திருவனந்தபுரம், அக்.28 கேரளாவில் கரோனா பாதிப்புக்கு ஆளான 41 கர்ப்பிணிகள் இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
நாட்டில் கரோனா 2ஆவது அலையின் தீவிரம் குறைந்து வந்த சூழலில் கேரளாவில் தினசரி பாதிப்புகள் அதிகரித்து காணப்பட்டன. சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் வினோத் எழுப்பிய கேள்விக்கு மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த பதிலில், கேரளாவில் இதுவரை 41 கர்ப்பிணிகள் கரோனா தொற்றுக்கு இறந்துள்ளனர். 149 நோயாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
அய்.சி.எம்.ஆர். ஆய்வு அறிக்கையின்படி கேரளாவில் கரோனா நோய் எதிர்ப்பாற்றல் கண்டறியப்பட்டோர் விகிதம் கடந்த 2020ஆம் ஆண்டின் மே, ஆகஸ்டு மற்றும் டிசம்பரில் முறையே 0.33%, 0.88% மற்றும் 11.6% ஆக இருந்தது. நடப்பு 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் 44.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஆகஸ்டு - செப்டம்பரில் மாநில அரசு நடத்திய நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வில் இது 82.61 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கேரள மக்களில் ஒரு பெரும் பகுதியினர் கரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர். இதனை மாநில அரசின் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட பல்வேறு பிரிவு மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் மிக அதிக அளவாக, கடலோர மக்களிடம் 93.3 சதவீதம் பேரிடம் நோய் எதிர்ப்பாற்றல் காணப்பட்டது
என அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.
எனினும், மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாக கூடிய நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
14 மாநிலங்களில் இடைத் தேர்தல்
போட்டியிடும் 44 பேர் மீது குற்ற வழக்குகள்
புதுடில்லி,அக்.28- ஆந்திரா, கருநாடகா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் காலியாக இருக்கும் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 30ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.
மேலும் மத்தியப் பிரதேசம், தாத்ராநாகர் ஹவேலி, இமாச்சல பிரதேசத்தில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் 235 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் விழிப்புணர்வு அமைப்பான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் போட்டி யிடும் 235 பேரில் 44 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இவர்களில் 36 பேர் தங்களுக்கு எதிராக தீவிரமான குற்ற வழக்குகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர். 77 பேர் பெரும் பணக்காரர்கள் ஆவர். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.2.99 கோடி ஆகும்.
மூன்று மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 26 வேட்பாளர்களில் 4 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. 7 வேட்பாளர்கள் பெரும் பணக்காரர்கள். ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.97 கோடி என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment