மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசில், இணையத் தொடருக்கான படப்பிடிப்பில் பொருள்களை சூறையாடி வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளனர் பஜ்ரங்தள், இந்துத்துவா அமைப்பினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ‘ஆஷிரம் 3’ இணையத் தொடர் படப்பிடிப்புத் தளத்தை பஜ்ரங் தள் அமைப்பினர் அடித்து சூறையாடும் காட்சிப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 24.10.2021 அன்று போபாலில் உள்ள பழைய சிறைச்சாலையில் 'ஆஷிரம் 3' இணையத் தொடரின் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது அங்கு திரண்டு வந்த பஜ்ரங்தள் அமைப்பினர் Ôஜெய் சிறீராம்Õ, ‘பிரகாஷ் ஜா ஒழிக', ‘பாபி தியோல் ஒழிக' என்று முழக்க மிட்டபடி படப்பிடிப்பு குழுவினரைத் தாக்கத் தொடங்கினார்கள். படப்பிடிப்பில் இருந்த பொருள்களை சூறையாடினார்கள்.
'ஆஷிரம் 3' இணையத் தொடரில் இந்து சமூகம் அவமதிக்கப்பட் டுள்ளதாக கூறி, படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்த பஜ்ரங் தள் அமைப்பினர் படப்பிடிப்புத் தளத்தை அடித்து நொறுக்கினார்கள்.
படப்பிடிப்பில் இருந்த அனைத்துத் தொழிலாளர்களையும் தாக்கியுள்ளனர். தாக்குதலிலிருந்து தப்பித்து ஓடிய தொழிலாளர்களை வன்முறையாளர்கள் ஆளுக்கொருவராக பிடித்து இரும்புத் தடியால் ஈவிரக்கமின்றி தாக்கியுள்ளனர். படப்பிடிப்புத் தளத்தில் இருந்த வாகனங்களையும் அடித்து உடைத்து நொறுக்கியுள்ளனர்.
அத்தொடரின் இயக்குநர் பிரகாஷ் ஜாவையும் தாக்கியதுடன், அவர் முகத்தில் கருப்பு மையை தெளித்து அவமதித்துள்ளனர்.
இதன் காட்சிப்பதிவு இணையத்தில் வெளியாகி பரவிவருகிறது.
பஜ்ரங் தள் அமைப்பின் பொறுப்பாளர் சுஷீல் சுர்கேலே என்பவர் கூறுகையில்,
"இப்பகுதியில் ஆஷிரம்1, ஆஷிரம் 2 படப்பிடிப்பை நடத்தி னார்கள். தற்பொழுது ஆஷிரம் 3 படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.
இணையத் தொடரில் ஆசிரமத்திலுள்ள குரு பெண்ணை மோசம் செய்வதாக காட்சிப்பதிவு உள்ளது. இதுபோன்று சர்ச்சிலோ, மதராசாவிலோ படம் எடுப்பார்களா? அவர் எது வேண்டுமானாலும் செய்வாரா? பஜ்ரங் தள் அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறது. படப்பிடிப்பைத் தொடர விடமாட்டோம்!
இதுவரை, பிரகாஷ் ஜாவினுடைய முகத்தில் கருப்புச் சாயத்தை ஊற்றி கருப்பு ஆக்கியுள்ளோம். பாபி தியோலையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் சகோதரரிடம் (சன்னி தியோல்) அவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் தேசபக்தி படங்களை எடுத்துள்ளார்" என்று பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சுஷீல் சுர்கேலே கூறினார்.
ஆஷிரம் இணையத் தொடரில் சாமியார் நிராலாவாக பாபி தியோல் நடித்துள்ளார். மோசடி சாமியாராக அவர் கதாபாத்திரம் அமைந்துள்ளது. இத்தொடர் இணையத்தில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் எம்எக்ஸ் பிளேயரில் வெளியானது.
2020ஆம் ஆண்டில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் பாபி தியோல், பிரகாஷ் ஜாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.
சட்டரீதியிலான போராட்டங்களை எதிர் கொண் டுள்ள படக்குழுவினர்மீது தற்பொழுது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் அரங்கேற்றப் பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில் Ôபத்மாவத்Õ திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோன், அத்திரைப்படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டவர்கள் மீது இந்துத்துவா அமைப்பாகிய Ôகர்னி சேனாÕ அமைப்பினர் தாக்குதலை நடத்தினார்கள். 'பத்மாவதி' எனும் அப்படத்தின் தலைப்பு தாக்குதல் காரணமாக 'பத்மாவத்' என்று மாற்றப்பட்டது.
இந்த ஆண்டில் சாயிஃப் அலி கான் நடித்த Ôதாண்டவ்Õ இணையத் தொடருக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் கைது அச்சுறுத்தலும் இணைந்ததால், இணையத் தொடரை வெளியிட்ட அமேசான் நிறுவனம் மன்னிப்புக் கோரியது.
இதுபோன்று, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக மத வெறியுடன் வன்முறை வெறியாட்டம், ஆட்சி அதிகாரத்துடன் கூடிய இந்துத் துவா சங்பரிவார் கூட்டத்தின் ஆணவப்போக்கு தொடர்ந்து கொண் டிருக்கிறது.
மதச் சார்பற்ற கருத்துகளை எதிர்கொள்ளத் துணிவின்றி சங் பரிவாரக் கூட்டத்தினர் ஆட்சி, அதிகார மமதையுடன் அவ்வப்போது இந்துத்துவாத் திணிப்பு மதவாதங்களை முன்னிறுத்தி வன்முறை களைக் கட்டவிழ்த்து விட்டு வெறியாட்டம் போட்டு வருகின்றனர்.
டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா மிகக் கேவலமாக தோற்றுள்ளது. இதற்குக் காரணம் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்து வீச்சாளர் முகம்மது சமிதான் என்று சங்கிகள், சமூக வலைதளங்களில் மிகக் கேவலமாக பதிவிட்டு வருகின்றனர்.
எதிலும் மதப் பார்வை என்ற கண்ணோட்டம் நாட்டை அதல பாதாளத்தில் தள்ளி விடும்.
மாநிலங்களிலும் ஒன்றியத்திலும் பா.ஜ.க. ஆட்சி ஒழியும் நாளே நன்னாள்! இல்லையெனில் வன்முறைதான் நாட்டாண்மை செய்யும்.
No comments:
Post a Comment