பெரியாரும்-இராமலிங்கரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 16, 2021

பெரியாரும்-இராமலிங்கரும்

பெரியார் அவர்கள்  கண்டித்து மக்களிடையே பிரச்சாரம் செய்த வேதம், மதம், சாஸ்திரம், புராண - இதிகாசம் முதலியவை பற்றிய ஒவ்வொரு கருத்துக்கும் வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் பொன்மொழிகள் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்

1. இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம் அது

2. சாதியும் மதமும் சமயமுங் காணா ஆதி அநாதியாம் அது

3. சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

4. எவ்வகை உயிர்களும் இன்புற வேண்டும்

5. களங்கம் நீத்து உலகங் களிப்புற மெய்ந்நெறி விளங்கவேண்டும்.

6. உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக

7.            அருளே நம்மியல் அருளே நம் உரு

அருளே நம் வடிவு

8.            அருளே நம் அறிவு அருளே நம்மனம்

அருளே நம் குணம்

9.            அருளே நம் துணை அருளே நம் தொழில்

அருளே நம் விருப்பு

10.         அருளே நம் பொருள் அருளே நம் ஒளி

11.         அருளே நம் குலம் அருளே நம் இனம்

12.         அருளே நம் சுகம் அருளே நம் பெயர்

13.         மதத்திலே அபிமானங் கொண்டு உழல்வேன்

               வாட்ட மேசெயும் கூட்டத்திற் பயில்வேன்

இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன்

               ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்

குதத்தி லே இழி மலத்தினுங் கடையேன்.

14.         சாதி மதம் சமயமெனும் சங்கடம்விட்டு அறியேன்

               சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம்விட்டு அறியேன்

ஆதி அந்த நிலை அறியேன் அலை அறியாக் கடல்போல்

               ஆனந்தப் பெரும்போகத்து அமர்ந்திடவும் அறியேன்

15.         கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்

               கூவுகின்றார் பலன் ஒன்றுங்கண்டறியார் வீணே

நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்

               நீடுஉலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்

ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் ஆங்கே

               இலங்குதிருக் கதவு திறந்து இன்னமுதம் அளித்தே

தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியுறப் புரிவாய் சித்தமே.

16           வேதநெறி ஆகமத்தின் நெறிபவு ராணங்கள்

               விளிம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

               ஓதுகின்ற சூதனைத்தும் உள அனைத்துங் காட்டி

               உள்ளதனை உள்ளபடி உணரஉணர்த் தினையே சித்தமே.

17.         கலை உரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்

               கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெறமெய் உலகம்

               வாழ்ந்தோங்க வேண்டும்.

18.         எவ்வுயிர்த் திரளும் என உயிர் எனவே

               எண்ணிநல் இன்புறச் செயவும்

அவ்வுயிர்களுக்குவரும் இடையூற்றை

               அகற்றியே அச்சம் நீக் கிடவும் வேண்டும்.

19.         தங்கமே அனையார் கூடிய ஞான

               சமரச சுத்த சன் மார்க்கச்

சங்கமே கண்டு களிக்கவும் சங்கம்

               சார் திருக் கோயில் கண்டிடவும்

               துக்கமே பெறுஞ்சற் சங்கம் நீடூழி

               துலங்கவும் சங்கத்தில் அடியேன்

               அங்கமே குளிர நின்றனைப் பாடி

               ஆடவும் இச்சைகாண எந்தாய்.

20.         கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கு அடுத்த

               கடுந்துயர் அச்சம் ஆதிகளைத்

தவிர்த்து அவர்க்கு இன்பம்

               தரவும் வன்புலை கொலை இரண்டும்

ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க

               வாழ்த்தவும் இச்சைகாண எந்தாய்.

21.         மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும்

               வருத்தத்தை ஒரு சிறிது எனினும் கண்ணுறப்பார்த்தும் செவி உறக் கேட்டும்

               கணமும்நான் சகித்திட மாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால்

               இசைத்தபோது இசைத்தபோது எல்லாம்

நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல் வரந்தான்

               நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

22.         தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர்

               சூழ்ந்த வர் உறவினர் தாயர்

கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனுமிக்

               குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்

கண்டபோ தெல்லாம் மயங்கி என் உள்ளம்

               கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.

23.         சீர்த்த சிற்சபை அப்பனே எனது

               தெய்வமே என் பெருஞ் சிறப்பே

ஆர்த்த இவ்வுலகில் அம்மையர் துணைவர்

               அடுத்தவர் உறவினர் நேயர்

வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியினால்

               மெய்உளம் வெதும்பிய வெதுப்பைப்

பார்த்தபோது எல்லாம் பயந்து எனது உள்ளம்

               பதைத்தது உன்உளம் அறியாதோ.

24.         எட்டரும் பொருளே

               இலகிய இறைவனே உலகில்

பட்டினி உற்றார் பசித்தனர் களையால்

               பரிதவிக்கின்றனர் என்றே

எட்டிய பிறரால் கேட்டபோது எல்லாம்

               உளம் பகீர் என நடுக் குற்றேன்

இட்டி இவ்வுலகில் பசியினால் எந்தாய்

               என் உளம் நடுங்குவது இயல்பே.

25.         எளியரை வலியார் அடித்தபோது அய்யோ

               என் மனம் கலங்கிய கலக்கம்

தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன்

               திரு உளம் அறியும் எந்தாயே

களியரைக் கண்டு பயந்த என் பயந்தான்

               கடலினும் பெரியது கண்டாய்

அளியவர் பால் கொடியர் செய்தவெம் கொடுமை

               அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார்.

26.         வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்

               வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோறுமிரந்தும் பசி அறாது அயர்ந்த

               வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்து கின்றோர் என்

               நேர்உறக் கண்டு உளம் துடித்தேன்

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

               இளைத்தவர் தம்மைக் கண்டே இளைத்தேன்.

27.         நலிதரு சிறிய தெய்வம் என்று அய்யோ

               நாட்டிலே பலபெயர் நாட்டிப்

பலிதர ஆடுபன்றி குக்கிடங்கள்

               பலிக் கடா முதலிய உயிரைப்

பொலிவுறக் கொண்டே போகவுங்கண்டே

               புந்தி நொந்து உளம் நடுக் குற்றேன்

கலி உறு சிறிய தெய்வவெம் கோயில்

               கண்ட காலத்திலும் பயந்தேன்.

28.         நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை

               நண்ணிடா அரயரை நாளும்

கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக்

               கேடரைப் பொய் அலால் கிளத்த

படுநிலை யவரைப் பார்த்தபோது எல்லாம்

               பயந்தனன் சுத்த சன்மார்க்கம்

விடுநிலை உலக நடையெலாங் கண்டே

               வெருவினேன் வெருவினேன் எந்தாய்.

29.         சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்

               சாத்திரக் குப்பையும் தணத்தேன்

நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்

               நித்திய வாழ்க்கையும் சுகமும்

ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்

               அருட்பெரும் சோதி என்று அறிந்தேன்.

30.         பித்தெலாம் உடைய உலகர்தம் கலகப்

               பிதற்றெலாம் என்றுஒழிந் திடுமோ

சத்தெலாம் என்றென்று உணர்ந்த சன்மார்க்க

               சங்கம் என்று ஓங்குமோ.

31           புல்லலா மனத்தேன் என்னினும் சமயம்

               புகுதவா பொய்ந்நெறி ஒழுக்கம்

சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர்

               சொப்பனத் தாயினும் நினையேன்.

32.         கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன்

               கோடுறு குரங்கினில் குதித்தே

அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம்

               அறிந்தவன் போற்பிறர்க்கு உரைத்தேன்

மலைவுறு சமய வலை அகப் பட்டே மதி மயங்கினேன்.

33.         இருளான மலம் அறுத்து

               எல்லா உயிர்களும் இன்புற்று வாழ

மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்

               வழிதுறை தெரியாமல் மண்மூடிப்போக.

நூல்: பெரியாரும் இராமலிங்கரும்

வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், சென்னை - 7

No comments:

Post a Comment