வணக்கம்.
என் வாழ்வின் குழந்தைப் பருவம் முதல் உங்களின் பெயரை உச்சரித்துவிடக்கூடாதென்றும், உங்களின் கொள்கைகளை பின்பற்றுவோரை அரக்கர்களாக பார்க்கும் மனோநிலையில்தான் வாழ்ந்திருக்கிறேன்.
உங்களுக்குத் தெரியுமா? நான் வளர்ந்த திருவரங் கத்தில் சாத்தாரவீதியும், கீழ அடையவளஞ்சானும் சந்திக்கும் இடத்தில் இருக்கும் திராவிடர் கழக கொடிக் கம்பத்தையோ, அதன் அருகில் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் தாங்கிய கல்வெட்டை பார்ப்பதோ, படிப்பதோ கூட அபச்சாரம் என்ற எண்ணமுமே படிந்திருந்தது.
எல்லாம் வல்ல கடவுளை இல்லை என்பவன் அறி வில்லாதவன் என்றெல்லாம்கூட நினைத்திருக்கிறேன்.
ஒருமுறை அரங்கநாதர் கோவில் வாசலில் நடந்த திராவிடர் கழக பேரணியில் ஒலித்த, கடவுள் மறுப்பு வாசக சத்தம் காதில் விழுந்ததே மகாபாவ செயல் என்று கூட நினைத்திருக்கிறேன்.
ஆனால் காலம் எனக்கு உங்களை உணரும் தருணங்களை வழங்கியது. காதையும் கண்ணையும் பொத்திக்கொண்டிருந்த நிலையிலிருந்து என்னை தளர்த்தி சிந்தனைகளை விரிவடைய செய்ததில் உங்களின் கோட்பாடுகளையும், சிந்தனைகளையும் அதன் ஆழத்தையும் உணர முடிந்தது.
ஏன் கடவுள் இல்லை என்கிறீர்கள் என்பதை உணர அதன் அடிநாதமான சமத்துவமின்மையை புரிந்துணர வேண்டும்.
அந்த சிறு பொறியே பெருந்தீயாய் சமுதாயத்தில் எரிந்தும் எரித்தும் பல இன்னல்களுக்கு வித்திடுகிறது. மனித நேயத்தை குலைக்கவும் செய்கிறது.
அதன் தொடர்ச்சியாக உங்களின் பலதரப்பட்ட சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்ளும் போது நிச்சயமாக பகுத்தறிவு விரிவடையவே செய்கிறது. அதன் நீட்சியாக என்னுள் ஏற்பட்டிருக்கும் சிந்தனை ஓட்டமும் எண்ணங்களும் என்னை மேன்மை செய்தவண்ணம் இருக்கிறது. இவையனைத்தும், அடிப்படையாக கடவுள் சம்பந்தப்பட்ட உங்களின் கருத்துக்களின் தொடர்ச்சி...
அது நீங்கலாக - நீங்கள் சமுதாயத்திற்கு ஆற்றியி ருக்கும் பல்வேறு பணிகளையும், தொண்டுகளையும் நடுநிலையிலிருந்து சிந்தித்துப் பார்த்தால் பெருமதிப்பும் மரியாதையுமே மேலோங்குகிறது.
இந்த இடத்திற்கு ஒருவர் வரவேண்டுமென்றால் திறந்த மனதுடனும், பரந்த சிந்தனையுடனும் கண் டிப்பாக முன்முடிவுகளுக்கு ஆட்படாமலும் சிந்திக்க வேண்டும்.
அது சற்றுக் கடினமே - ஆனால் முயன்றால் முடியும்.
இப்பொழுதெல்லாம் உங்களின் கருத்துக்களையும் உங்களைப் பற்றிய வரலாற்றையும் தொடர்ந்து கேட் கிறேன். தகவல்கள் என்னை மெய்சிலிர்க்கச் செய் கின்றன.
சிந்தனைகள் காலத்திற்கு தகுந்தாற்போல் அமை யும். ஏனெனில் அப்பொழுதைய தொழில்நுட்பங்கள், சிந்தனைகள், நடப்புகள் அதன் விளைவுகள் என பல்வேறு காரணங்களால். அதுவே பரிணாம தத்துவம். ஆனால் 143 ஆண்டுகள் கண்டிருக்கும் உங்களின் சிந்தனைகள் இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தத்தக்க வகையில் இருப்பது வியப்பானதே.
இந்த நிமிடம் வரை நான் இவற்றை உங்களுக்கு ஒரு கடிதமாக எழுதுவேன் என்று நினைக்கவில்லை. கடைசி நிமிடத்தில் உதித்த இந்த எண்ணம் எனக்கு நிறைவையே தருகிறது.
இன்னும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏராளம் உள்ளது. ஆனால் நேரத்தின் நெருக்கடி கருதி இந்த கடிதத்தை முடித்துக் கொள்கிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து எழுதுகிறேன்.
- சுபசிறீ, சிறீரங்கம்
No comments:
Post a Comment