முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றை இனியும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு ஒன்றிய அரசால் எந்த ஒரு சாக்குப் போக்கையும் கூறமுடியாது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஒன்றை இனியும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு ஒன்றிய அரசால் எந்த ஒரு சாக்குப் போக்கையும் கூறமுடியாது

ப்ராசெஞ்ஜித் போஸ்

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட  சமூக, பொருளாதார, ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிடாமல் இருப்பதற்கான தனது காரணங்களை கடைசியாக மோடி அரசு தெரிவித்துள்ளது. மகாராட்டிர மாநில அரசு பதிவு செய்த ஒரு ரிட் மனுவுக்கு உச்சநீதிமன்ற ஆணைக்கு பதிலளிக்கும் முறையில், சமூக நீதி மற்றும் அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கான ஒன்றிய அரசின்  அமைச்சகத்தினால் உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், கோவிட் -19 நோய்த் தொற்று காரணமாக தள்ளி வைக்கப்படும், 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, ஜாதிவாரியான முழு விவரங்களை சேர்க்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தெரிவிப்பதற்கு முயற்சித்துள்ளதுமுழு ஜாதி வாரியான மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதன் சாத்தியமின்மையைப் பற்றிய அதிகார பூர்வமான வாதங்களில், அத்தகையதொரு கணக்கெடுப்பை நடத்துவது மிகமிகக் கடுமையானது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் உள்ள தவறுகள், குறைபாடுகள்

 1931 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,  எண்ணப்பட்ட மொத்த ஜாதிகளின் எண்ணிக்கை 4,147 என்றும், 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 46 லட்சத்துக்கும் மேற்பட்ட ஜாதிகள் எண்ணப்பட்டன என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் ஒன்றிய அரசு விவரித்துள்ளது. இவ்வளவு அதிகமான எண்ணிக்கை கொண்ட ஜாதிகள் காணப்பட்டதன் காரணம், இந்திய மக்கள் தங்களின் ஜாதி, உபஜாதி, இனம், கோத்ரம் மற்றும் துணைப் பெயர்களையும் பயன்படுத்துவதுதான்.  மேலும், கணக்கெடுப்பு மேற்கொள்வதற்காக வந்திருந்த அரசு அலுவலர்கள்,  மக்கள் சொல்லும் ஜாதிகளின் பெயர்களில் உள்ள எழுத்துக்கள் மற்றும் ஜாதிகளின் வகைப் பாடுகள் பற்றி குழப்பம் அடைந்திருந்தனர். இப்போது நம் முன் உள்ள கேள்வியே, அரசின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது போல,  2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் காணப்பட்ட 46 லட்சம் ஜாதிகளின் பெயர்கள் கணக்கெடுத்த அலுவலர்கள் செய்த தவறுகளின் அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளுக்குள் உறைந்துள்ள தவறுகளின் விளைவுகளாக இருக்குமேயானால்,  ஒரு பத்தாண்டு காலத்திற்குள் அந்தத் தவறுகளையும், குறைபாடுகளையும்  ஏன் திருத்தி இருக்க முடியாது? என்பதுதான்.

அப்போதைய நிட்டி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக இருந்த அரவிந்த் பாணகரியாவைத் தலைவராகக் கொண்ட நிபுணர் குழு ஒன்றினை ஒன்றிய அரசின் அமைச்சரவை 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நியமித்தது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எண்ணப்பட்ட ஜாதிப் பெயர்களை வகைப்படுத்தும் பணி அந்த குழுவிற்கு அளிக்கப்பட்டது. அந்த குழுவிற்கு வேறு எந்த ஒரு உறுப்பினரும் நியமிக்கப்படவில்லை என்பதும் அரசின் பிரமாண பத்திரத்தில் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது. அதனால், அந்தக் குழு எப்போதுமே கூடவில்லை என்பதும்,  அதற்கு அளிக்கப்பட்ட 6 ஆண்டு கால அவகாசத்தில் அதற்கு அளிக்கப்பட்ட பணியை அது நிறைவேற்றவில்லை என்பதும் தெரிய வருகிறது. அப்படியானால், இந்த அலட்சியத்துக்கு யார் பொறுப்பு?

ஜாதி கணக்கெடுப்பில் உள்ள தவறுகளின் அளவும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டே கூறப்பட்டு வருகின்றன. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஜாதி மக்களின் ஒன்றிய பட்டியலில் உள்ள ஜாதிகள் மற்றும் மாநிலப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு  மாநிலப் பட்டியலில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 494 என்றும்,  2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கிடைத்த ஜாதிகளின் எண்ணிக்கை 4 . 28 லட்சமாக இருந்தது என்ற மகாராட்டிர மாநிலத்தின் எடுத்துக் காட்டை அந்த பிரமாண பத்திரம் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கண்டெடுக்கப் பட்ட ஜாதிகளில் 99 . 9 சதவிகித ஜாதிகளின் மக்கள் தொகை 100 க்கும் குறைவாகவே இருந்தது என்றும்,  மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்கள் தொகையான  10. 3 கோடியில் 8 . 8 கோடி மக்களை தலா 1000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 2440 ஜாதிகளுக்குள் வகைப்படுத்திவிட முடியும்' என்றும் அந்த பிரமாணப் பத்திரம் தெரிவிக்கிறது. எனவே ஜாதிகளின் பெயர்கள் பல்கிப் பெருகி காணக் கிடைத்திருப்பதிலும்,  அவற்றை வகைப்படுத்துவதில் உள்ள சிரமங்களும் பெரும்பான்மையான மக்கள் கொண்ட ஜாதிகளினால் ஏற்பட்டது அல்ல; மொத்த மக்கள் தொகையில் மிகமிகச் சிறிய அளவிலான மக்கள் கொண்ட ஜாதிகளினால் ஏற்பட்டவையே ஆகும். வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ள மக்களின் மக்கள் தொகை (தற்போதைய சமூக, பொருளாதார, ஜாதி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு) பற்றி ஆய்வு மேற்கொண்ட கிராமப்புற மேம்பாட்டு நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டது பற்றிய அறிக்கை ஒன்று மேலும் இதனைஉறுதிப் படுத்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையான 118 .64 கோடியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில்  1 . 34 கோடி மக்களின் ஜாதி மற்றும் மத புள்ளி விவரங்களில் மட்டுமே, அதாவது கணக்கெடுப்பு நடத்தப்பட்ட மக்கள் தொகையில் 1 சதவிகித மக்களைப் பொறுத்த வரைதான் இந்தத்  தவறுகள் நேர்ந்துள்ளன என்று ஒன்றிய அரசு உறுதிபடக் கூறியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது அதே அரசு ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிடைத்துள்ள ஒட்டு மொத்த புள்ளி விவரங்களுமேதவறானவையாகவும், சரியாக இல்லாதவையாகவும்ஆகும் என்று எவ்வாறு கூற இயலும்?

சிக்கல் நிறைந்தவை என்ற போதிலும் ஜாதிவாரி மக்கள் தொகைக்  கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட இயன்றதே!

 ஒன்று போல் இல்லாமல், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவைப் போன்றதொரு மிகப் பெரிய நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பது என்பது சிக்கல்கள் மிகுந்ததொரு செயல்பாடாகத்தான் இருக்க முடியும். கடந்த பல ஆண்டுகளில், தங்கள் அனுபவத்தால் கற்றுக் கொண்டவைகளை வைத்துக் கொண்டு, குறிப்பிடத்தக்க பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் சிக்கல் நிறைந்த மொழி மற்றும் மத புள்ளி விவரங்களை வெற்றிகரமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நிர்வாக இயந்திரம் கணக்கெடுத்து முடித்துள்ளது. எடுத்துக் காட்டாக, 2011 ஆம் ஆண்டு மதம் பற்றிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மீதான 2018 ஆம் ஆண்டில் 1 ஆவது அறிக்கையில் நாடு முழுவதிலும் உள்ள தாய் மொழியைக் கொண்டிருக்கும் மக்கள் தொகையின் எண்ணிக்கை தொடக்கத்தில் 19,569 ஆக இருந்தது. ஆனாலும் அந்த புள்ளி விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, சுருக்கப்பட்டு, மொழிவழிக் குழுக்களாக வகைப்படுத்தப் பட்ட பிறகுதொடக்கத்தில் பெறப்பட்ட 19,569 மொழிகளில் 1,369 மொழிகள் மட்டுமே தாய்மொழிகள் என்று  இறுதியில் எஞ்சி நிற்பவையாக இருந்தன. பின்னர் 22 பட்டியலிடப்பட்ட பிரிவு மொழிகள்   மற்றும்  99 பட்டியலிடப்படாத மொழிகள் ஆக மொத்தம் அகில இந்திய அளவில் 121 மொழிகள் இருந்ததாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜாதி பற்றிய புள்ளி விவரங்களைக் கணக்கெடுப்பது என்பது மொழி பற்றிய புள்ளி விவரங்களைக் கணக்கெடுப்பதை விட அதிக சிக்கல் நிறைந்ததாகவே தோன்றுகிறது என்ற போதிலும், பெரிய அளவிலான சிக்கல் நிறைந்த  புள்ளி விவரங்களை கணக்கெடுத்து வகைப்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள் இன்று மிக எளிதாகக் கிடைக்கின்றன. அடுத்து 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், முழு அளவிலான ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பதை நிராகரிக்கும் ஒன்றிய அரசினால்,  அகில இந்திய அளவில் உள்ள ஜாதிகளின் பதிவேடு ஒன்று பேணப்படவில்லை என்பதை அரசின் பிரமாண பத்திரம் சுட்டிக் காட்டுகிறது. ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் ஒன்று சேர்ந்து, ஒன்றிய அரசிடம் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ஜாதிகளின்  பட்டியல்களையும், மாநில அரசுகளிடம் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பட்டியல்களையும் கொண்டு அத்தகையதொரு பதிவேடு இன்று வரை உருவாக்கி பேணப்படாதது ஏன்?

அத்தகைய பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள ஜாதிகள் மற்றும் பழங்குடியினங்களின் சராசரி எண்ணிக்கை தற்போது அகில இந்திய அளவில் 5,000 ஆக இருக்கும். எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திலும் மிக அதிகமாக உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 500 க்கு மேலாக இருக்க முடியாது. எண்ணற்ற புதிய ஜாதிகள் பற்றிய அறிக்கைகளை பகுத்தாய்வு செய்து வகைப்படுத்தப்பட்ட பிறகு,  ஒவ்வொரு மாநிலத்திலும் 500 ஜாதிகளும், அகில இந்திய அளவில் 5000 ஜாதிகளும் இருக்கும் என்று கூறப்படுவது எப்படி உண்மையாக இருக்க இயலும். ஒவ்வொரு மாநிலத்துக்குமான ஒரே ஒரு தொகுக்கப்பட்ட ஜாதிப் பட்டியலின் அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் அலுவலர் களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்து நடத்தலாம்.

ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு இதற்குள் இந்தப் பணியை செய்து முடித்து இருக்கலாம்.  ஆனால், அந்தக் குழு செயல்படாமலேயே போய்விட்டது.  தனது நிருவாகத் தவறுகளை சரி செய்வதற்கு மாறாக, ஒன்றிய அரசு இப்போது ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பையே நடத்த முடியாது என்றதொரு கோட்பாட்டைக் கட்டமைப்பதற்குக் காரணமாக அந்தக் குழு செயல்படாமல் போனதை சான்றாக எடுத்துக் காட்டுகிறது.

சட்ட கட்டமைப்புக்குள் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் தொகையைத் தவிர வேறு ஜாதிகளின் மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதற்கு அரசமைப்பு சட்டத்திலோ அல்லது வேறெந்தவொரு  சட்டத்திலோ அனுமதி அளிக்கப்படவில்லை என்பதை ஒன்றிய அரசு தனது பிரமாண பத்திரத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. என்றாலும்,  இந்திய அரசமைப்பு சட்டத்தின்   15(4) மற்றும் 15 (5) பிரிவுகள், சமூக மற்றும் கல்வி அளவில் பின்தங்கியுள்ள குடிமக்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு சலுகைகளை அளிப்பதற்காக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு  பிரிவை மிகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது. அதனால், இத்தகைய இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் தொகையை கணக்கெடுப்பது அரசமைப்பு சட்டத்தின் கட்டமைப்புக்குள் இருப்பதே ஆகும். முழு அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைமுறையையே சமரசம் செய்து கொண்டுவிடும் என்ற அளவுக்கு மக்கள் தொகை அடிப்படைக் கணக்கெடுப்பையே திரித்துக் கூறுவதாக ஆகிவிடும் என்று அரசின் பிரமாண பத்திரம் குற்றம் சாட்டுகிறது.  1951 ஆம் ஆண்டு முதல் தாழ்த்தப்பட்ட,  பழங்குடியின  மற்றும் இதரஜாதி மக்கள் தொகையை தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டபோது, பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ள மோசமான பின்விளைவுகள் உண்டாகவில்லை என்னும்போது,   இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் என்ற மற்றொரு பிரிவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் போது மட்டுமே அத்தகைய மோசமான பின் விளைவுகள் எவ்வாறு ஏற்பட முடியும். இவ்வாறு வேண்டுமென்றே திட்டமிட்டு அச்சத்தை உருவாக்குவதற்கு அரசமைப்பு சட்ட அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு சட்ட அடிப்படையிலோ இடமில்லை. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களை வெளியிடுவதற்கு ஒன்றிய அரசு மறுப்பதும்,  வர இருக்கும் 2022 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஒரு முழுமையான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஒன்றிய அரசு மறுப்பதற்கும், அதற்காக கூறப்படும் காரணங்களை பரிசீலிக்கும்போது, அதில் எந்த விதமான தர்க்க ரீதியிலான அல்லது சட்ட ரீதியிலான நியாயம் ஏதுமில்லை. உண்மையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களையும், இந்திய மக்கள் தொகையில் ஒவ்வொரு ஜாதியிலும் இருக்கும் மக்கள் தொகை புள்ளி விவரங்களையும் தனிப்பட்ட சுயநலக் காரணங்களுக்காக அரசு நிருவாகம் மறைக்கிறதோ என்பதற்கான சந்தேகத்திற்கு அது இடம் அளிக்கிறது. இத்தகைய பொய்களையும் தந்திரங்களையும், முழுமையானதொரு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வலியுறுத்தும் பரந்து விரிந்திருக்கும் சமூக இயக்கங்களாலும், அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

நன்றி: 'தி இந்து' 20-10-2021

 தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment