இது நாடா? அல்லது காடா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

இது நாடா? அல்லது காடா?

உத்தரப் பிரதேசம் லக்கீம்பூர் கேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக ஒன்றிய அமைச்சரின் மகன் தலைமையில் நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் ராமன் கஷ்யாப் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவல்களை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த இறப்பு குறித்து புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், உடற் கூறாய்வு முடிவுகளை தரவில்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், திகுனியா பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனம் மோதி உயிரிழந்த நபர்களில் ராமனும் ஒருவர் என்று அவர் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் கூறுகின்றன. அமைச்சர் மகன் ஏற்படுத்திய இந்த தாக்குதலில் உயிரிழந்த 8 நபர்களில் 4 பேர் விவசாயிகள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மற்ற 4 நபர்களில் ராமனும் ஒருவர்.

32 வயதான ராமனின் சகோதரர் பவன் இது குறித்து கூறிய போது, சில செய்தித் தொலைக்காட்சிகள் நடந்ததை திரித்துக் கூறுகின்றன என்று குறிப்பிட்டார். வைரலாகி வரும் அந்த காட்சிப் பதிவே, என்ன நடந்தது என்பதை தெளிவாகக் கூறுகிறது. கார்கள் மோதியதில் தான் அவர் இறந்தார். அவருடைய உடலில் கார் சக்கரத்தின் அச்சு பதிவாகியுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் மீது அமைச்சர் மகனின் கார் மோதியதில் உயிரிழந்தார் என்று பவன் தெரிவித்தார்.  ஆனால் சில செய்தி நிறுவனங்கள் அதனை மாற்ற முயற்சி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.

விவசாயியான ராமனின் தந்தை ராம் துலரே நிகாசன் காவல் நிலையத்தில் இது தொடார்பான புகாரை எழுத்துப்பூர்வமாக திங்கள் கிழமை கொடுத்தார். அந்த புகாரில், தன்னுடைய மகன், அமைச்சர் மகன் ஏற்படுத்திய தாக்குதலால் உயிரிழந்தார் என்றும், தன்னுடைய மகனைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக இந்த நிகழ்வை பார்த்த சாட்சியங்கள், கார் வருவதை ஊடகவியலாளர் பதிவு செய்து கொண்டிருந்த போது அவர் சுடப்பட்டதாக கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக வெளியான வீடியோவில் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நிகாசன் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வில்லை என்று கேள்வி எழுப்பிய போது, அந்த புகார் திகுனியா காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு தான் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று கூறினார்

நான்கு பேருக்கு அப்பாவான ராம் துலரே, ராமனின் உடலில் கார் ஏறிச் சென்றதுக்கான தடயங்கள் உள்ளன என்று கூறினார். அவருடைய உடலில் கற்களும் இருந்தன என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு ஆரம்பம் முதலே நாங்கள் ஆதரவை வழங்கி வந்தோம், ஏன் என்றால் நாங்களும் விவசாயிகள் தான். என்னுடைய மகன் முதலில் விவசாயி. பிறகு தான் அவர் பத்திரிகையாளர் என்று குறிப்பிட்டார்.

தந்தை, உடன் பிறந்தோர் மட்டுமின்றி, ராமனுக்கு ஆராதனா என்ற மனைவியும், 11, 3 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். புதன்கிழமை மாலை செய்தியாளர்கள் ஆராதனாவை சந்திக்க முற்பட்டபோது, கேமராக்கள் இறந்து போன தன்னுடைய கணவனை ஞாபகப்படுத்துகிறது என்று கூறி பேச மறுத்துவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்றார் ராமன். அவருடைய கைப்பேசி, வன்முறைக்கு பிறகு அணைக்கப்பட்டு இருந்தது, நாங்கள் மிகவும் கவலை அடைந்தோம். அடுத்தநாள் காலை காவல் நிலையத்தில் இருந்து வந்த அழைப்பில், ஒரு உடலை அடையாளம் காண வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அங்கே சென்று பார்த்த போது அது அவருடைய உடல் என்று தெரியவந்தது என்று கூறினார் பவன்.

புதன்கிழமை அன்று அரசுத் தரப்பில் ரூ.45 லட்சம் குடும்பத் திற்கு வழங்கப்பட்டது. ஆராதனாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும், அப்போது தான் அவர், அவருடைய குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

என் அண்ணன் விரும்பியதைப் போன்றே அரசு, பத்திரிகை யாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் பவன். இந்த அரசு நீதியை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறிய அவர், மற்றவர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்று அமைச்சர் மீதும் அவர் மகன் மீதும் எடுக்கப்படுகிறதா என்று பார்ப்போம் என்றும் பவன் தெரிவித்தார்.

செய்தி சேகரிக்கச் சென்ற ஒருவரின் உயிரை அதிகார  பீடத்து ஆணவம் பறிக்கிறது என்றால்  மக்களுக்கு யார்தான் பாதுகாப்பு?

சாமியார் ஆதித்யநாத் .பி. முதல் அமைச்சர் ஆன நிலையில் தன்மீது 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகள் உட்பட 20 ஆயிரம் வழக்குகளை ஒரே ஒரு சட்டத்தின் மூலம் 2017 டிசம்பரில் ரத்து செய்தார். ஒன்றிய அமைச்சர் ஷீவ்பாதாப் சுக்லா, பா... எம்.எல்.. ஷீதல் பாண்டே மீதிருந்த வழக்குகளும் அடங்கும்.

பா... ஆட்சியில் இது நாடா? கடும்புலி வாழும் காடா? பா... ஆட்சி எனில் அது பாசிசமே!

No comments:

Post a Comment