தருமபுரி, அக்.3 தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 1979 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களால் தமிழ்நாடெங்கும் சிறப்பாக பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடியதுடன் மாவட்ட தலைநகரங்களில் தந்தை பெரியார் பொன்மொழிகள் அடங்கிய நூற்றாண்டு நினைவு கல்தூண் அமைக்கப் பட்டது. அத்துடன் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என பெயரும் சூட்டப்பட்டது.
அதனடிப்படையில் தருமபுரி நான்கு வழி சந்திப்பு சாலை அண்ணாசிலை அருகில் பெரியார் நூற்றாண்டு நினைவு தூணை அன்றைய தமிழ்நாடு அரசு நிறுவியது. காலப்போக்கில் நினைவுத் தூண் இருந்த இடமான நான்கு வழிச்சாலை மக்கள் நெருக்கம் ,மற்றும் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, தருமபுரி நகராட்சி சார்பில் ஆலோசனை செய்து பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூணை இடம் மாற்றி வைப்பது எனவும், அதற்காக திராவிடர் கழகத்தின் ஆலோசனை பெற வேண்டும் எனவும் முடிவு எடுத்து அதன்படி அன் றைய உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வீ.சிவாஜி, திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால் பெரியார் நூற்றாண்டு நினைவு தூணை இடமாற்றியமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி சாலையில் (புரோக்கர் ஆபீஸ் அருகே) இடம் தேர்வு செய்யப்பட்டு நினைவு தூணை அமைக்க கருத்தொற்றுமை ஏற்பட்டு அதன் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு பெரியார் நினைவு தூண் மாற்றி அமைக்கப்பட்டது. நினைவுத் தூணை மாற்றி அமைப்பதற்கான செலவை மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் ஏற்றுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் பெரியார் நினைவுத் தூண் மாற்றி அமைக்கப்பட்டது. மாற்றி அமைக்கப்பட்ட நினைவுத் தூண் திறந்தவெளியில் இருந்ததால் நினைவுகள் தூணை சுற்றி நான்கு புறமும் சுவரொட்டி ஒட்டுவதும், பதாகைகள் கட்டுவதும், தள்ளுவண்டி கடை அமைத்து மறைப்பதுமாக இருந்து வந்தது. நான்கு பக்கமும் பெரியாரின் பொன்மொழிகள் மறைக்கப்பட்டன.
இது தொடர்பாக அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தருமபுரி நகராட்சி ஆணையர், காவல்துறைக்கு மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாதுகாக்கவும் பழுது பார்க்கவும் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைத்து தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் நினைவுத் தூணை பொலிவு படுத்துவது தொடர்பாக தருமபுரி மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் பேரில், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை. ஜெயராமனின் வழிகாட்டுதலின்படி தர்மபுரி மாவட்ட கழகத் தலைவர் வீ. சிவாஜி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு தூணை புதுப்பித்து தருமாறும், பாதுகாப்பு ஏற்பாடு செய்து தருமாறு கோரி இணைய வழியாக கோரிக்கை கடிதத்தை அனுப்பினார். கோரிக்கையை கண்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் திவ்யதர்சினி அவர்கள் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17க்குள் புதுப்பித்து தருமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து 24 மணி நேரத்தில் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டு பெரியார் நினைவு தூண் நான்கு புறங்களிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு செய்து கொடுத்துள்ளார்கள்.
கோரிக்கை விடுத்து 24 மணி நேரத்தில் பெரியார் நினைவுத் துணை பராமரிப்பு செய்து பாதுகாப்பு செய்து கொடுத்த மாவட்ட ஆட்சியருக்கு தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment