தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிமுகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிமுகம்!

நெல்லை, அக்.12  தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான முன்னணி நிலவரங்களின்படி திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது.

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட காரணத்தால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் தாமதத்திற்குப் பின் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

9 மாவட்டங்களில் 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்ததால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் இதில் பதிவானது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 41,500 வாக்கு பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

14,573 வாக்குச் சாவடிகளில் தேர்தல்

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய பதவிகளை தேர்வு செய்ய இந்தத் தேர்தல் நடந்தது. 14,573 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடந்தது.

திமுக கூட்டணி முன்னிலை...

இன்று காலையிலிருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆரம்பக்கட்ட நிலவரங்களின்படி திமுக கூட்டணிதான் முன்னிலை வகித்து வருகிறது. மாவட்ட கவுன்சிலருக்கான 140 இடங்களில் 65 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. (பகல் 1 மணி நிலவரப்படி)

அதேபோல் இன்னொரு பக்கம் ஒன்றிய கவுன்சிலருக்கான 1380 இடங்களில் 166 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுக, பாமக கட்சிகளுக்கு அதிர்ச்சி

திமுகதான் தொடக்கத்திலிருந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிலும் கள்ளக்குறிச்சி போன்ற பாமக, அதிமுக வலுவாக இருக்கும் மாவட்டங்களில் கூட திமுகதான் முன்னிலை வகித்து வருகிறது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை குறி வைத்துத் தான் பாமக தனித்து களமிறங்கியது. ஆனால், அங்கேயே திமுக முன்னிலை வகிப்பது அதிமுக, பாமக கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதில் திமுகவின் உதயசூரியன் சின்னம் மட்டும் 133 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றியை தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி தக்க வைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment