இந்தியா
என்றொரு
மதச்சார்பற்ற நாடு
முன்பு இருந்தது
அது
காவி வண்ணத்தை
தன் மேனி முழுக்க
பூசிக் கொண்டதில்லை
பசுக்களை
காப்பதாய்ச் சொல்லி
மனிதர்கள் அங்கு
வேட்டையாடப்பட்டது இல்லை
பொதுத் துறை
நிறுவனங்கள் ஒவ்வொன்றாய்
தனியாருக்கு
தாரை வார்க்கப்பட்டதில்லை
சொந்த பணத்தை மாற்ற
வங்கி வாசலில்
காத்துக் கிடந்து
எவரும் செத்து மடியவில்லை
மாநில அரசுகளின்
அதிகாரங்களை
மொத்தமாய் மத்திய அரசு
கபளீகரம் செய்ததில்லை
வேளாண்
சட்டங்கள் மூலம்
விவசாயிகளின் கோவணங்கள்
உரியப் படவில்லை
இந்தியப் பிரதமர்
இந்தியாவில் இருந்ததை விட
அதிக நாட்கள்
வெளி நாடுகளில் இருந்ததில்லை
விளக்கேற்றி
பாத்திரங்களைத் தட்டி
வைரஸ்களை
விரட்டியது இல்லை
ஜிஎஸ்டி எனும் பெயரில்
இந்திய தொழில்துறை
குழி தோண்டி
புதைக்கப் படவில்லை
வெங்காய விலை உயர்வு
குறித்த கேள்விக்கு
தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என
எந்த மத்திய அமைச்சரும்
பதில் அளித்ததில்லை
காஷ்மீருக்கு
அளித்திருந்த உறுதி மொழியை
இராணுவம் கொண்டு
உடைத்து எறியவில்லை
பள்ளிப் பாடத் திட்டங்கள்
அத்தனையும்
ஓர் மதச் சார்பாய்
திருத்தி எழுதப்படவில்லை
ஆளுநர்கள் துணை கொண்டு
கொல்லைப் புறம் வழியே
ஆட்சி அதிகாரங்களுக்கு
யாரும் வந்ததில்லை
குடியுரிமை
சட்டதிருத்தம் மூலம்
சொந்த நாட்டு மக்களை
அகதிகள் ஆக்கியதில்லை
இந்தியா
என்றொரு
மதச்சார்பற்ற நாடு
முன்பு இருந்தது ...
- பாசு ஓவியச்செல்வன்
No comments:
Post a Comment