கேள்வி: நம்மை சட்டப்படி சூத்திரர் என்று சொல்லும் சட்டப்பிரிவு அல்லது தீர்ப்பு எது?
- கவிமணி, திருச்சி
பதில்: 1. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 372 (Article 372) ஏற்கெனவே நடைமுறையில் இருந்த சட்டங்கள் (Laws in force) செல்லும் என்று தெரிவிக்கிறது. இதன்படி, இந்துலா - இந்துச் சட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்கீழ், ஜாதி முறைப்படி நாலாம் ஜாதியினர் சூத்திரரே! (ஒரு சிறுவெளியீட்டில் விளக்கியுள்ளோம்) -
2. சூத்திரர்களுக்கு சந்நியாசியாகக் கூட உரிமை இல்லை; திருமண உரிமை இல்லை என்பன போன்ற பல தீர்ப்புகள் மூலமும் 'சூத்திரப் பட்டம்' உறுதி செய்யப்பட்டு உள்ளது.
- - - - -
கேள்வி: ஆளுநருக்குத் திட்டங்களைப் பற்றித் தெரி விக்கத் தகவல்களைத் தருமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எழுதிய கடிதம் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது பற்றி?
- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
பதில்: ஆளுநருக்குள்ள அதிகார வரம்புடன் அரசமைப்புச் சட்டத்தின்படி அவர் கடமையாற்றுவதில் யாருக்கும் எந்த மறுப்பும் இல்லை; அதைத் தாண்டி ஒரு 'போட்டி அரசு' போல் நடப்பதைத்தான் ஜனநாயகத்தில் எவரும் எதிர்ப்பார்கள் என்பதே தெளிவான உண்மை.
கேள்வி: தமிழ் தெரியாதவர்களும் தமிழ்நாடு அரசுப் பணிக்கான தேர்வை எழுதலாம் என்ற அரசாணைப் படியே தற்போதும் தி.மு.க. ஆட்சியில் அரசுப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன என்ற செய்தி உண்மையா?
- பாலகங்காதரன், பெரம்பூர்
பதில்: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு போன்ற, பழைய அரசின் திருத்தப்பட்ட விதிகளை பாதுகாப்பாகக் கொண்டு தமிழ் தெரியாத பிற மாநிலத்தவர் நுழையும் ஆபத்து உள்ளது. இதனை தமிழ்நாட்டின் தற்போதைய அரசும், முதல் அமைச்சரும் நிச்சயம் மாற்றுவார்கள் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். காரணம், இது நம் இளைஞர்களின் உரிமைகளை பறித்து பல இடங்களில் குமுறலுக்கு உள்ளாக்கி வருகிறது.
- - - - -
கேள்வி: வரலாறு காணாத வகையில் ஒரே வாரத்தில் 5ஆம் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதைப் பற்றியெல்லாம் வாய் திறக்காத தமிழ்நாடு பிஜேபி தலைவர்கள் கோவில்கள் திறக்காதது பற்றியும், பூஜைகள் நடவாதது பற்றியும் மட்டுமே பேசுவது நகைப்புக்குரியது அல்லவா?- சு.மோகன்ராஜ், தாம்பரம்
பதில்: இது பாராட்டிற்குரிய மில்லியன் டாலர் கேள்வி - காவிகளுக்கு! மக்கள் பிரச்சினைகளில் காவிகளுக்கு எதற்கு முக்கியத்துவம் பார்த்தீர்களா?
- - - - -
கேள்வி: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் விளைவித்த நெல்லை விற்க முடி யாத விரக்தியில், அதை வயலோடு சேர்த்து தீ வைத்து எரித்தது பற்றி வருத்தம் தெரிவித்து பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது டுவிட்டரில் ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி ஒன்றிய அரசு பரிசீலிக்குமா?
- வே.பெருமாள்சாமி, விழுப்புரம்
பதில்: விவசாயிகளின் 10 மாதம் தாண்டிய அறப்போர் - தொடர் போராட்டத்திற்கு எந்த ஆக்கப்பூர்வ பதிலும் சொல்லாத பேசா மடந்தைகள், ஆதரவுக்கரம் நீட்ட மனமில்லா அரசினர் இதற்கா செவி சாய்ப்பர்? நம்ப முடியவில்லையே!
கேள்வி: காதல் திருமணத்தைத் தவிர்ப்பதற்காக பெண்களின் திருமண வயதை உயர்த்த வேண்டும் என்று ஜாதியவாதிகள் சொல்லுகின்றனர். அதே நேரத்தில் திருமண வயதை உயர்த்தினால், கல்லூரிக் கல்வி வரை பெண்கள் பயில வாய்ப்பேற்படும் என்று ஒரு கருத்து நிலவுகிறதே!
- தமிழ்ச் செல்வன், சிறுப்பாக்கம்
பதில்: எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பது இதன்மூலம் விளங்குகிறது!
- - - - -
கேள்வி: மனிதனைப் பீடித்துள்ள ஜாதித் 'தீ' எனும் நோயினை அழித்தொழிக்க இளைஞர்களும் மாணவர் களும் என்ன செய்ய வேண்டும்?
- பா. ஆனந்த், திருவொற்றியூர்.
பதில்: முதலில் தங்களுக்குள் "ஜாதி" மனப்பான்மை தவறிக்கூட நுழையாது பார்த்துக் கொள்ள வேண்டும். கரோனாவை தடுப்பூசி மூலம் தடுப்பது போல, ஜாதி நோயிலிருந்து விடுபட பெரியார் அம்பேத்கர் நூல்களைப் படித்து உள்வாங்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்வது என்று உறுதியுடன் செயல்படவேண்டும்.
- - - - -
கேள்வி: ஜாதி வேண்டும் என்பவர்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்ப்பது ஏன்?
- மணிமேகலை, ஆவடி.
பதில்: ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்பவர்கள் சமூகநீதிக்காக ஜாதி வாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்பதால், ஜாதி வேண்டும் (ஒழியக்கூடாது) என்று சொல்பவர்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிர்ப்பது என்ற நிலைப்பாடு எடுக்கின்றார்கள். புரிகிறதா?
- - - - -
கேள்வி: சொந்த உபயோகத்துக்காக சிறிய அளவில் போதைப் பொருள் வைத்திருப்பதை குற்றமாக்கக் கூடாது என்று ஒன்றிய சமூகநீதி அமைச்சகம் சிபாரிசு செய்துள்ளது - சரியா?
- க. பொன்மணி, பூந்தமல்லி.
பதில்: சரியல்ல, தவறு. சட்டத்தில் சிறு ஓட்டை செய்தால், அதில் யானையே புகுந்து வெளியே வரக் கூடும்!
- - - - -
கேள்வி: பொன்விழா கொண்டாடும் இன்றைய அதிமுக நிலை பற்றி?- அ.தமிழ்க்குமரன், ஈரோடு
பதில்: பொன்விழாவை மறந்துவிட்டு தன்விழாவை ஒவ்வொரு அணியினரும் நடத்தும் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் என்பதுதான் பரிதாபம்!
No comments:
Post a Comment