மெகா தடுப்பூசி 7ஆவது முகாம் தொடங்கியது; பொதுமக்கள் ஆர்வம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

மெகா தடுப்பூசி 7ஆவது முகாம் தொடங்கியது; பொதுமக்கள் ஆர்வம்

சென்னை, அக்.30 தமிழ்நாட்டில் 7ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று (30.10.2021) காலை தொடங்கி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக்கும் கூடுதலான மய்யங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டுக்கு தேவையான தடுப்பூசி களை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து தொடர்ந்து விமானங்கள் மூலம் அனுப்பி வருகிறது. கரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் மெகா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை களில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம்தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ஆம்தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ஆம்தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ஆம்தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10ஆம்தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

மதுப்பிரியர்களுக்காகவும், இறைச்சி சாப்பிடுபவர்களுக் காக வும் ஞாயிற்றுக்கிழமையில் நடை பெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைக்கு மாற்றப் பட்டது. அதன்படி, கடந்த 23ஆம் தேதி 6ஆவது கட்டமாக 50000 நடைபெற்ற மெகா முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் 6 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டு உள்ளது.

இதுவரை தமிழகத்தில் 60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், 7ஆவது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று (30.10.2021) தமிழ்நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ மனைகள், அங்கன்வாடி மய்யங்கள், சத்துணவு மய்யங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிற 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ண யிக்கப்பட்டு உள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதார பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடு கின்றனர். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு தடுப்பூசி செலுத்து வதற்காக 45 லட்சம் எண்ணிக்கையிலான கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங் களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளன.

மேலும், இந்த முகாமில் 2ஆவது தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முகாமில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மறுநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத னால், ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி மய்யங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 7ஆவது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. 

இதில், பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வ முடன் வரிசையில் வந்து தடுப்பூசி களை செலுத்திக் கொள்கின்றனர்.  இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளும்படி அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


No comments:

Post a Comment