அர்ஜெண்டினாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 8, 2021

அர்ஜெண்டினாவில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி!

 பியூனஸ் அயர்ஸ், அக்.8 அர்ஜெண்டினா நாட்டில் சினோபார்ம் தடுப்பூசியை 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்துவதற்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜெண்டினாவில் கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு தொடங்கியதிலிருந்து, மொத்தம் 52 லட்சத்து 63 ஆயிரத்து 219 கரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 379 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,  சினோபார்ம் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான அவசர கால அனுமதியை  அந்நாட்டு அரசு வழங்கி யுள்ளது.இந்த தகவலை அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கார்லா விசோட்டி தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் சுமார் 6 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு  இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அவர்  தெரிவித்தார். இந்த நடவடிக்கை, தனி மனித கற்றல் முறை மீண்டும் தொடர்ந்து நடைபெற உதவும் என்று அந்நாட்டு கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனாவிலிருந்து முழுமையாக நாம் வெளியே வரவில்லை: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீபா, அக்.8  உலக அளவில் கடந்த வாரம் 30 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

54,000 பேர் வரை பலியாகி உள்ளனர். நிலைமை இன்னும் மோசமாகக் கூட மாறலாம். வைரஸ் கட்டுக்குள் இல்லாமல் போகலாம். கரோனா முடிந்துவிட்டதாகப் பலர் நினைக்கிறார்கள். நாம் இந்தத் தொற்றின் நடுவில் இருக்கிறோம். முழுமையாக கரோனாவிலிருந்து வெளியே வரவில்லை. இன்னும் பல நகரங்களில் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன. பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால், மக்கள் கரோனா முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். கரோனாவைக்  கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளே முதன்மையானதாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளைச் செலுத்த ஆயத்தமாகி உள்ளன. உலகம் முழுவதும் 23 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 கோடி பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 47 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என  உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பத் தலைவர் மரியா வாவ் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment