சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,அக்.27- தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் மாநில தடுப்பூசி கிடங்கில் தடுப்பூசிகளின் இருப்பு குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (26.10.2021) ஆய்வுசெய்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காசநோய், மஞ்சள்காமாலை, கரோனா உள்ளிட்ட 12 வகையான நோய்களை தடுக்க 11 வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. 9.42 லட்சம் குழந்தைகள் மற்றும் 10.43 லட்சம் பெண்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5.68 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 44 லட்சம் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மெகா முகாம்கள் மூலம் 1.33கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை 7ஆவது மெகா முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்படவுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துஆலோசிக்க 27.10.2021 அன்று காலை, நானும் துறை செயலரும் டில்லிக்குச் செல்கிறோம். தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கக் கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் அப்போது கோரிக்கை வைக்கப்படும். தற்போது வரை 850 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனை 1,650 ஆக உயர்த்தும்படி கேட்க இருக்கிறோம். ஒன்றிய ஆய்வுக் குழுவினர் தெரிவித்தபடி, 4 மருத்துவக் கல்லூரிகளில் சில பணி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றை அவர்கள் உறுதியும் செய்துள்ளார்கள்.
கூடுதலாக 10 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழ்நாட்டில் 19இடங்களில் மாவட்ட அரசு மருத்துவ மனைகள் அமைக்க வேண்டி உள்ளது. அதற்கு ரூ.950 கோடி நிதி வேண்டும். அது குறித்தும் கோரிக்கை வைக்கப்படவுள்ளது.
முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை அடுத்த வாரம் வழங்கப்படும்.
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 70 ஆயிரம், இங்கிலாந்தில் 40 ஆயிரம், ரஷ்யாவில் 30ஆயிரம் என்று கரோனா தொற்றுஅதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் இன்னும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment