10.01.1948 - குடிஅரசிலிருந்து....
கணவன் வீட்டில், காரிகை நிலை
கல்யாணம் செய்யப்பட்ட பெண், புருஷன் வீட்டு வேலைக்கே கல்யாணம் செய்யப்பட்டதாய்க் கருதி புருஷன் வீட்டில் மாமனார், மாமி, நாத்தி, கொழுனன் ஆகியவர்களுக்கு வேலையாளாக இருந்து சகல வேலையையும் பார்க்கவேண்டும். சில வகுப்புகளில் பெண், புருஷனின் தகப்பன்மாருக்கும், சகோதரர்களுக்கும் கூட பெண் சாதியாய் இருக்க வேண்டும். இதற்குச் சட்டத்திலும் இடமுண்டு. பெண் தாய் வீட்டிலிருந்து புருஷன் வீட்டுக்குப் போகும் பொழுது அழுது கொண்டே போகும். பெற்றோர்கள் பெண்ணுக்குச் சொல்லியனுப்பும் புத்திமதியெல்லாம், புருஷன் வீட்டில் உள்ளவர்களுக்குப் பணிந்து, நல்ல வேலைக்காரியாய் நடந்து கொள் என்றுதான் சொல்லி அனுப்புவார்கள். அந்தப் பெண்ணைப் புருஷன் எவ்வளவு கொடுமையாய் நடத்தினாலும் கேள்வி கிடையாது, சில சமயங்களில் புருஷனுடைய பெற்றோர்கள் கொடுமைப்படுத்தினாலும் கேள்வி கிடையாது, புருஷன் எவ்வளவு அயோக்கியனாகவும், குடிகாரனாகவும், சூது, விபசாரம் செய்பவனாகவும், இருந்தாலும் பெண்ணுக்குக் கேட்க அதிகாரம் கிடையாது. அவன் வரும்படி இல்லாமல் திரிந்தாலும், பெண் தானே கூலி வேலை செய்தாகிலும் அவனுக்குப் போட வேண்டும். பெண் இவற்றையெல்லாம் தனது முன் ஜென்மத்தின் கர்ம பலனென்று எண்ணிக் கொள்ள வேண்டும்.
கல்யாண ரத்தும் இல்லை
புருஷன், மேல்கொண்டு எத்தனைப் பெண்ஜாதி வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொண்டு வாழலாம், எத்தனைத் தாசிகளை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இந்து மதக் கடவுள்கள் 60 ஆயிரம் பெண்களைக் கட்டிக் கொண்டதாகவும், 12 ஆயிரம் தாசிகள் வைத்திருந்ததாகவும் மத ஆதாரங்கள் உண்டு. எந்த நிலையிலும் கல்யாண ரத்து என்பது கிடையவே கிடையாது. பெண்ணுக்கு ஒரு தடவை கல்யாணம் ஆகிவிட்டால் சாகும் வரை அவனிடமேதான் இருந்தாக வேண்டும். புருஷன் கொடுமை சகியாமல் பெண் தாய் வீட்டுக்குப் போய் விட்டால், புருஷன் கோர்ட்டில் தாவா செய்து டிக்ரி பெற்றுப் பெண்ணைச் சுவாதீனம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்ணுக்குப் புருஷனிடமிருந்து ஜீவனாம்சம் பெறத்தான் பாத்தியமுண்டு. அதுவும் பெண் விபசாரி என்று புருஷன் ருஜூப்படுத்திவிட்டால் அந்த ஜீவனாம்சமும் இல்லை.
சொத்துரிமையும் இல்லை
பெண்ணுக்குத் தகப்பன் சொத்தில் சிறிதும் பங்கு கிடையாது. புருஷன் சொத்திலும் பங்கு கிடையாது.
விதவைக் கொடுமை
புருஷன் இறந்துவிட்டால் பெண் விதவை என்று அழைக்கப்படுவாள். புருஷன் இறக்கும்போது அவள் எவ்வளவு செல்வத்துடன் மேன்மையாய் இருந்தாலும், கணவன் இறந்தவுடன் இவள் அபசகுண உருவமாக ஆகிவிடுவாள். நகை அணியக் கூடாது, புஷ்பம், வாசனை, நல்ல உடுப்பு ஆகியவை அணியக் கூடாது. ஒரே வேளை அதுவும் சத்தற்ற ஆகாரந்தான் சாப்பிட வேண்டும். சில வகுப்புகளில் தலையை மொட்டையடித்து, வெள்ளை உடுப்பு அணிந்து கொண்டு வீட்டிற்குள்ளாகவே வீட்டு வேலைகள் செய்து கொண்டு இருக்க வேண்டும். விதவையைக் காணுவது அபசகுனமாகப் பாவிக்கப்படும். விதவைக்குக் குடும்ப காரியங்களில் அல்லது சடங்குகளில் எவ்வித பாத்தியமும் கிடையாது. சாப்பாட்டுக்கு மாத்திரம் பெறப் பாத்தியமுண்டு. வேறு கல்யாணம் செய்து கொள்ளவும் கூடாது. 5 அல்லது 10 வயதில் புருஷன் இறந்து போனாலும் பெண் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. ஆனால் புருஷன் தனது பெண்ஜாதி இறந்த 10 நாளிலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம்.
அவன் எவ்வளவு கிழவனாயிருந்தாலும் மறுமணம் செய்து கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. புருஷன், குழந்தை இல்லாவிட்டாலும், ஆண் குழந்தை இல்லாவிட்டாலும், வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம். பெண் தனது குழந்தைப் பருவத்தில் புருஷன் இறந்து போனாலும் வேறு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.
தனித்தனி வகுப்புகளில், தனித்தனி கொடுமை
இவை பொது நிலைமையாகும். இனி சில தனி வகுப்புகளில் உள்ள பெண்கள் நிலைமையைப் பற்றிச் சில குறிப்பிடுகின்றேன். சில வகுப்புகளில் பெண்கள், ஆண்கள் கண்களுக்கே தென்படக்கூடாது. உடம்பு, தலை, முகம் ஆகிய எல்லாவற்றையும் ஒரு துணியினால் போர்த்து மூடிக் கொள்ள வேண்டும். கண்கள் மாத்திரம் தெரியும்படி ஓட்டை விட்டுப் பார்த்துக் கொண்டே போக வேண்டும். பெண்கள் தனியே எங்கும் போகக் கூடாது. சிறு பெண்ணை, அதாவது 8,10,12 வயது பெண்ணை 20,30,40 வயதுக்காரர்களுக்குக் கட்டிக் கொடுத்தாலும் கல்யாணமான அன்று இரவே படுக்கை, வீட்டில் பெண்ணையும் ஆணையும் தனியாய்ப் படுக்க வைத்து விடுவார்கள். அவன் அதை காமகாரமாய் எப்படி மிருகத்தனமாய் வேண்டுமானாலும் சில சமயங்களில் நடத்துவான்.
சில வகுப்புகளில், மகனுக்குக் கல்யாணம் செய்த பெண் மாமனாருக்கும் பெண் ஜாதியாய் இருந்தாக வேண்டும். 10 வயது பையனுக்கு 20 வயது பெண்ணைக் கல்யாணம் செய்து, பையன் 18 வயது நிரம்புவதற்குள் பெண்ணுக்கு 2, 3 குழந்தைகள் பிறந்துவிடும், அது மாமனாருக்கோ புருஷனுடைய அண்ணனுக்கோ பிறந்ததாக இருந்தாலும், அக்குழந்தைகள் சட்டப்படி பிறந்த லெஜிட்டிமேட் குழந்தைகளாகவே பாவிக்கப்படும்.
சில வகுப்புகளில் குடும்பத்தலைவன் மாத்திரம் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு, அவனுடைய சகோதரர்கள் உள்பட எல்லோருமே, அப்பெண்ணைப் பெண்ஜாதியாய் அனுபவிப்பதும் உண்டு.
No comments:
Post a Comment