சென்னை, அக்.12 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-2021-ஆம் ஆண்டுக்கான பணித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடங்களில் சேர கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
எனினும் தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ் சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ள தாலும், பல்வேறு விண்ணப்பதாரர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இணைய வழியில் விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 17.10.2021 என நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து 31.10.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சமையல் எண்ணெய்களில் கலப்படம் அதிகரிப்பு
ஒன்றிய அமைச்சரே கூறுகிறார்
புதுடில்லி, அக். 12- சோயா உற்பத்தி தொடர்பான பன்னாட்டு மாநாடு டில்லியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:-
சமையல் எண்ணெய்களில் பாமாயிலை கலப்பது அதி கரித்து வருகிறது. குறிப்பாக சோயா எண்ணெய் போன்ற வற்றில் பாமாயிலை கலக்கிறார்கள்.
சோயா எண்ணெய்யில் 40 சதவீதம் வரை பாமாயில் கலக்கப்படுகிறது. இது தொடர்பாக மக்களிடையே விழிப் புணர்வு ஏற்பட வேண்டும். எண்ணெய் கலப்படத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
சில எண்ணெய் பாக்கெட்களில் வேறு எண்ணெய் கலந்தால் அதுபற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால் அந்த எழுத்துக்களை கண்ணுக்கு தெரியாத சிறிய எழுத்தாக பதிவு செய்கிறார்கள். இதை மக்கள் யாரும் படித்து பார்ப்பது இல்லை.
எனவே வேறு எண்ணெய் கலக்கக்கூடிய பாக்கெட் களில் அதுபற்றிய குறிப்புகள் கொட்டை எழுத்துக்களில் இருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு தேவையான சமையல் எண்ணெய்யில் 65 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். சோயா பீன்சில் இருந்து எண்ணை தயாரிக் கலாம். எனவே இந்தியாவில் சோயா பீன்சின் உற்பத்தியை அதிகரித்து எண்ணெய் இறக்குமதியை குறைக்க வழி ஏற்படுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக தொழில் கூடங்களும், ஆராய்ச்சி அமைப்புகளும் தேவையான பணிகளை செய்ய வேண்டும்.
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களுக்கு எதிர்ப்பு உள்ளது. ஆனால் நாம் இறக்குமதி செய்யும் எண்ணெய்கள் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம்தான் உருவாக்கப்படுகிறது.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
ஏர் இந்தியா: டாடாவுக்கு மோடி அரசு அளித்த இலவச பரிசு சீதாராம் யெச்சூரி
புதுடில்லி, அக்.12 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று (11.10.2021) செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நாட்டின் தேசிய சொத்துகளை ஒன்றிய அரசு இடை விடாமல் கொள்ளையடித்து வருகிறது. டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியா ரூ.18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போன்றதுதான். பட்டப்பகலில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் கொள்ளையை போல் நடந்துள்ளது.
டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், அது மறுசீரமைக்கப்பட்டு விடும். மீதி ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே ஒன்றிய அரசுக்கு கொடுக்கும்.
ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடியை ஒன்றிய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும். அதாவது, பொதுமக்கள் தலையில்தான் அந்த கடன் சுமத்தப்படும். அதே சமயத்தில், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள், டாடா நிறுவனத்துக்கு சொந்தமாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை மின்சாரத் துறை அமைச்சர் தகவல்
சென்னை, அக்.12 சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அளித்த பேட்டி வருமாறு:-
தமிழ்நாட்டிற்கு மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப் பாடு இல்லை. தமிழ்நாட்டிற்கு 6 நாள் இருப்பு வைத்துக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. அதன்படி தற் போது 4 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவை உள்ளது. தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி வரவு வருகிறது. அதன்படி 4 நாட்களுக்கான கையிருப்பாக 2.40 லட்சம் டன் நிலக்கரி தமிழ்நாடு அரசிடம் சராசரி கையி ருப்பாக உள்ளது. எனவே நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை.
தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 41 சதவீதம் மின்சாரம், அனல்மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது. தமிழ்நாடு அரசின் சொந்த உற்பத்தியாக 1,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தனியார் அனல் மின் நிலையங்களிலிருந்து 2,830 மெகாவாட் பெறப்பட்டு வந்த நிலையில், நிலக்கரி விலை உயர்வு, மழைக்காலத்தில் நிலக்கரி வரத்து குறைவு என்பது போன்ற காரணங்களால், 1,300 மெகாவாட் மின்சாரம்தான் அரசுக்கு தனியார் அனல் மின் உற்பத்தியாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது.
பற்றாக்குறையான 1,500 மெகாவாட் மின்சாரத்தை ஈடுசெய்ய தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்டு வருகிறது.
ஒன்றிய தொகுப்பில் இருந்து நாள்தோறும் 3,500 முதல் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment