டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் மருத்துவத் தொழிலை தொண்டாக மதித்தவர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் மருத்துவத் தொழிலை தொண்டாக மதித்தவர்!

அவருடைய ஒவ்வொரு அறிவுரையும் எங்களை

வழி நடத்தும் - நம்மை உயர்த்தும் கலங்கரை வெளிச்சம்

பிறந்த நாள் - படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் உரை

சென்னை, அக்.8 டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் மருத்துவத் தொழிலை தொண்டாக மதித்தவர்; அவருடைய ஒவ்வொரு அறிவுரையும் எங்களை வழிநடத்தும் - நம்மை உயர்த்தும் கலங்கரை வெளிச்சம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

6.10..2021  அன்று காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மறைந்த  டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் பிறந்த நாள் - படத்திறப்பு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

இழக்கக்கூடாத ஒருவரை இழந்திருக்கின்றோம்

பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில், எத்தனையோ நிகழ்ச்சிகள், மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அதே நேரத்தில், பல படத்திறப்பு களும் நடைபெற்று இருக்கின்றன. அதில் நாங்க ளெல்லாம் கலந்துகொண்டு, மகிழ்ச்சியான நேரங்களிலும் சரி, துன்பம், துயரமும் இருக்கக்கூடிய காலகட்டமாக இருந்தாலும், எல்லாவற்றிலும் எளிதில் ஏற்க முடியாத ஒரு துயரத்தை, இழக்கக்கூடாத ஒருவரை இழந்திருக் கின்றோம் என்ற அந்த உணர்வோடு, எங்கள் பெரு மதிப்பிற்குரிய, என்னைப் போன்ற பலரையும் காப்பாற்றி, இங்கே நான் உங்கள்முன் நின்று பேசுகின்றேன் என்றால், அதற்குக் காரணமானவருடைய படத்தைத் திறந்து வைத்துள்ளேன். அய்யா நீதியரசர் அவர்களானாலும், அதேபோல, அருமைச் சகோதரர் டாக்டர் எஸ்.இராஜ சேகரன் அவர்களானாலும்,  பெருமதிப்பிற்குரிய டாக்டர் அவர்களுடைய வாழ்க்கையில் பெரும்பங்காற்றி, அவ ருக்குத் தோன்றாத் துணையாக இருந்ததோடு மட்டு மல்லாமல், எம்.எஸ்.ஆர். குடும்பம் என்பது அவரது தந்தையார் அய்யா சுப்பராயன் அவர்கள் எப்படி ஒரு பெருந்தன்மையோடு கிராமத்தில் எல்லா மக்களாலும், அனைத்துத் தரப்பினராலும், எல்லா ஜாதியினராலும், எல்லா வர்க்கத்தினர் என்ற வேறுபாடு இல்லாமல், மகிழ்வோடு அவர்கள் அத்துணை பேரும் மதித்தார் களோ, அதேபோல, அதற்கு அடுத்த தலைமுறை என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில், அந்த கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த பிறகுகூட, இந்தக் குடும்பத்தை ஒரு பெரிய ஆலமரம் போன்று இருந்து காப்பாற்றியவர் அம்மா அவர்கள்.

அருமைச் சகோதரர் டாக்டர் எம்.எஸ்.சீனிவாசன்

அதைத்தான் இங்கே வரவேற்புரையாற்றிய டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களுடைய சகோதரரும், ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளருமான அருமைச் சகோதரர் டாக்டர் எம்.எஸ்.சீனிவாசன் அவர்கள் இங்கே உருக்கத்தோடு சொன்னார்கள்.

அப்படிப்பட்ட ஓர் அரிய குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர். அவரிடம் மருத்துவச் சிகிச்சை பெற்றவர்கள் என்ற முறையில், எங்களைப் போன்றவர்கள் இன்றைக்கு இந்தப் பணியை செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றி ருக்கிறோம் என்றால், மிகுந்த நன்றி உணர்ச்சியோடு அவருக்கு செய்யவேண்டிய கடமை என்ற உணர் வின்பாற்பட்டு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

அப்படிப்பட்ட நிகழ்விற்கு, எங்களுடைய அன்பான அழைப்பை ஏற்று, இங்கே வந்திருக்கின்ற மாண்பமை நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு அய்யா அவர்களே,

அருமைச் சகோதரர் டாக்டர் .இராஜசேகரன் அவர்களே,

அதேபோல, டாக்டர் எம்.எஸ்.ஆர். குடும்பம் என்று சொன்னாலும், இந்தக் குடும்பத்தில் ஒரு மூத்த உறுப் பினராக,ஒரு வழிகாட்டியாக இருந்து, தன்னுடைய சகோ தரர்களை, சகோதரிகள் எல்லோரையும் வழிநடத்தக் கூடிய வாய்ப்பைப் பெற்றவர் என்று சொன்னால், அதற்கு முழு மய்யம் எங்கே இருக்கிறது என்று சொன்னால், அவருடைய வாழ்விணையரான அம்மா அவர்களிடத்தில்தான்.

சோகத்திற்கு முடிவு கட்டி, அடுத்த பணிக்குப் போகவேண்டும் - ஆயத்தமாகவேண்டும்!

எங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் - அவர்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொண்டிருப்பது என்பது - நாங்கள் எப்படி தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டி ருக்கின்றோமோ இந்த சோகத்தை - அதுபோல, அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலை.

இதுபோன்ற படத்திறப்பு நிகழ்ச்சிகளே - இதுபோன்ற ஒரு  சோகத்திற்கு முடிவு கட்டி, அடுத்த பணிக்குப் போக வேண்டும் - ஆயத்தமாகவேண்டும் என்பதற்காகத்தான் - நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நாம் ஒருவருக்கொருவர் நம்முடைய துயரத்தை, துன்பத்தை ஆற்றிக் கொள்கிறோம். துயரம் ஆற்றுப் படுத்துதல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

என்ன சங்கடம் என்று சொன்னால், இதே திடலில், இதே மேடையில், டாக்டர் எம்.எஸ்.ஆர். அய்யா அவர்களை அழைத்து, நாங்கள் பாராட்டியிருக்கிறோம், நன்றி செலுத்தியிருக்கின்றோம் - பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் மத்தியில்.

சிலர் இங்கே குடும்ப உறவுகள், ரத்த உறவுகளாக வந்திருக்கின்ற இருபால் சகோதர, சகோதரிகள், முப்பால் சகோதர சகோதரிகள் இருக்கலாம்.

அவர்கள் எல்லோருக்கும் மிகுந்த அன்போடு, வணக்கத்தோடு இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள வேண்டியது என்னவென்றால், எப்படியோ ஒரு விளக் கப்பட முடியாத ஒரு அன்பும், பாசமும் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களிடத்தில் எங்களுக்கு உண்டு.

பெரியார் திடலும் ஒரு குடும்பம்தான்; கருப்புச் சட்டை பெரியார் இயக்கமும் ஒரு குடும்பம்தான்!

எங்கள்பால் அவருக்கும் அன்பும், பாசமும் உண்டு. எங்கள்பால் என்று சொல்லும்பொழுது, தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, எங்கள் குடும்பத்திலேயே அப் படித்தான். குடும்பம் என்று சொல்லும்பொழுது நண்பர்களே, வெறும் ரத்த உறவு உள்ள குடும்பத்தை மட்டும் நான் குறிப்பிடவில்லை. பெரியார் திடலும் ஒரு குடும்பம்தான். எங்களுடைய கருப்புச் சட்டை பெரியார் இயக்கமும் ஒரு குடும்பம்தான் என்பதை பல பேர்  புரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பு இன்றைக்குக் கிடைத்திருக்கலாம்.

அத்துணை பேரும் டாக்டர் அவர்களோடு நேரி டையாகப் பழகாவிட்டாலும்கூட அவரால் பயன் பெற்றவர்களாகவும் இருப்பார்கள்; அவருடைய கருத்து களை நான் உள்வாங்கி, வாழ்வியலில் - மற்றவற்றில் எழுதும்பொழுது, அதைப் படித்துப் பயன்பெற்றவர் களாகவும் - கடல் கடந்து வாழக்கூடியவர்கள் கூட இருக்கிறார்கள் - உலகமெங்கும் வாழக்கூடியவர்களாகக் கூட இருக்கிறார்கள்.

படமாக மட்டுமல்ல,

நமக்கு என்றைக்கும் பாடமாகவும் ஆகியிருக்கிறார்!

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான மாமனிதர் படமாக ஆகிவிட்டார்; படமாக மட்டுமல்ல, நமக்கு வாழ்நாளில் என்றைக்கும் பாடமாகவும் ஆகியிருக் கிறார்.

எத்தனையோ செய்திகள், ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், உங்களை நான் நீண்ட நேரம் அமர வைக்க விரும்பவில்லை.

நம்முடைய துயரத்தை, துன்பத்தைப் பரிமாறிக் கொள்கிறோம், பகிர்ந்துகொள்கிறோம் என்பதற் காக, இன்றைக்கு இந்த ஏற்பாடுகளைச் செய்தி ருந்தபொழுது, பெரியார் அறக்கட்டளையின் துணைத் தலைவர் ராசகிரி கோ.தங்கராசு அவர்கள்  சில மாதங்களாக உடல்நலக் குறைவாக இருந்தார். 97 வயதாகும் அவர், தஞ்சைக்கு அருகிலுள்ள ராசகிரி என்ற ஊரில், நேற்றிரவு மறைந்துவிட்டார்.

எங்கள் குடும்பத்தின்மீது அக்கறை உள்ளவர்

ஒரு பற்று என்று சொல்லுகின்ற நேரத்தில், என்னு டைய வாழ்விணையர் திருமதி மோகனா அவர்கள், எம்.எஸ்.ஆர். அவர்களிடம் மிகுந்த மரியாதை உள்ளவர். அதேபோன்று, எம்.எஸ்.ஆர். அவர்களும், எங்கள் குடும்பத்தின்மீது ஒரு பெரிய அளவு அக்கறை உள்ளவர். அந்த வகையில், எல்லோரும் ஈடுபாட்டோடு இருப்போம்.

என்னுடைய மகன் அன்புராஜ் அவர்களும், என் னுடைய வாழ்விணையர் அவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்று இருந்தார்கள்.

பெரியார் அறக்கட்டளையின் துணைத் தலைவர் மறைவு செய்தி அறிந்தவுடன், அவர்கள் இருவரையும் அங்கே அனுப்பிவிட்டு, நான் இந்நிகழ்விற்கு வந்தேன். வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்களும், துயரங்களும் வரும்பொழுது, நாம் அதை சந்தித்தே ஆகவேண்டும்.

டாக்டரின் தந்தையார் சுப்பராயன் அவர்கள்

தந்தை பெரியாரை சந்தித்திருக்கிறார்!

இதில் ஒரு பெரிய வியப்பு என்னவென்றால், இந்தக் குடும்பத்தைப் பொறுத்தவரையில், டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களோடு ஒரு 20 ஆண்டுகளாக நெருக்கமான அறிமுகம். ஆனால், அதற்கு முன்பே, அவருடைய தந்தையார், அய்யா சுப்ப ராயன் அவர்கள், தந்தை பெரியார் அவர்களையே சந்தித்திருக்கிறார்.

இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு தொடர்பு என்றால், அய்யா சிவசங்கரன் அவர்கள், தலைமைப் பொறியா ளராக, மிகப்பெரிய அளவிற்கு இருந்தபொழுது, தந்தை பெரியார் அவர்களை இந்தத் திடலுக்கு நேரில் வந்து சந்திப்பார்கள். கலைஞர் அவர்களிடத்தில் மிகுந்த மரியாதை உள்ளவர். அவர் முதலமைச்சராக இருந்த பொழுதுதான், இவர் தலைமைப் பொறுப்புக்கு வந்தார்.

அப்போதும் நம்முடைய அருமை சகோதரர் சீனிவாசன் அவர்கள், அவரோடு பணியாற்றியவர்கள் பெரியார் திடலோடு  நெருக்கமாக இருந்தவர் தோழர் ஏகாம்பரம் போன்றவர்கள் - உதவிப் பொறியாளராக இருந்தார். கோபால்சாமி போன்றவர்கள், மற்றவர்கள்.

.சிவசங்கரன் - சி.வி.பத்மநாபன்

எனவே, நெடுஞ்சாலைத் துறை என்பதும், பெரியார் திடலும் நீண்ட காலமாக ஒன்றாக இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கும்.

.எஸ். என்றால், .சிவசங்கரன் அவர்கள். நேரடியாக வந்து அய்யா அவர்களை சந்திப்பார். அதுமட்டுமல்ல, சி.வி.பத்மநாபன் அவர்கள்.

ஒருமுறை எம்.எஸ்.ஆர். அவர்களை, பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்கள் வந்திருக்கின்ற பொழுது, .எஸ். அவர்களை வைத்துத்தான் அறி முகப்படுத்தினோம். பிறகு, அவரைப் பற்றி விசாரித்தார்.

அப்படிப்பட்ட ஒரு குடும்பம். எப்படி ரத்தினவேல் சுப்பிரமணியம் அவர்கள் முதல் மருத்துவராக இருந்தார். அதற்கடுத்தபடியாக, நம்முடைய எம்.எஸ்.ஆர். அவர்கள் முதல் மருத்துவராக பொது மருத்துவமனையில் இருந்தார்.

அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதும், கற்றுக்கொண்டதும் ஏராளம்!

அந்தக் காலகட்டத்திலிருந்து, பல்வேறு கால கட்டத்தில் மிக நெருக்கமாக ஒரு 20 ஆண்டு களுக்கு மேலாக நாங்கள் மிக நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு வந்தபோது, எனக்கு அவர் மருத்துவர் என்ற நிலையைத் தாண்டி - மருத்துவர் - நோயாளி என்ற உறவைத் தாண்டி, நண்பர்கள் என்ற நிலையில் பார்த்தீர்களேயானால், அவரிடம் நான் பெற்றுக்கொண்டது வெறும் மருத்துவ உதவி மட்டுமல்ல. அவரிடமிருந்து பெற்றுக்கொண்டதும், கற்றுக்கொண்டதும் ஏராளம்.

அவ்வளவு செய்திகளைப் படிப்பார். இன் னொரு வியப்பு இந்தப் படத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய பாடம் என்னவென்று சொன்னால் நண்பர்களே, கற்றுக்கொள்வதற்கு வயது கிடையாது என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர் அவர்.

இப்பொழுது வந்திருக்கின்ற நவீன எலக்ட்ரானிக் மெத்தட் - மின்னணு துறை - அவை அத்தனையிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. எப்படி கருநாடக இசையில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டோ - அதைவிட அதிக ஈடுபாடு மின்னணு துறையில்.

எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்கிவிடுவார். நான் அடிக்கடி சொல்வதுண்டு - வாழ்க்கை முறையைப் பார்க்கவேண்டுமானால், டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர் களுடைய வாழ்க்கை முறையைப் பார்க்கவேண்டும் என்பேன். மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் நேரத்தை ஒதுக்குவார். எங்களைப் போன்று பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அப்படி இருக்க முடியாது. மாலையில் நடைப்பயிற்சி செய்வேன்; நாரத கான சபாவிற்குப் போவேன். அங்கே யாராவது கச்சேரி செய்வார்கள், அதை கொஞ்ச நேரம் கேட்பேன் என்று சொல்வார்.

அவர் மருத்துவம் பார்ப்பதே மிகவும் வேடிக்கையாக இருக்கும். நான் சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு, அவரைப் பார்க்கச் செல்வேன்.

‘‘உங்களுக்கு ஒன்றும் இல்லைநீங்கள் போகலாம்''  என்பார்!

உடல்நிலையைப்பற்றி கடைசியாகத்தான் பேசு வோம். மற்ற செய்திகளையெல்லாம் பேசி முடித்தவுடன், கடைசியாக சொல்வார், ‘‘உங்களுக்கு ஒன்றும் இல்லை, நீங்கள் போகலாம்'' என்று சொல்வார்.

நீங்க நன்றாகத்தான் இருக்கிறீர்கள்; உங்கள் உடலுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை; நான்தான் இவ்வளவு நேரம் உங்களோடு பேசினேன் அல்லவா - என்று சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர் மருத்துவர்களி டையே, குருசாமி முதலியாருக்குப் பிறகு எனக்குத் தெரிந்து டாக்டர் எம்.ஆஸ்.ஆர்.தான் என்று பெரு மையாகச் சொல்லலாம்.

அநாவசியமாக நோயாளிகளாக வருகின்ற ஏழை களுக்கு செலவு வைக்கமாட்டார், அந்தப் பரிசோதனை செய்யுங்கள், இந்தப் பரிசோதனை செய்யுங்கள்

என்று.

மருத்துவத் தொழிலை தொண்டாக மதித்தவர்!

நான் மருத்துவர்களைப்பற்றி குறைவாக சொல்ல வில்லை. பலர் தொழிலாகப் பார்க்கிறார்கள். சிலர்தான் மருத்துவத்தைத் தொண்டாகப் பார்க்கிறார்கள். ஆனால், என்றைக்கும் அதைத் தொண்டாகவே மதித்தவர் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள்.

ஒரு காலத்தில் அது அவருக்குத் தொழிலாக இருந்திருக்கலாம்; வருமானத்தைப் பெரிதாக அவர் நினைத்ததே கிடையாது. எல்லாவற்றிலும் திருப்தி அடைந்த வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவர்.

என்னைவிட, என்னுடைய வாழ்விணையர் அவரைப்பற்றி சொல்வார். எங்கள் வீட்டுக்கு அவர் வரும்பொழுது, எங்கள் குடும்பத்தினரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம்.

அப்பொழுது டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் என்னிடம், ‘‘நீங்கள் திடலுக்குப் போங்கள், உங்களுக்கு நேரம் ஆகிவிட்டது; நான் இருந்து பேசிவிட்டுப் போகிறேன்'' என்று சொல்வார்.

எல்லாவற்றையும்பற்றி பேசுவார்; சமையல்பற்றி, வீட்டை பராமரிப்பதுபற்றி எதைப்பற்றிக் கேட்டாலும் எம்.எஸ்.ஆர். அவர்கள் சொல்வார்.  Every thing under the Sun என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோன்று, சூரியனுக்குக் கீழ் இருக்கின்ற அத்தனை விஷங் களைப்பற்றிக் கேட்டாலும் அவர் சொல்வார்.

சர்வீஸ் கமிஷனில் அவர் நீண்ட காலமாக இருந்திருக்கிறார். ஆங்கில இலக்கியத்தைப்பற்றி பேசுவார். பல்கலைக் கொள்கலன் போன்றவர். ஒரு களஞ்சியம் போன்றவர்.

அவர் அனுப்பும் செய்திகளை மூலப்பொருளாகக் கொண்டு வாழ்வியல் சிந்தனை கட்டுரைகள்!

பல நேரங்களில் எங்களுக்கு பற்பல செய்திகளை அனுப்புவார். நான் அதை மூலப்பொருளாக எடுத்துக் கொண்டு வாழ்வியல் சிந்தனை கட்டுரையை எழுது வேன். அவருடைய பெயரையும் போடுவேன் - டாக்டர் எம்.எஸ்.ஆர். இப்படி எழுதியிருக்கிறார் என்று.

இங்கே நான் எதைச் சொல்லவேண்டும் என்று நினைத்தேனோ, அதை நம்முடைய சகோதரர் வரவேற் புரையாற்றிய சீனிவாசன் அவர்கள் சொல்லிவிட்டார்.

எடுத்தவுடன் மிக உணர்ச்சிபூர்வமாக சொன்னார். கஷ்டம்தான், நானே அந்த உணர்வுகளை அடக்கிக் கொண்டுதான், மற்றவர்கள் முன் அந்த உணர்வுகளைக் காட்டக்கூடாது என்றுதான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.

அண்ணன் - அண்ணியல்ல;

தாய் - தந்தைதான்!

ஒரு தந்தை நிலையில், இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள், இரண்டு சகோதரிகள் இருக் கிறார்கள் என்றால், டாக்டர் எம்.எஸ்.ஆர் அவர் களும் சரி, அவரது வாழ்விணையரும் சரி - அண்ணன் - அண்ணி என்ற உறவோடு மட்டும் அவர்கள் இருக்கவில்லை - தாய் - தந்தை என்ற உணர்வோடுதான் இருந்தவர்கள்.

இந்தக் காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பதைப் பார்க்கவே முடியவில்லை. கூட்டுக் குடும்பம் எல்லாம் இப்பொழுது பூட்டுக் குடும்பமாக இருக்கின்றன. கெட்டியாகப் பூட்டுப் போடு கிறார்கள்.

ஆனால், இத்தனை சகோதரர்களையும் வைத்து சமாளித்து, ஒரு பிரச்சினையும் இல்லா மல், அழகான குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு குடும்பம். எனக்குத் தெரிந்து, எத்தனையோ குடும்பங்களோடு பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலேயே எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய, அமைதியான, விளம்பரமே இல்லாத ஒரு குடும்பம் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் குடும்பம்தான்.

சகோதரர்களைப்பற்றி  பேசுவார், எங்களிடம் பேசும்பொழுது, பெரிய பெரிய புத்தகங்களைப் பற்றி எவ்வளவு நேரம் பேசுகிறோமோ, அவரு டைய குடும்பத்தைப்பற்றியும், அவரது சகோதரர் களைப் பற்றியும், சகோதரிகளைப்பற்றியும் பேசுவார். இதுபோன்று ஒருவர் வாழ்க்கையில் அமைவது மிகவும் அபூர்வம்.

கருத்து மாறுபாடுகள் இருந்தபோதிலும் - ஒருபோதும் உரசல் வந்தது கிடையாது

அதேபோன்று, அரசியலைப்பற்றி நாங்கள் பேசும் பொழுது, என்னுடைய கருத்துக்கும், டாக்டர் அவர்களின் கருத்துக்கும் வித்தியாசமாக இருக்கும். நேர் மாறான கருத்தாக இருக்கும். நான் சொல்கின்ற கருத்து அவருக்கு உடன்பாடாக இருக்காது. ஆனால், எங்களுக்குள் ஒருபோதும் உரசல் வந்தது கிடையாது.

காரணம் என்னவென்றால், அவர் சொல்லும்பொழுது, நான் அந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வேன். அதே போன்று, நான் சொல்லும்பொழுது, அவர் அந்தக் கருத்தைக் கேட்டுக் கொள்வார்.

சரி, உங்களையும் நான் மாற்றப் போவதில்லை; என்னையும் நீங்கள் மாற்றப் போவதில்லை. உங்களு டைய கருத்தில் நீங்கள்  தெளிவாக சொல்கிறீர்கள். நான் என்னுடைய கருத்தை சொல்கிறேன் என்று சொல்வார்.

சீனிவாசன் அவர்களும் உங்கள் கருத்துள்ளவர்தான் என்று சிரித்துக்கொண்டே  சொல்வார்.

எல்லோரும் மக்கள் மனதில் குடியிருப்பதில்லை

அதேபோன்று நம்முடைய வழக்குரைஞர் எம்.எஸ்.இராஜசேகரன் அவர்களைப்பற்றியும் சொல்வார்.

பொருள் சம்பாதிக்கலாம், வாழ்க்கையில் உயரலாம், ஆனால், எல்லோரும் மக்கள் மனதில் குடியிருப்பதில்லை.

ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் அவர் மருத்துவர்

உள்ளத்தில் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளர்

என்று சொல்வதுபோன்று, அவர் பொய்யாது ஒழுகினார்.

பெரிய பெரிய நிலையில் உள்ளவர்களுக்கு, செல்வி ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் அவர் மருத் துவர். ஆனால், ஒருபோதும் அதைப் பயன்படுத்தி எதையுமே அவர் பெற்றுக்கொண்டது கிடையாது. வெளியில் சொல்லவும் மாட்டார். மற்றவர்களிடமும் எதுவும் சொல்ல மாட்டார்.

அவரிடமிருந்து சில மருத்துவ முறைகளை மட்டு மல்லாது, பொது வாழ்க்கையில் பொறுப்புகளில் இருக்கக்கூடியவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளமான பண்பாடுகளாகும். அவ்வளவு பெரிய தலைசிறந்த பண்பாடு உள்ளவர் என்று எப்பொழுதும் சொல்லலாம்.

அவருடைய வாழ்விணையரின் உடல்நிலையைப் பற்றி அதிகமாகக் கவலைப்படுவார். இங்கே டாக்டர் மீனாம்பாள் வந்திருக்கிறார். அவர், ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபொழுது, ஒரு உணவு விடுதியில், சைவ உணவு மிகவும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் வரவேண்டும் என்று சொல்லி, என்னை, டாக்டர் இராஜசேகரன், டாக்டர் எம்.எஸ்.ஆர். மூன்று பேரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

திடீரென்று தொலைப்பேசி அழைப்பு

அந்த விடுதியில் அமர்ந்திருந்தோம், உணவை எடுத்துக்கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டார்கள். திடீரென்று தொலைப்பேசியில் அழைப்பு வந்தது டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களுக்கு.

அவருடைய வாழ்விணையருக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்தது.

முகப்பேர் அருகே அந்த உணவு விடுதி இருந்தது. நான் கிளம்புகிறேன் என்று டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் கிளம்பிவிட்டார்.

சின்னச் சின்ன செய்திகளைக்கூட அவரிடம் இருந்து தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் ஏராளம் உண்டு.

ஓட்டுநர் பிள்ளைகள் படிப்பதற்கும், சமையற்காரர் பிள்ளைகள் படிப்பதற்கும்...

மருத்துவம் பார்த்து வருகின்ற பணத்தை அவர் எடுக்கமாட்டார். பொட்டலம் கட்டி, பொட்டலம் கட்டி அப்படியே டிராயரில் போட்டு வைப்பார். ஓட்டுநர் பிள்ளைகள் படிப்பதற்கும், சமையற்காரர் பிள்ளைகள் படிப்பதற்கும் அந்தப் பணத்தை எடுத்துக்கொடுப்பார். அந்தக் குடும்பத்தின் அந்தஸ்தை பார்க்கமாட்டார்; இதுதான் மனிதாபிமானம். அவருடைய வாழ்க்கை யிலிருந்து - இங்கே படமாக இருக்கின்றவரிடமிருந்து பாடமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியது, கற்றுக் கொள்ளவேண்டியது ஏராளம்.

வயது இடைவெளி என்பதே அவரிடம் கிடையாது

கடைசி வரையில் அவர் கற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்பியவர். வயது இடைவெளி என்பதே அவரிடம் கிடையாது. அதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்கிறேன்.

நான் வெளிநாடு செல்வதற்குமுன் அவரிடம் ‘‘ஏதாவது வேண்டுமா'' என்று நான் கேட்பேன். ‘‘ஒண் ணும் வேண்டாங்க'' என்பார்.

அவர் மிகவும் பிரியப்படுவது, எலக்ட்ரானிக்ட்ஸ் கூட்சில் புதுமையாக ஏதாவது இருந்தால், அதை விரும்புவார் அவர்.

நான் ஒருமுறை வெளிநாடு சென்று வந்தபொழுது, ஒரு எலக்ட்ரானிக்ட்ஸ் பொருளைக் கொடுத்தபொழுது, இதை எப்படி ஆப்ரேட் செய்வது? என்று கேட்டார்.

நான் என்னுடைய பேரனை அனுப்புகிறேன், கேட் டுக்கொள்ளுங்கள் என்பேன். என்னுடைய பேரனிட மிருந்து கற்றுக்கொள்வார்.

என்னங்க, சின்னப் பிள்ளைகளிடமிருந்து கற்றுக் கொண்டேன். இதில் நிறைய செய்திகள் இருக்கின்றன. மிக அற்புதமாக இருக்கிறது. ‘‘அலெக்ஸா பதில் சொல்லு'' என்று சொன்னால், பதில் சொல்கிறது என்றார்.

எல்லாம் தெரியும் என்று அவர் சொன்னதே கிடையாது

இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், சம்பவம் சிறிதுதான் - வயது இடைவெளி இல்லாமல், எல்லோரையும் மதித்து, எனக்கு எல்லாம் தெரியும் என்று அவர் சொன்னதே கிடையாது - இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் சொல்வார்.

அதேநேரத்தில், தன்னுடைய வாழ்க்கை என்பது தனக்காக மட்டுமல்ல - அது சமூகத்திற்கு என்று வாழ்ந்தவர். தந்தை பெரியார் அவர்கள் ஒன்றை மிக அழகாகச் சொல்வார்,

‘‘மனிதன் தானாகவும் பிறக்கவில்லை

தனக்காகவும் பிறக்கவில்லை'' என்று.

அந்தத் தத்துவத்தை கடைப்பிடித்தவர் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள்.

சாமியார்களின் மோசடிகளைப்பற்றி பிரச்சாரம் செய்யுங்கள் என்பார்!

வேடிக்கையாக சில நேரங்களில் சொல்வார், ‘‘நீங்கள் நிறைய பிரச்சாரங்களை செய்கிறீர்கள். சாமியார்களின் மோசடிகளைப்பற்றி நன்றாக விளக்கிச் சொல்லுங்கள்; மக்களை ஏமாற்றுகிறார்கள் அவர்கள். அதைப்பற்றி நீங்கள் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத் துங்கள்'' என்பார்.

அதைத்தானே நாங்கள் செய்துகொண்டிருக் கின்றோம்; நீங்கள்தான் என்னை தேற்றி, தெம்பாக்கி அனுப்புகிறீர்களே என்று வேடிக்கையாக நானும் சொல்வேன்.

எனவே, அவருடைய இழப்பு இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய இழப்போ -அதேபோல, நம் அனைவருடைய குடும்பத்திற்கும் அவருடைய மறைவு என்பது பெரிய இழப்புதான்.

மனிதத்தன்மை என்பது மற்றவர்களை மதிப்பது!

நாம்தான் எல்லாவற்றிற்கும் தயாராகவில்லையே தவிர, அவர் எல்லாவற்றிற்கும் தயாராகத்தான் இருந்தார். இப்படிப்பட்ட ஒரு மாமனிதரை - அவர் மருத்துவராக இருக்கலாம்; மற்றவர்களுக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், மனிதத்தன்மை என்பது இருக்கிறதே, அது மற்றவர்களை மதிப்பது. அதுதான் மிகவும் முக்கியம்.

ஆங்கிலத்தில் சொல்வார்களே, சிம்பதியைவிட எம்பதிதான் மிக முக்கியம் என்று. டாக்டர்களுக்கும், குறிப்பாக மனிதர்களுக்கும் எம்பதிதான் மிகவும் முக்கியம்.

இங்கே அவரைப்பற்றி, நீதிபதி அய்யா அவர்களும் சொன்னார்கள், டாக்டர் இராஜசேகரன் அவர்களும் சொன்னார்கள்.

டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களுக்கு குறிப்பிட்ட நண்பர்கள் என்றால், மூன்று பேரை வைத்திருப்பார். டாக்டர்களில் ஒரு நான்கு பேரை தனியாக வைத்தி ருப்பார்.  அவரவர்களுக்கு நேரத்தை ஒதுக்கிப் பேசுவார். எல்லாவகையிலுமே மிகச் சிறப்பாக வாழ்ந்த ஒரு சிறந்த மாமனிதர். ஏராளமான புத்தகங்களைப் படிப்பார். படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார். பகிர்ந்து கொள்வதோடு, எப்படி வாழவேண்டும் என்று சொல்வார்.

மாறுபடும்பொழுது, அதைச் சொல்வதற்குத் தயங்கமாட்டார். இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, தவறாக இருக்கிறது என்று சொல்வார்.

எல்லாவற்றையும்விட, அவருடைய வாழ்விணையர் உடல்நிலைப்பற்றி மிகவும் கவலைப்பட்டார்.

விழுதுகள்தான் ஆலமரத்தைத் தாங்கும் - மாறாக ஆலமரம் விழுதுகளைத் தாங்கியது!

அவர் இந்தக் குடும்பத்திற்குத் தாயாக இருந்து, ஒரு ஆலமரம் போன்று இருந்தவர். விழுதுகள்தான் ஆலமரத்தைத் தாங்கும்   - ஆனால், இந்தக் குடும்பத்தில் விழுதுகளையும் சேர்த்து ஆலமரம் தாங்கியது. அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்ல, எங்களைப் போன்றவர்கள் - இயக்கத் தோழர்கள் - இந்தத் திடலில் இருப்பவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களிடம் செல்லுங்கள் என்று சீதாராமன் அவர்கள் சொல்வார்.

எங்களுடைய உறவு என்பது இருக்கிறதே, அது ரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டது.

‘‘எம்.எஸ்.ஆர். சொன்னால்தான் நீங்கள் கேட்பீங்க’’

என்னுடைய வாழ்விணையர் அவர்கள், ஒரு விஷயத்தைப்பற்றி சொல்வார். நான் என்னுடைய பணிகளின் காரணமாக அதை மறந்துவிட்டேன் என்றால், உடனே அவர் ‘‘எம்.எஸ்.ஆர். சொன்னால்தான் நீங்கள் கேட்பீங்க'' என்று சொல்வார்.

ஏனென்றால், அவர் சொல்லிவிட்டார் என்றால், ‘‘No lost word on the subject'' என்ற அளவிற்குச் சொல்வார். அவரிடம் அப்படிப்பட்ட மதிப்பு - பாசம், பற்று. அப்படிப் பட்ட ஒருவரை நாம் மீண்டும் பெற முடியாது.

ஆனால், அவர் விட்ட பாடத்தைப் பெற முடியும். இங்கேகூட ஒரு நல்ல புத்தகத்தை (‘‘வாழ்க்கைப் பய ணத்தை சிறப்பாக நடத்திட நல்ல வழிகாட்டி) உங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

இந்தப் புத்தகம் வெறும் புகழுரை கட்டுரைகளைக் கொண்டதல்ல. பயனுறு கட்டுரைகள்தான். ஒருவருடைய வாழ்க்கை - ஓய்வு பெற்ற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

சி.டி.யில் உள்ளவற்றை புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்

ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு, எங்களிடம் ஒரு சி.டி. கொடுத்தார். அதில், .எஸ். அவர்களுடைய உறவுக்காரர்கள் அவருடைய வீட்டில் சாப்பிடு கின்றபொழுது பதிவு செய்திருக்கிறார்கள். அதில் எம்.எஸ்.ஆர். அவர்கள் தன்னுடைய வாழ்க்கை யைப்பற்றி, அவருடைய வாழ்விணையரைப்பற்றி, குடும்பத்தினரைப்பற்றி சொல்லியிருப்பார். அவருடைய வாழ்க்கையின் தத்துவம் என்ன? அவருடைய அனுபவம் எப்படிப்பட்டது? என்பதைப்பற்றி கேள்வி கேட்டு இருப்பார்கள்,  அதற்குரிய பதிலை மிக அழகாக சொல்லியிருப்பார். அந்த சி.டி.யை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அந்த சி.டி.யில் உள்ளவற்றை புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்.

இங்கே வெளியிடப்பட்ட புத்தகம் மற்றவர்களுக்கு மட்டும் பயன்படக்கூடியது. ஆனால், அந்த சி.டி.யில் உள்ளவை அவருடைய சுயசரிதை போன்று இருக்கும்; மீதி மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய அளவிற்கு இருக்கும்.

எம்.எஸ்.ஆர். அவர்களின் பிறந்த நாளிலேயே படத்திறப்பு!

ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சிறப்பான வாழ்க் கையை வாழ்ந்தார்கள். இன்றைக்கு அவருடைய பிறந்த நாளாகும். அவருடைய பிறந்த நாளன்றே அவருடைய படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.

என்றாலும், வாழ்க்கையிலே நாம் இன்பம் எவ்வளவு விழையவேண்டியது அவசியமோ, அந்த அளவிற்குத் துன்பத்தையும் ஏற்கவேண்டியது கட்டாயம். இரண்டும் இணைந்துதான் வாழ்க்கை.

ஆகவே, எல்லாவற்றிற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான், அவரே வாழ்ந்து காட்டிய தத்துவம்.

அந்த வகையில், நாம் ஆறுதல் பெறவேண்டும். எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கே வந்து உங் களுடைய நேரத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள். உங்களுக் கெல்லாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அய்யா நம்முடைய நீதியரசர் பாஸ்கரன் போன்ற வர்கள், தனவேல் அய்..எஸ். போன்றவர்கள், பேரா சிரியர் மங்களமுருகேசன் அவர்கள், டாக்டருக்கு மிக நெருக்கமான உறவுக்காரர். எங்களுடைய அழைப்பை ஏற்று அத்தனை பேரும் இங்கே வந்திருக்கிறீர்கள்.

இந்தக் குடும்பத்திற்கு நாங்கள் பிறவாத உறவுக் காரர்களாக  என்றைக்கும் இருப்போம்.

ஒவ்வொரு அறிவுரையும் எங்களை வழிநடத்தும்! நம்மை உயர்த்தும்!

எம்.எஸ்.ஆர். அவர்கள் படமாகிவிட்டாலும், எங் களுக்கு என்றைக்கும் வாழ்க்கை ஒளியாக வழிநடத்தக் கூடியவராக இருப்பார்.

அவருடைய ஒவ்வொரு அறிவுரையும் எங்களை வழிநடத்தும்! ஒவ்வொரு அறிவுரையும் நம்மை உயர்த்தும் கலங்கரை வெளிச்சம்.

அந்த உயர்ந்த மாமனிதரை, நாம் மறக்க முடியாது - அவர் மறையவில்லை, நம் நெஞ்சங்களில் நிறைந்தி ருக்கிறார் என்ற ஆறுதலோடு, அம்மா அவர்களே, அருமைச் சகோதரர்களே, பெருமைக்குரிய சகோதரி களே, தாய்மார்களே, நீங்கள் எம்.எஸ்.ஆர். அவர்க ளுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங் களை, உங்கள் வாழ்க்கையினுடைய படிக்கட்டுகளாக அமைத்துக்கொள்ளுங்கள் என்பதுதான் என்ற செய்தியை சொல்லி,

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அய்யா ஜஸ்டிஸ் எஸ்.ஆர்.சிங்காரவேலு அய்யா அவர்களையும், அதேபோல, டாக்டர் .இராஜசேகரன் அவர்களையும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பான ஏற்பாடுகளை சீதாராமன், சரவணன், கழகப் பொருளாளர் குமரேசன் மற்றும் அன்பர்கள் செய்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு அடக்கமான நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

எல்லா வகையிலும் நமக்கு வழிகாட்டும்

எனவே, எம்.எஸ்.ஆர். அவர்களுடைய சிறப்பான வாழ்க்கை, எல்லா வகையிலும் நமக்கு வழிகாட்டும் என்று சொல்லி, என்னுரையை முடிக்கிறேன்.

வாழ்க எம்.எஸ்.ஆர். அவர்களுடைய வாழ்க்கைப் பாடங்கள் -

வளர்க அவருடைய புகழ்!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சி விவரம்

மறைவுற்ற பிரபல மருத்துவ நிபுணரும், மருத்துவ கல்வியாளருமான பேராசிரியர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்களின் படத்திறப்பு, அவர் எழுதிய புத்தக வெளியீடு, நினைவேந்தல் சென்னை பெரியார் திடலில் அக்டோபர் 6ஆம் நாள் முற்பகலில் நடைபெற்றது. மறைந்த டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளில் நினைவேந்தல் நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகவும், போற்றுதலுக்கு உரியதாகவும் இருந்தது.

டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் படத்தினை அவரது குடும்பத்தினர் பங்கேற்றலுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உறவினர்கள், மருத்துவ உலகின் நண்பர்கள், பேராசிரியர் அவர்களின் மாணாக்கர்கள், மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் இளைய சகோதரர் பணி நிறைவு பெற்ற அரசு தலைமைப் பொறியாளர் எம்.எஸ். சீனிவாசன் வரவேற்றுப் பேசினார் தமது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அய்யா அவர்களின் வாழ்விணையர் திருமதி மோகனா அம்மையார், அவர்களின் புதல்வர் அன்புராஜ், கவிஞர் கலி பூங்குன்றன், வீ.குமரேசன், திராவிடர்கழகத்தவர், நீதியரசர் ஜஸ்டிஸ் எஸ்.ஆர். சிங்காரவேலு, டாக்டர் ராஜசேகரன், டாக்டர் முத்துசேதுபதி, டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாண்புமிகு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராசன், எங்கள் அண்ணன் பால் நட்பு கொண்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ உலகினர், நண்பர்கள், உறவுச் சொந்தங்கள் எனப் பலரும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறி எங்கள் துயரத்தில் துணை நின்ற அனைவருக்கும் இந்த வேளையில் எங்கள் குடும்பத்தினர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வு டாக்டர் எம்.எஸ்.ஆர் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் விழாவாக மட்டுமே அமைய வேண்டியது. அத்தகு வாய்ப்பாக மட்டுமே அமையாமல் அவருக்கு நினைவேந்தல் செலுத்தும் நிகழ்வாகவே நிகழ்ந்து விட்டதுடன் இந்நிகழ்விற்கு வந்திருப்போரை வரவேற்கும் முகத்தான் உங்கள் முன் நிற்கிறேன்.  டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் நினைவேந்தல் உரையினை நிகழ்த்த இருக்கும் திராவிடர் கழகத் தலைவர் எங்கள் பாசத்திற்கும் போற்றுதலுக்குரிய உரியவராக எங்கள் அண்ணன் பால் மிக உயரிய நட்பும் அளவிட முடியாத மதிப்பும் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்கள், படமாக இன்று நம் முன் வாழும் எங்கள் அண்ணன் டாக்டர் எம்.எஸ்.ஆர் படத்தினை திறந்து வைக்க ஏற்பாடும், அதை இக்கூட்டத்தின் மூலம் நடத்தி வைக்க இருப்பவரை, இரங்கல் உரை ஆற்றுமாறு வேண்டி எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் உங்கள் அனைவர் சார்பாகவும் முதற்கண் வரவேற்கிறேன் என குறிப்பிட்டார்

புத்தகம் வெளியிட்டு நீதியரசர்

எஸ்.ஆர்.சிங்காரவேலு உரை

மருத்துவத் துறைக்கு அப்பாற்பட்டு தனது அனுபவங்களின் பயன்கள் மற்றவர்களுக்கும், அடுத்த தலைமுறையினர்க்கும் செல்ல வேண்டுமென்று கருதி டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் எழுதிய 'வாழ்க்கைப் பயணத்தை சிறப்பாக நடத்திச் செல்ல வழிகாட்டி' எனும் குறுநூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார்.

டாக்டர் . இராஜசேகரன் உரை

நினைவேந்தல் நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் தொடக்கம் முதல் ஏற்பாடு செய்தவரும், பிரபல சிறுநீரக சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் . ராஜசேகரன், புத்தகத்தின் முதல் படியைப் பெற்றுக் கொண்டு மிகவும் உருக்கமான உரையினை ஆற்றினார். தான் மருத்துவக் கல்வி மாணவராக இருந்தபொழுது டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்கள் முதுநிலை மருத்துவக் கல்வியை முடித்திருந்த செய்தியில் தொடங்கி மருத்துவத்துறை மூத்த சகாவாக, சக நண்பராக, குடும்ப உறுப்பினர் போன்று மனதளவில் தாம் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களுடன் ஒன்றிவிட்ட நாள்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறி தனது நினைவேந்தல் உரையினை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களின் மூத்த சகோதரர் வழக்குரைஞர் எம்.எஸ்.ராஜசேகரன் நன்றி கூறினார்.

நினைவேந்தல் நிகழ்ச்சியில் டாக்டர் எம்.எஸ்.ஆர். அவர்களுடன் பழகியோர், சிகிச்சை ஆலோசனை பெற்றோர், மாணவர்கள் - மருத்துவர்கள் மற்றும் பல நண்பர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment