பெரியாரியல் பயிற்சி வகுப்பு இரண்டாம் நாள் நிறைவு விழாவில் மகளிரின் வினாக்களும், கருத்துகளும்; ஆசிரியர் அவர்களின் விடைகளும், வாழ்த்துகளும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 6, 2021

பெரியாரியல் பயிற்சி வகுப்பு இரண்டாம் நாள் நிறைவு விழாவில் மகளிரின் வினாக்களும், கருத்துகளும்; ஆசிரியர் அவர்களின் விடைகளும், வாழ்த்துகளும்

சென்னை, செப். 6- மகளிருக்கான சிறப்பு பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் சென்னை, திருவாரூர், காரைக்கால், மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், அரியலூர், கோவை, ஈரோடு, சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய பன்னிரெண்டு மண்டலங்களுக் கான பயிற்சி வகுப்பு நிறைவு விழா 01.08.2021 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் .இன்பக்கனி தலைமையில் நடைபெற்றது. விழாவின் நிறைவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுச்சிமிகு நிறைவுரை ஆற்றினார்.

இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற சில மகளிர் தோழர்களின் கருத்துகள் வருமாறு:-

ரேவதி, சென்னை மண்டலம்:

பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பத்து நாட்கள் கலந்து கொண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மானமிகு அய்யா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு  நன்றிகள். இந்த பத்து நாள் பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்த துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி, மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள்  எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன். இந்த பத்து நாட்கள் வகுப்பு மிகச் சிறப்பாக இருந்தது. பத்து நாட்களும் பத்து விதமான தலைப்புகளில் ஆசிரியர்கள் மிகவும் திறம்பட நடத்தி, நாங்கள் எந்த சந்தேகம் கேட்டாலும் எல்லாவற்றிற்கும் தெளிவாக பதிலளித்தார்கள். 

தந்தை பெரியாரை பற்றிய அறிமுகம்,

தந்தை பெரியார் அவர்களுடைய சமூக நீதி

ஜாதி ஒழிப்புப் பணி

பெண்ணுரிமைச் சிந்தனைகள்

பகுத்தறிவு சிந்தனைகள்

அவர் நடத்திய போராட்டங்கள்

தந்தை பெரியாரின் அணுகுமுறை

தமிழுக்கு என்ன செய்தார் தந்தை பெரியார்?

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்க வரலாறும்

என்ற பல தலைப்புகளில் அரிய தகவல்கள் எல்லாம் சொல்லித் தந்தார்கள். அதாவது எந்த புத்தகத்திலும் கூட இல்லை என்கிற அளவுக்குத் தகவல்கள். இதிலிருந்து நான் தெரிந்துகொண்டது  பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை வாழ்க்கையிலிருந்து எப்படி தள்ளி வைப்பது, சடங்கு சம்பிரதாயங்களில் இருக்கும் மூடநம்பிக்கைகள் என்ன என்பவைதான். வீட்டில் இருந்தே எல்லோரும் வகுப்புகளில் கலந்துக் கொண்டது நல்ல வாய்ப்பாக அமைந்தது - நன்றி.

சூர்யா ராஜகோபால், விழுப்புரம் மண்டலம்:

அனைவருக்கும் வணக்கம்.  இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்புக்கான பதிவுகளை நாங்கள் முகநூல் வழியாகத் தெரிந்துக் கொண்டோம். அப்பொழுது ஒருநாள் வகுப்பு இருக்கும் என்று தான் நினைத்தோம்.

ஆனால், அதற்கு பிறகு பத்து நாட்கள் வகுப்பு என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

எங்கள் முதல்நாள் வகுப்பை அய்யா கவிஞர் அவர்கள் எடுக்கும் பொழுதே தெரிந்து கொண்டோம் - இது ஒரு சரியான கட்டுப்பாட்டுடனான வகுப்பாக நடத்தப்படும் என்று.

தோழர் மணியம்மை அவர்களுடைய வகுப்பு மிகவும் எளிமையாக இருந்தது.

நாங்கள் எளிதாக கேள்வி கேட்கின்ற அளவிற்கு சிறப்பாக நடத்தினார். அதே போல தோழர் மதிவதனி, தோழர் கண் மணி ஆகியோர் பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் முறையில் எங்களுக்கு வகுப்புகளை எடுத்தார்கள். அது  வகுப்புகளைக் கவனமாக ஊன்றி கவனிப்பதற்கு எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது.

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்ற தலைப்பில் வகுப்பெடுத்த பேராசிரியர் எழிலரசன் நிறைய புத்தகங்களை வகுப்பின் போது தெரியப்படுத்தினார்  .

தந்தை பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள சரியான புத்தகங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்பட்டது.

நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்க வரலாறும் என்ற தலைப்பில் அய்யா அறிவுக்கரசு அவர்கள் மிகச் சிறப்பான ஒரு வகுப்பு எடுத்தார். வி.பி.ராய், சிங்காரவேலர் ஆகியோரு டன் தந்தை பெரியார், மேலும் தந்தை பெரியாரின் ரஷ்ய பயணம் போன்ற வரலாறுகள் எங்களுக்குத் தந்தை பெரியாரைப் பற்றிய புதிய செய்திகளாக இருந்தன.

தோழர்கள் முத்து கவுசல்யா,  ஆனந்தி அக்கா, ரத்னா  அக்கா போன்றவர்களின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. அம்மா இன்பக்கனி அவர்களும் அக்கா இறைவி அவர்களும் நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்தனர் .

இதழ்மொழி, திருவாரூர் மண்டலம்:

மகளிருக்காக இந்த சிறப்பான பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம். அக்கா செந்தமிழ்ச்செல்வி அவர்கள் மூலமாகத்தான் இந்த வகுப்பு பற்றி நான் தெரிந்து கொண்டேன். அவர்களுக்கும் வணக்கம். நன்றி.

அக்கா செந்தமிழ்ச்செல்வி, மணியம்மை, மதிவதனி, கண் மணி, எல்லோரும் அருமையாக வகுப்புகள் எடுத்தார்கள்.

இறுதியில் நடத்தப்பட்ட தேர்வில் நான் குறைந்த மதிப் பெண்கள் பெற்றிருந்தாலும் கூட வகுப்பை மிகச் சிறப்பாக கவனித்து தந்தை பெரியாரைப் பற்றி நிறையச் செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன். அனைவருக்கும் நன்றி..

நித்தியா, புதுக்கோட்டை மண்டலம்:

இந்த மகளிருக்கான பெரியாரியல் பயிற்சி வகுப்பு எங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. தந்தை பெரியாரைப் பற்றிய நிறைய செய்திகளைத் தெரிந்துக் கொண்டோம். இந்த வகுப்பின் மிகப் பெரிய சிறப்பு ஒவ்வொரு நாளும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடந்தது. அந்த கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்னவர்களுக்குப் பரிசும் கிடைத்தன. அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் அமைந்தது. அனைவருக்கும் நன்றி ..

பகுத்தறிவு, தஞ்சாவூர் மண்டலம்:

உலகில் எத்தனையோ புரட்சிகர இயக்கங்கள் தோன்றி யுள்ளன.

தந்தை பெரியாரின் புரட்சிகரமான இயக்கம் திராவிடர் கழகம் என்பது மனித உரிமைகளுக்காகப் பாடுபடுகின்ற இயக்கமாகத் தனிச்சிறப்பு பெற்றது.

ரத்தம் சிந்தாமல் வெற்றி பெற்ற  ஒரு சமூகப் புரட்சி. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பதோ அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பதோ அந்த நாட்டின் பெண்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தது என்றார் தந்தை பெரியார். அதனால் தான் பெண்களை அறிவியல் படுத்துவதும் அரசியல்படுத்துவதும் ஒரு முக்கியமான பணி என்று அவர் குறிப்பிட்டார்.

ஜாதி வெறி, மத வெறி, ஆணாதிக்க வெறி என்று அத் தனை ஆதிக்க வெறிகளும் பெண்ணின் மீதே வன்முறைகள் தொடுப்பதை தந்தை பெரியார் அவர்கள் கண்டித்தார்.

உலகின் முதல் பெண் விடுதலை நூலானபெண் ஏன் அடிமையானாள்?’ என்ற நூலில் பெரியார்  பெண்களின் உரிமைகளுக்காக போராடிய வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

கல்வியுரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சொத்துரிமை, பயண உரிமை, திருமண உரிமை என்று பெண்கள் அதிக அளவில் உரிமை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம் தந்தை பெரியார். அதனால் தான் முற்போக்கு பெண்கள் கூடி தந்தை பெரியாருக்குபெரியார்என்ற பட்டம் அளித்தனர்.

வீட்டிற்குள் இருந்த படியே தந்தை பெரியாரைப் பற்றி அறிந்துகொள்ள இந்த பெரியாரியல் மகளிர் பயிற்சி வகுப்பு ஒரு சிறப்பான வாய்ப்பு.

அனைவருக்கும் நன்றி.

ரேவதி, திண்டுக்கல் மண்டலம்:

பெண்களாகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு. பத்து நாள்கள் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பெரியாரைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கான வாய்ப்பை நாங்கள் பெற் றோம். கூடுதல் சிறப்பாக பெரியார் பற்றிய எனது வாசிப்பிற்கு இந்த வகுப்பு மிகவும் உதவிகரமாக இருந்தது என்று  மன மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். இந்த பத்து நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பின் மூலம் பெண்களாகிய நாங்கள் எவ்வா றெல்லாம் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்பதையும், சுயமரியாதையும் பகுத்தறிவும் மனிதர்களுக்கு எந்த அள விற்கு முக்கியம் என்பதையும் இந்த வகுப்பின் மூலம் அறிந் துக் கொண்டோம். மேலும் எங்களின் தனித் திறமையான கவிதை வாசிப்பின் மூலம் என் கவிதையை வாசித்து, ‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற புத்தகத்தையும் பரிசாகப் பெற் றேன், மேலும் பெரியாரின் அறவழிப் போராட்டம், பகுத்தறிவு சிந்தனை, சமூகநீதி, அவரின் அணுகுமுறை போன்ற பலதரப் பட்ட செய்திகளும், மேலும் தமிழர் தலைவர் அவர்களின் தனித் தன்மைகள் பற்றி அறிந்து கொள்ளவும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது. பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டியது எங்களைப் போன்ற  இளைய சமுதாயப் பெண்களின்  தலையாயக் கடமை என்பதையும் அறிந்துக் கொண்டோம். இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய பெரியார் சிந்தனை  உயராய்வு மய்யத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியைக் கூறுகின்றோம்..

சங்கீதா, சிவகங்கை மண்டலம்:

பெண்களுக்காக தனியாக இந்த.    பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

மதிவதனி அக்கா அவர்களின் வகுப்பு சிறப்பாக இருந்தது.

அம்மா மணிமேகலை அவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்து வகுப்பில் கலந்து கொள்ளச் செய்தது எங்களுக்கு மிகுந்த ஆர்வமாக உற்சாகமாக இருந்தது.

பெரியார்  போன்ற தலைவர்களைப் பற்றி புத்தகங்களில் நாங்கள் தேடி போய் பார்த்து படிப்பதை விட இது போன்ற சிந்தனையாளர்களின் வகுப்புகளை கேட்பது மிகவும் சிறப்பாக இருந்தது. இன்னும் இது போல வகுப்புகள் நிறைய நடத்தப்பட வேண்டும். எங்கள் Team-க்கு மிகுந்த நன்றி ..

பாண்டி செல்வி,  கோவை மண்டலம்:

பொதுவாக வகுப்புகள் என்றாலே பொறியியல், கலை, அறிவியல், மருத்துவயியல் என்ற படிப்புகளை உள்ளடக்கிய போட்டி மிகுந்த இந்த உலகத்தில் பெண்களுக்காகத் தனியாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது மிகவும் பாராட்டுக் குரியது.

தந்தை பெரியார் என்றால் சமத்துவம்,

தந்தை பெரியார் என்றால் சமூகநீதி,

தந்தை பெரியார் என்றால் ஜாதி ஒழிப்பு,

தந்தை பெரியார் என்றால் பகுத்தறிவு,

தந்தை பெரியார் என்றால் பெண்ணுரிமை,

தந்தை பெரியார் என்றால் வைக்கம் வீரர்...

என்று சொல்கின்ற அளவிற்கு ஒரு மிகப்பெரிய வரலாற்று தலைவராக வாழ்ந்த தந்தை பெரியாரைப் பற்றி நிறைய நாங்கள் அறிந்துக் கொண்டோம்,

பேராசிரியர் எழிலரசன் அவர்களின் வகுப்பில், தமிழின் அத்தனை வடிவங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் சீர்திருத்தங்கள்  மேற்கொண்டதைத் தெரிந்துக் கொண்டோம். தமிழ் எழுத்துக்களில், தமிழ்ச் சொற்களில், தமிழ் நாடகங்களில், தமிழ் இலக்கியங்களில் என்று அத்தனை தளங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் மேற்கொண்ட சீர்திருத்தங்களைத் தெரிந்துக் கொண்டோம். இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் மூலம் தந்தை பெரியார் விதையாக எங்களுக்குள் விதைக்கப்பட்டு இருக்கிறார்.

அந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி.

பயிற்சி மாணவர்கள் கேள்வியும்

தமிழர் தலைவர் அளித்த பதிலும்

ஆனந்தி, சென்னை மண்டலம்:

பெரியார் திடலில் நாம் நிறைய ஜாதி மறுப்புத் திருமணங் களை நடத்தி உள்ளோம் அய்யா. ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிக அளவில் நடக்காமல் இருப்பதற்கு இந்த ஆணவப் படுகொலைகள் நடப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது. எனவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பதற்கும், ஆணவப் படுகொலை களைத் தடுப்பதற்கும்  சிறப்பு சட்டங்கள், தனிச் சட்டங்கள் இயற்ற வழிமுறைகள் செய்யப்படுமா?

இது என்னுடைய கோரிக்கையும் கேள்வியும் அய்யா.

தமிழர் தலைவர் பதில்:

மிக்க மகிழ்ச்சி. ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட வர்களைப் பாதுகாப்பதற்கும் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கும் தனிச் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று நாம் முந்தையஅரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தோம். அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. நல்ல வாய்ப்பாக இப்பொழுது வந்திருக்கின்ற மகளிர் உரிமை மாண்பாளர் கலைஞர் அவர்களின் வழியில் வந்திருக்கின்ற ஆட்சியில், நாம் மீண்டும் அதற்கான கோரிக்கையை நம் மகளிர் அமைப் புகள் மூலம்  வைப்போம். தனிச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு உண்டான வழிமுறைகளை நிச்சயம் மேற்கொள்வோம். உங்கள் கேள்வி நல்ல கேள்வி .

தில்லைக்கரசி, தஞ்சை மண்டலம்:

பெண்கள் சுதந்திரம் முழுமையாக அடைந்து விட்டோமா இல்லையா என்பது எங்களைப்போன்ற பெண்களுக்கே தெரியாத நிலையில் இருக்கிறோம் அய்யா. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என் னென்ன சுதந்திரம் கொடுத்து வளர்க்க வேண்டும் அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

முழுமையான சுதந்திரம் அடைந்து விட்டோமா என்று நாம் நினைக்கின்ற நிலையில் இந்த பெண்ணடிமைத்தனம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த ஒரு அடிமைத்தனம் என்பதை நினைக்க வேண்டும். அந்த அடிப்படையில் நாம் ஓரளவு சுதந்திரம் அடைந்து இருக்கின் றோம். பெண்பிள்ளைகளை வளர்ப்பதை பொறுத்தமட்டில் அவர்களை அறிவுப்பூர்வமாக வளர்க்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாகக் கேள்வி கேட்பதைத் தடை செய்யக்கூடாது. அவர்களை நாம் ஒழுங்கு படுத்த வேண்டுமே ஒழிய கட்டுப் படுத்தக் கூடாது. ஒழுங்கு படுத்துவதற்கும் கட்டுப்படுத்து வதற்கும் வேறுபாடு உள்ளது.

சாலைகளில் சிக்னல்களில் வைக்கப்பட்டு இருக்கின்ற போக்குவரத்து பலகைகள் என்பவை அந்த வழியில் செல்கின்ற வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு என்பதைப் போல நாம் பிள்ளைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

அறிவுப்பூர்வமான நிகழ்ச்சிகளில் அவர்களை பங்கேற்கச் செய்யுங்கள். நம்முடைய கூட்டங்களுக்கு அழைத்து வாருங் கள். தந்தை பெரியாரைப் பற்றிய புத்தகங்களை அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். இங்கே சகோதரி மணியம்மை மூலம் அவருடைய சகோதரி ஆனந்தி  அறிவுப்பூர்வமான சுதந்திர சிந்தனை உடைய மகளிராக உருவானது போல அவர்களும் தயாராவார்கள்.

அறிவுச் செல்வி,  புதுக்கோட்டை மண்டலம்:

மகளிர் பயிற்சி வகுப்பு தேர்வில் நான் 96 மதிப்பெண்கள் பெற்று உள்ளேன் அய்யா. அந்த கேள்வித்தாளில் ஒரு கேள்விக்குக் கொடுக்கப்பட்ட விருப்ப பதில்களில்  சரியான பதில் மட்டும் கொடுக்கப்படவில்லை அய்யா.

தமிழர் தலைவர் பதில்:

இந்தத் தவறு நிச்சயமாக இங்கே கலந்து கொண்டிருக்கின்ற பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நம். சீனிவாசன் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

(ஏற்கெனவே தேர்வு நடந்துக் கொண்டிருக்கும் போதே இந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டு,  பேராசிரியர் நம் சீனிவாசன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது என்று துணைப் பொதுச்செயலாளர் இன்பக்கனி அவர்கள் தெரிவித்தார்கள்.)

ரேவதி, சென்னை மண்டலம்:

மகளிர்களுக்கு பயிற்சி வகுப்பு கொடுத்ததைப் போல பெரியார் பிஞ்சுகளுக்கும் பயிற்சி வகுப்பு ஏற்பாடுகள் செய்ய முடியுமா அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

இந்தச் சிறிய வயதில் பெரியார் பிஞ்சுகளுக்கு வகுப்புகள் போன்று எடுப்பது என்பது அவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக அவர்களைபெரியார் பிஞ்சுபோன்ற நமது இயக்க மாத இதழ்களைப் படிக்கச் சொல்லுங்கள். தோழர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களிடம் கேட்டு, என்னென்ன இயக்கப் புத்தகங்களைச் சிறுபிள்ளைகள் படிக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங் கள். நம்முடைய பிரச்சார நிறுவனத்திலிருந்து நிறைய பெரியார் பிஞ்சுகளுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை வாங்கிப் படிக்கச் சொல்லுங்கள்.

நிவேதா, விழுப்புரம் மண்டலம்:

புத்தர் கொள்கைக்கும் தந்தை பெரியார் கொள்கைக்கும் என்ன வேறுபாடு? ஒற்றுமை  அய்யா? அவர்கள் கடவுளை வணங்குகிறார்கள், நாம் கடவுளை மறுக்கின்றோம். எப்படி அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

தந்தை பெரியார் சொல்லிய நிறைய கருத்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய  புத்தராலும் சொல்லப்பட்டவை. புத்தர் கடவுளை மறுத்தவர். ஜாதியை மறுத்தவர். வேதத்தை மறுத்தவர். பார்ப்பனீயத்தை மறுத்தவர். ஆத்மா, மறுபிறவி, போன்றவற்றை மறுத்தவர். பகுத்தறிவின் துணை கொண்டு சிந்திக்கச் சொன்னவர். புத்தர் காலத்தில் அது மதமல்ல, அது ஒரு வாழ்க்கை நெறி, புத்த மார்க்கம். அண்ணல் அம்பேத்கர் அவர்களும் புத்த மார்க்கம் என்கின்ற அந்த நெறியைத் தான் தழுவினார்கள். பவுத்தத்தைத் தங் களுக்குள் விழுங்கிய பார்ப்பனியம், புத்தரை அவதாரமா கியதன் விளைவு தான் பவுத்த மதம் என்று பின்னாளில் கூறப்பட்டது. ஒரு தத்துவத்தை எதிர்த்து அழிக்க முடியாத நிலையில் அந்தத் தத்துவத்தை உள்வாங்கி அணைத்து அழிப்பது என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆரி யத்தின் வஞ்சக நடைமுறை. அந்த வழியில்தான் அம்பேத் கரையும் இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி அணைத்துக் கொள்கிறது. கடவுளை மறுத்தது புத்தநெறி. அறிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொன்னது புத்தநெறி.

ரத்னா, சென்னை மண்டலம்:

மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ள அடிமைத்தனமான கருத்துக்களின் அடிப்படையில்தான்  எத்தனையோ பெண் கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். மனு தர்மத்தை எதிர்ப்பதில் நம்முடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும் அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

மனுதர்மம் சகோதரத்துவத்திற்கு எதிரானது. சமத்துவத் திற்கு எதிரானது. சுதந்திரத்திற்கு எதிரானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் அண்ணல் அம்பேத்கர் அவர் கள் அரசியல் சட்டத்தின் முகப்பிலேயே, சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் என்ற மூன்று கருத்துகளையும் வலி யுறுத்தி உள்ளார். அதே போல, நேரடியாக ஆதரித்து சொல் கின்ற துணிச்சல் யாருக்கும் இல்லை. மனுதர்மம் எழுதப்பட்டது பெண்களின் பாதுகாப்பிற்கு என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும் என்று ஒரு சிலர் நொண்டிச்சாக்கு சொல்கிறார்களே ஒழிய, யாரும் மனுதர்மத்தை  நேரடியாக ஆதரிக்க முன்வர வில்லை. அடுத்த கட்டமாக, அதனைத் தடை செய்வதற்கு நாம் அனைவரும் முயல வேண்டும்.

நந்தினி, சிவகங்கை மண்டலம்:

ஜாதி ஒழிய வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறோம். ஆனால் பள்ளிச் சான்றிதழில் ஜாதியைக் கேட்கிறார்களே ஏன் அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

ஜாதிச் சான்றிதழில் ஜாதி கேட்பது இட ஒதுக்கீடு உரிமையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில்தான். இட ஒதுக்கீடு இல்லை என்றால் முழுவதுமாக உயர்ஜாதி மக்களுக்குத் தான் அந்த வாய்ப்புகள் அதிகம்  செல்லும். பழுதுபட்ட ஒரு பாலத்தைக் கட்டுகின்ற பொழுது எப்படி அதற்கு இணையாக ஒரு தற்காலிக பாலம் கட்டுகிறோமோ, அதுபோலத்தான் இந்த இடஒதுக்கீடு உரிமைகள். ஜாதி என்கின்ற அந்த பெரிய கொடுமை ஒழிக்கப்படுகின்ற வரையிலும் இந்த இட ஒதுக்கீடு என்ற இணைப்பாலம் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். சமூக நீதி என்னும் மனித உரிமை தத்துவத்தை அடக்கி உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படை தத்துவம் இதுதான். உணவுகள் பரிமாறப்படுகின்ற போது பசித்தவர்களை தான் முதல் பந்தியில் உட்கார வைக்க வேண்டும். OBC, BC, MBC, SC, ST என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டு அதனடிப்படை யில் தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. யார் யார் என்னென்ன பிரிவு என்பதை வகைப்படுத்துவதற்காகத் தான், பள்ளிச் சான்றிதழில் ஜாதி கேட்கப்படுகிறது.

அம்மை நோய் முற்றிலும் வராமல் தடுக்க எப்படி அம்மை நோய்க்கிருமிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை தடுப்பூசியாகப் போடுகின்றோமோ, அதே அடிப்படையில்தான் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தப்பட்ட மக்களை உயர்த் துவதற்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு அளிப்பது.

இதில் கூட குறிப்பிட்ட ஜாதியை போடாமல் பிற்படுத்தப் பட்ட வகுப்பு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்று மட்டும் போட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதையும் திராவிடர் கழக மாநாடுகளில் ஒரு  தீர்மானமாக நிறைவேற்றி இருக்கி றோம்.

சங்கீதா, திருச்சி மண்டலம்:

இன்றைக்கு இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சமூக வலைத்தளங்களில் ஜாதி ரீதியான பதிவுகளும், அதனை ஒட்டிய திரைப்படக் காட்சிகளும் பதியப்படுகின்றன. இது இளைஞர்களைத் தவறான வழியில் நடத்துகிற ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. இதனைத் தடை செய்ய முடியுமா அய்யா?

தமிழர் தலைவர் பதில்:

எந்த ஒரு கருத்தையும் தடை செய்வது என்பது ஒரு தீர்வு அல்ல, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளைக் கூடத் தடை செய்வதை வலியுறுத்துவதை விடவும், அவர்களுடையக் கருத்துக்கு எதிர்க்கருத்து போட்டு பதிலடி கொடுப்பது தான் சிறப்பான முறை. கண்ணாடியும் கற்பாறையும் மோதிக்கொண்டால் எது முதலில் உடையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தந்தை பெரியாரின் கருத்துகள் கற்பாறைகள் போன்று வலிமை வாய்ந்த கருத்துகள். கற்பாறை கொள்கைகளுடன் மோதுகின்ற கண்ணாடிக் கொள்கைகள்தான் உடைந்து போகும். எவ்வளவுதான் தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை எழுதினாலும் நாமும் தொடர்ந்து எழுதி அதற்குண்டான பதிலடி கொடுப்பது தான் சரியான நடை முறை. இறுதியில் வெல்பவை தந்தை பெரியாரின் கருத்து களே. மகளிரின் எழுச்சி மிகுந்த கருத்துகளும் சிந்தனையைத் தூண்டும் வினாக்களும் அவர்களிடம் இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்புகள் ஏற்படுத்தியுள்ள உள்ளத் தெளிவையும் கருத்துச் சுதந்திரத்தையும் பறைசாற்றுகின்றன.

வாழ்க தந்தை பெரியார்! வளர்க அவரின் பகுத்தறிவு சிந்தனைகள்!! இவ்வாறு மகளிர் தோழர்களின் கேள்விகளுக்கு தமிழர் தலைவர் விடையளித்தார்.

தொகுப்பு : தகடூர் தமிழ்ச்செல்வி,

மாநில மகளிரணி செயலாளர்.

No comments:

Post a Comment