவர்கள் உருவாக்கிய ஆரவாரம் காரணமாக அந்தப் புள்ளி விவரங்கள் இணையதளத்தில் மீண்டும் சேர்க்கப் பட்டன.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட சாவுகளைப் பற்றி எந்தவித  புள்ளி விவரங்களும் அளிக்கப்படாததைப் பற்றி சிறிது நினைத்துப் பாருங்கள். பொது மக்களின் நினைவாற்றலை அந்த அளவுக்கு மட்டுமே  வைத்திருப்பதற்கு செய்தி சுற்றுகள் அனுமதிக்கின்றன. கோவிட்-19 நோய்த் தொற்றின் இரண்டாம் அலைவரிசையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய கதையை, அதன்மீதான புள்ளி விவரங்களை வெளியிடாமல் நிறுத்திக் கொண்டால்,  ஓராண்டு காலத்தில் அதை புதினமாக எழுதுவது முற்றிலும் இயலக் கூடியதே யாகும். அதனைப் பற்றிய புள்ளிவிவரங்கள் இப்போது அளிக்கப்பட்டால், மோசமானதொரு தோல்வியை வெற்றி என்று கூறி விற்பனை செய்வதற்கான வீச்சில் பறக்கும் தளத்தை அது குறுக்கி விடுகிறது.

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயுள்ள புள்ளிவிவர இடைவெளி

தகவல் என்பது ஒரு ஆற்றல். தகவல் பெற்றிராமல் இருப்பது என்பதுஆற்றல் இல்லாமல் இருப்பதாகும். அரசுக்கும் மக்களுக்குமிடையே ஒரு மாபெரும் தகவல் இடைவெளி வளர்ந்து கொண்டே வருகிறது. ஆதார் திட்டத்தின் கீழ் அடையாளம் கண்டு கொள் வதற்கு, தொழில் நுட்பத்தினால் செயல்படுத்தப்படும், இதற்கு முன் எப்போதும் கட்டமைத்திராத அளவி லானதொரு கட்டமைப்பை அரசு கட்டமைத்துக் கொண்டிருந்தது. மக்கள் தங்களது உணவுப் பொருள் ரேஷனைப் பெறுவதற்கு முன்னதாகவே ஆதார் திட்டத்திற்கான பயோமெட்ரிக் புள்ளிவிவரங்களை மக்களிடம் இருந்து பெறுவதற்கு அரசு விரும்பியது. அவ்வாறு செய்வதற்கு சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறையை உருவாக்குவதற்கு முன்னதாகவே மக்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுவதற்கான கருவிகளைப்  பயன்படுத்த இயன்றதாக இருக்க வேண்டும் என்று அரசு விரும்பியது. மிகப் பெரிய அளவில் பொதுமக்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு ஒற்றறியும் செய்தி பற்றிய உண்மை  எட்வர்ட்ஸ்னோடன்னினால் அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு முகமையால் உலக அளவில் வெளிப்படுத்தப்பட்ட போதும் கூட தங்களது புள்ளி விவரங்கள் இல்லை என்ற நிலையையே  கடைப்பிடித்து வந்த இந்திய அரசு, ஆதார் திட்டத் தின்படி பெறவேண்டிய புள்ளி விவரங்களை மக்களிட மிருந்து பெறுவதற்கே விரும்பியது. மக்களை அறியாமை என்ற இருட்டில் வைத்துக் கொண்டு, அதே நேரத்தில் மற்ற ஒவ்வொருவரைப் பற்றியும் அனைத்து விவரங்களையும் பெறுவதற்கான ஆட்சியாளர்களின் ஆற்றல் அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றம் போன்றதொரு அரசமைப்பு சட்டப்படியான அவையில், தங்களிடம் புள்ளி விவரங்கள் ஏதுமில்லை என்று  முகத்துக்கு முகம் நேரடியாகவும் ஆவண பூர்வமாகவும் கூறுவதற்கான ஒரு குறிப்பிட்ட துணிவினை அரசு பெற்றிருந்தது. மறுக்கப்பட இயலாத அரசு அதிகாரம் மற்றும் கட்டுப்பாடற்ற ஆற்றலை வெளிப்படுத்தியதின் மூலம், பலம் நிறைந்ததொரு ஆட்சியாளர் என்ற தோற்றத்தை பொது மக்களுக்கு அளிப்பதற்காகவே அது உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது. தங்களிடமுள்ள புள்ளி விவரங்களை குடிமக்களுடன் அரசு பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது, அரசுக்கும் மக்களுக்கு மிடையேயான அதிகார சமன்பாட்டை  மீண்டும் மாற்றிக் கூறுவதற்கு உதவும்  என்பதால், அரசு தங்களிடம் உள்ள புள்ளி விவரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கிறது. தகவல் பெறும் தங்கள் உரிமையைப் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் அரசிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கு முயலும்போது, அவர்கள் வழக்கம்போல பெறுவது இந்த தகவல் மறுப்பு மற்றும் தகவல் திரிபுகளைத்தான். இல்லாவிட்டால், ஆட்சியாளர் களிடம் உள்ள ஒட்டு மொத்த அதிகாரக் குவிப்பும் நீர்த்துப் போகச் செய்யப்படும் என்பதால், அரசினால் இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்படவோ, பகிர்ந்து கொள்ளவோ அல்லது எளிதாகக் கிடைக்கும்படியோ செய்ய முடியாது.

சில நேரங்களில் இறந்து போன குடிமக்களும் கூட பேசத் தொடங்கி விடுகின்றனர். கோவிட்-19 தொற்று நோயின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, அரசிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ உதவி கிடைக்காமல் இறந்து போன  ஏழை மக்களை அவர்களது உறவினர்கள் கங்கைக் கரையில் புதைத்துக் கொண்டிருந்தபோது, அத்துடன் அந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என்றே எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வாறு சடலங்கள் கங்கைக் கரையில் புதைக்கப்பட்டதை அரசு மறுத்த போதிலும்,   அப்போது மழை பெய்தது  அரசுக்கு உதவுவதாக இருக்கவில்லை. ஜூலை 30 அன்று அலகாபாத் நகரின்  பாபமாவி புறநகர்ப் பகுதி கங்கை ஆற்றங்கரையில்  புதைக்கப்பட்ட 60 க்கும் மேற்பட்ட  சடலங்கள் கங்கைத் தண்ணீரில் மிதக்கத் தொடங்கிவிட்டன. அன்று இரவு இறந்தவர்களின் ஈமச் சடங்குகளை செய்வதற்கான நிர்ப்பந்தம்  உத்தரப் பிரதேச அரசுக்கு ஏற்பட்டது.

குடிமக்கள் முன் உள்ள சவால்

ஆனால் அவையெல்லாம் விதிவிலக்கான மற்றும் நாடகத்தனமான சூழ்நிலைகளாகும். முடிவில் மக்களுக்குக் கிடைத்த உண்மையான அனுபவம் என்னவென்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்து போன அல்லது கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான மருத்துவ உதவி கேட்டு பிச்சை எடுப்பது போல கெஞ்சியும் உதவி கிடைக்காமல் இறந்து போன  நோயாளிகளின்  குடும்பத்தினர், உற்றார் உறவினர் இறந்து போனது பற்றி அரசு கூறும் கட்டுக் கதைகளை மறுத்து சவால் விடவேண்டும்.   பல அமைப்புகளும், ஊடகத்தின் ஒரு பெரும் பகுதியினரும் அரசின் ஊதுகுழல்களாக மாறிவிட்ட ஒரு சூழ்நிலையில், அரசு கூறும் கதைகளுக்கு எதிராக தங்கள் சொந்த அனுபவக் கதைகளை நினைவில் வைத்துக் கொண்டு கூறவேண்டும் என்று மக்களைக் கேட்பது  என்பது  மிக  உயர்ந்த அளவிலானதொரு கட்டளையே ஆகும்.

நாட்டில் ஓர் அரசியல் கோட்பாட்டின் அம்சமாக இருப்பது புள்ளி விவரங்கள் தருவதற்கு அரசு மறுப்பது மட்டுமல்ல.  பெரும்பாலான குடிமக்கள் அவர்களது காலத்திய உண்மையைப் பற்றி அறிந்தவர்களாக இல்லாமல் இறந்தவர்களாக இருக்கக் கூடும் என்றதொரு சூழ்நிலையில், அவர்கள் விடவேண்டிய சவால் உண்மையை அங்கீகரிப்பதும் அதனைஅறிந்து கொள்வதற்கான கோரிக்கையை  சற்றும் தயக்கமின்றி முன்னெடுத்துச் செல்வதுமாகும். அது ஒரு நீண்ட பயணம் மேற்கொள்வதற்கான சாலையைப் போன்றது. ஆனால், ஜனநாயக நடைமுறை தரத்தின் உண்மையான அடிப்படையாக விளங்குவது  உண்மை நிறைந்த தகவல்கள்தான்.

நன்றி: 'தி இந்து' 19-08-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment