வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மீண்டும் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்த காரணத்தால் சிறிது நிம்மதி அடைந்த தமிழ்நாட்டு மக்கள்மீது ஒன்றிய அரசு மேலும் விலைவாசியை உயர்த்தி பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடக்க வைத்து விட்டது, அதே போல் டீசல் விலை உயர்வால் திணறிக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த விலையேற்றம் மூச்சுத் திணறலை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதேபோல், சமையல் எரிவாயு உருளை விலை மாதத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறைகூட மாற்றி அமைக்கப்படுகின்றது. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளை விலையை நிர்ணயித்து வருகின்றன. அந்தவகையில், சமையல் எரிவாயு உருளையின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
2021-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத் தொடக்கத்தில், 710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த வீட்டு பயன்பாட்டுக் கான சமையல் எரிவாயு உருளையின் விலை, இப்போது ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகின்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 610 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த வீட்டு பயன்பாட் டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை, பன்னிரண்டே மாதங்களில் 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 920 ரூபாய் ஆகிவிட்டது. அதாவது, இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் 100 ரூபாயும், மார்ச் மாதத்தில் 25 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டது.
ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 25 ரூபாய் உயர்ந்துள்ளது. அக்டோபர் முதல் வாரம் 15 ரூபாயை உயர்த்தி யுள்ளது,
கடந்த 2015-ஆம் ஆண்டு வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை 1,000 ரூபாயாக உயர்ந்திருந்தாலும், அப்போது பெரும்பான்மையான தொகை மானியமாக வழங்கப்பட்டு ரூ.500, ரூ.450 என்ற அளவிலேயே மக்களிடமிருந்து வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் தொகையாக பெறப்பட்டது. ஆனால், தற்போதோ மானியமாக வெறும் 25 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமையல் எரிவாயு விலை ஏறினாலும், அந்தத் தொகை மானியமாக மீண்டும் மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மானியமும் குறைந்த அளவே தரப்படுகிறது என்பதே வேதனைக்குரிய விஷயம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மானி யங்களை வழங்காமல், மக்களுக்கே மானியங்கள் வழங்கப்பட்டன. இந்த நேரடி மானியத் திட்டத்தை, அப்போதைய முக்கிய எதிர்க் கட்சியான பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. இப்படி நேரடியாக மக்களுக்கே மானியம் வழங்குவதன் மூலம், மானியங்களை காங்கிரஸ் ஒழிக்கப்போவதாக, பாஜக குற்றஞ்சாட்டியது. ஆனால், அதே பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், மானியம் கொடுக்கும் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அத்துடன், அதைப் பொதுமக்களின் வங்கிக் கணக்கிலும் செலுத்திவந்தது.
தொடக்கத்தில், சுமார் 400 ரூபாய் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட சமையல் எரிவாயு மானியம், இப்போது வெறும் 13 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஒன்றிய அரசே தீர்மானித்து வந்தது. கடந்த 2004-ஆம் ஆண்டு, கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விற்பனை விலையை, '15 நாட்களுக்கு ஒருமுறை' பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம் என காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனைக் கடுமையாக எதிர்த்தது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் விலையை, 'தினசரி' மாற்றம் செய்துகொள்ளும் அதிகாரத்தைப் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வழங்கியது. பிறகு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏறும்போதெல்லாம், ஒன்றிய அரசு பெட்ரொலிய நிறுவனங்களையே கைகாட்டி வருகிறது.
இந்நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளைகளின் விலையும் உயர்ந்து 2000 ரூபாயைத் தொடவிருக்கிறது.இதனால், செய்வதறியாது உணவகம் நடத்துவோர் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலே அனைத்து விலைவாசிகளும் யாரையும் கேட்காமல் இறக்கை முளைத்து வானத்தில் பறக்க ஆரம்பிக்கும் என்பது பால பாடமாகும்.
காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக்கூடும் எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். முன்பெல்லாம் சமையல் எரிவாயு உருளை விலை உயரும்போது, வழங்கப்படும் மானியத்தின் தொகையும் கூடுதலாக இருக்கும். இதனால், சாமானிய மக்களுக்கு விலைவாசி உயர்வு பெரும் சிக்கலாக இருக்காது. ஆனால், தற்போது விலை மட்டுமே உயர்ந்துகொண்டிருப்பது அடித்தட்டு மக்களை அச்சுறுத்தி அழுத்தி மிதிக்கிறது.
நாட்டு மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகள் பற்றி அக்கறை செலுத்தும் அரசல்லவா இது! எல்லாம் தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்ற நம்பிக்கையாளர்களின் புத்தி மக்களைப் பற்றிக் கவலைப்படுமா?
'கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக ஒழிக!' என்றார் வடலூர் வள்ளலார் - அதுதான் நினைவிற்கு வருகிறது!
No comments:
Post a Comment