அஞ்சல் அலுவலகங்களில் கங்கை நீர் விற்கப்படுவதாக வெளி வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகும்.
முதல் கேள்வி, கங்கை நீரை விற்பனை செய்வது என்று முடிவு எடுத்தது எந்த அடிப்படையில்?
இந்துமதத்தில் கங்கை சிவனின் தலையில் குடியிருக்கும் சிவனின் இரண்டாவது மனைவி என்ற ஹிந்துப் புராண அடிப்படையில்தானே!
எந்தப் பாவங்களைச் செய்தாலும் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்பது ஹிந்து மத நம்பிக்கை தானே!
(1) மதச்சார்பற்ற ஓர் அரசின் அலுவலகத்தில் ஹிந்து மதச் சரக்கை விற்பது எந்த அடிப்படையில் சரி என்பது முதற் கேள்வி.
(2) ஒரு நதியில் மூழ்குவதால் பாவங்கள் போகும் என்பது ஏற்புடையதுதானா?
(3) இப்படி ஒரு நம்பிக்கை இருப்பது - பாவங்களைச் செய்யத் தூண்டுமா? குறைக்குமா? குறைந்த முதலீடு கொள்ளை இலாபம் என்ற வியாபாரப் புத்திதானே இதற்குள் நெளிகிறது - மறுக்க முடியுமா!
(4) கங்கை மட்டுமல்ல எந்த நீரும் புனிதமானது என்பதை ஏற்க முடியுமா? புனிதம் என்றால் என்ன? அதன் விளக்கம் என்ன?
புண்ணியம் என்று பொருள் ஆயின், புண்ணியம் என்பது என்ன என்ற கேள்வி எழத்தானே செய்யும் - அதற்கு விளக்கம் அளிக்க முன் வருவார்களா?
(5) அவனன்றி (கடவுள் அன்றி) ஏதும் அசையாது என்றால் புண்ணியம் அல்லது பாவம் செய்வது எவன் செயல்? என்ற கேள்வி எழுமா, எழாதா?
(6) அறிவியல் படி மிக முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.
புனித நீர் என்று ஏற்றிப் போற்றப்படும் கங்கை நீர் சாக்கடைகளின் சங்கமம் தானே - சாயப் பட்டறையின் கழிவு நீர் கலக்கும் ஓர் ஆறுதானே! உண்மை இவ்வாறு இருக்க, அதைப் புனித நீர் - அதில் மூழ்கினால் பாவங்கள் போகும், புண்ணியம் வந்து சேரும் என்று சொல்லுவது கடைந்தெடுத்த மோசடியில்லாமல் வேறு என்னவாம்?
கங்கை நீர் நோய் பரப்பும் உயிர்க்கொல்லி என்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதும் கூட உண்டு.
ஒரு லிட்டர் கங்கை நீரில் சோனிபாம் பாக்டீரியாக்கள் 500 யூனிட்டுகள் உள்ளன என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே!
கிழட்டு மாடுகள் உயிரோடு கங்கையில் வீசப்படுகிறதே - கங்கைக் கரையில் எரிக்கப்படும் பிணங்கள் அரையும் குறையுமாக கங்கையில் எறியப்படுகிறதே!
இத்தகைய ஒரு ஆற்றின் நீரை புனித நீர் என்று கூறி ஒன்றிய அரசின் அலுவலகமான அஞ்சலகத்தில் விற்பனை செய்வது - ஓர் அரசே மக்களின் உயிரோடு விளையாடுகிறது என்று தானே பொருள்?
கங்கை மட்டுமல்ல புனித நீர் - புண்ணிய முழுக்கு என்று சொல்லி, பயன்படுத்தும் அத்தனை நீர் நிலைகளுமே மக்களின் உயிர்க் கொல்லி என்பது மத எதிர்ப்பு அல்ல - அறிவியல் ரீதியான முடிவும் - கண்டுபிடிப்புமாகும்.
நடந்து முடிந்த கும்பகோணம் மகாமகக் குளத்து நீரை - மகாமகம் முடிந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பரிசோதனை செய்யும் வகையில் கிண்டி கிங் நிறுவனத்திற்கு அனுப்பியதுண்டு. அதன் முடிவு என்ன?
28 விழுக்காடு மலக்கழிவு, 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவு என்று மாவட்ட ஆட்சியரே அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லையா!
மனித உயிர் விலை மதிப்பற்றது. மதக் காரணங்களுக்காக மனித உயிரேடு விளையாடலாமா? அதுவும் ஓர் அரசே மனித உயிர்களை விலை பேசும் வியாபாரம் ஆக்கலாமா?
அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-A-h) கூறுகிறது.
ஆனால் ஒன்றிய அரசோ அதற்கு நேர் விரோத மாக அஞ்ஞான மனப்பான்மையோடு செயல்படுவது - கண்டிக்கத்தக்கது.
சட்ட விரோதமானது வெட்கப் படத்தக்கதாகும்.
உடனடியாக இந்த வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
No comments:
Post a Comment