ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீது 15 நாட்களில் தீர்வு

சென்னை,அக்.15- அமைப்புசாரா நல வாரியங்களில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதிய விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

 தொழிலாளர் துறை அலுவலர்களின் பணி தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன்  13.10.2021 அன்று ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத் துறை செயலர் கிர்லோஷ்குமார், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: சென்னையில் 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கடந்த ஜூலை 30ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், 35 ஆயிரம் தொழிலாளர்களின் மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகளை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அதேபோல, அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங் களில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதிய விண் ணப்பங்கள் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

தொழிலாளர் துறையின் நீதிசார், சமரசம், ஆய்வுப்பணிகளில் கண்டறியப்பட்ட நிலுவைகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும். நுகர்வோர் நலன் காத்திட, சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தொடர் ஆய்வுகள் குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க, பொட்டலப் பொருட்களை அதிகபட்ச சில்லறை விற்பனை விலைக்கு கூடுதலாக விற்கும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், எடையளவுகள் உரிய காலத்துக்குள் முத்திரையிடப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு

பிஎச்டி கட்டாயமில்லை:

பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவு

சென்னை,அக்.15- கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்டி தகுதி 2023ஆம் ஆண்டு வரை கட்டாயமில்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்

கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதிகள் யுஜிசி சார்பில் 2018ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டன. அதன்படி கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் (பிஎச்டி) கட்டாயம் என்று விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.

இதற்கிடையே கரோனா பரவலால் இந்தாண்டு முதல் பிஎச்டிதகுதி கட்டாயம் என்ற விதிக்குவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2023ஆம் ஆண்டு வரை பிஎச்டிதகுதி அவசியமில்லை. இந்த உத்தரவைப் பின்பற்றி கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment