கலி. பூங்குன்றன்
புதுடில்லியில் ஒரு நூல் வெளியீட்டு விழா! ‘இந்துத்துவாவின் பிதாமகனான வி.டி.சாவர்க்கரைப் பற்றிய நூல் அது. உதய் மதுகர், சைருபண்டிட் ஆகிய இரு ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளால் எழுதப்பட்ட நூல். நூலின் பெயர் “இந்தியப் பிரிவினையைத் தடுத்தவர் சாவர்க்கர்” (Veer Savarkar: The man who could have prevented partition). நூலை வெளியிட்டவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் - பங்கு கொண்டு உரை வீச்சு - ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். வேலிகளுக்கு ஓணான்கள்தானே சாட்சியங்களாக இருக்க முடியும்!
இந்த நிகழ்வில் ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கின் பேச்சுதான் “உச்சம்!” (High Light).
போட்டாரே ஓர் “அணுகுண்டு” (பாதுகாப்புத் துறை அமைச்சர் அல்லவா!)
பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர் என்றால், அது அவராக எழுதிடவில்லை; காந்தியார் சொல்லித்தான் எழுதினார் என்பது தான் அந்த அணுகுண்டைத் தோற்கடிக்கும் ஆகாயப் பொய்.!
யாரிந்த சாவர்க்கர்?
1910 ஆம் ஆண்டில், நாசிக் கலெக்டர் கொலை வழக்கில் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அந்தமான் சிறைக்கு 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கைக் கடிதத்தை எழுதினார். அப்போது காந்தியார் இந்தியாவிலேயே இல்லை; தென்னாப்பிரிக்காவில்தான் இருந்தார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களைக் கொடுத்தார்.
மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்தமான் சிறைச்சாலைப் பதிவுகள் காட்டுகின்றன.
மரணதண்டனை வழங்கப்பட்ட இடம், சாவர்க்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது. இதனால் அவர் மிகவும் பயத்துடன் வெளிறிய முகத்துடன் காணப்பட்டார். மேலும் அவர் சிறை அதிகாரி பைரிக்கு பணிவிடைகள் செய்தார். அதனால் அவர் சாவர்க்கருக்குப் பல சலுகைகளை வழங்கினார்.
“சாவர்க்கர் சிறைச்சாலைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாகத் தூண்டிவிடுவார். ஆனால், எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ளச் சொன்னால் பின்வாங்கிவிடுவார். சாவர்க்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.
நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாள்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்புக் கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்த காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. “தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காகப் பணியாற்றத் தயாராக இருந்தார்.”
“பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசமைப்பு முறைமையில் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கியுள்ளதாகவும், இப்போது வன்முறைப் பாதையை விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார். இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்க்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.” சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது
பின்னர் சாவர்க்கரும், அவரது ஆதரவாளர்களும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கோருவதை நியாயப்படுத்தியிருந்தனர். இது தங்களுடைய தந்திர திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இதன் காரணமாக சில சலுகைகளைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தனர்.
சாவர்க்கர் தனது சுயசரிதையில், “நான் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்தியாவுக்குக் கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம் இருந்து பறித்திருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
பகத் சிங் மன்னிப்புக் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிலையில் சாவர்க்கருக்கு மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இதற்குப் பதிலளிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், இந்திரா காந்தி கலை மய்யத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய்: “பகத்சிங்கிற்கும் சாவர்க்கருக்கும் இடையே மிகப்பெரிய அடிப்படை வேறுபாடு உள்ளது. பகத்சிங் குண்டு வீச முடிவு செய்த போதே, தூக்குத் தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து உயிர்த் தியாகம் செய்ய முடிவு எடுத்திருந்தார். மறுபுறம், வீர் சாவர்க்கரோ ஒரு ‘புத்திசாலி புரட்சியாளர்’ ஆவார்” என்கிறார்.
இந்த நிலையில் காந்தியாரை துணைக்கழைத்து, சாவர்க்கரின் கோழைத்தனத்துக்கு முலாம் பூசுகிறார்கள் - ஏன் முட்டுக் கொடுக்கிறார்கள் என்றால் இவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?
காந்தியார் படுகொலைக்கு மூளையாக இருந்தவரை - சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்தவரை காந்தியாரையே துணைக்கழைத்துத் தூக்கி நிறுத்துவது என்பது - கண்டிப்பாக ஆர்.எஸ்.எஸ். குணாம்சம் கொண்டவர்களால் தானே முடியும்!
No comments:
Post a Comment