நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர்அப்துல்கலாமாக இருந்தாலும், அவசரத்துக்கு கட்சித் தலைவராக்கப்பட்ட அண்ணாமலையாக இருந்தாலும் சங்கராச்சாரியாரை சந்திக்கச் சென்றால் தரையில்தான் உட்கார்ந்திருக்க வேண்டும். சங்கராச்சாரியார்கள் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் அவரது நாற்காலிக்கு சற்றுத் தாழ்வான நாற்காலியில்தான் உயர்ந்த பொறுப் பில் இருப்பவர்கள் உட்கார வைக்கப்படுவார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்குகிற உரிமையைவிட, மனு நீதியும் வருணாசிரமும் வலியுறுத்துகிற (அ)நீதிதான் இங்கே அறிவிக்கப்படாத சட்டம்-நடைமுறை.
கடந்த 30 ஆண்டுகளில் பிரதமர்களாக இருந்த வர்களில் வி.பி.சிங்கும், குடியரசுத் தலைவர்களாக இருந்தவர்களில் கே.ஆர்.நாராயணனும்தான் சங்கராச் சாரிகளை சந்திக்காதவர்கள். ஆசி என்ற பெயரில் அரசமைப்பு சட்டத்தின் மாண்பை அடகு வைக்காத வர்கள். மற்றபடி, பொன்னாரு மன்னாரு என யாராக இருந்தாலும் தரையில் உட்கார்ந்தும், தாழ்வாக உட் கார்ந்தும் ஆசி பெற்றவர்கள்தான். ஹிந்து மதத்தின் ஒரு தரப்புக்கு சங்கராச்சாரி என்றால் இன்னொரு தரப்புக்கு ஜீயர். அவரிடமும் இப்படித்தான் உட் காருவார்கள்.
பிரதமர், குடியரசுத் தலைவர் ஒன்றிய அமைச்சர்கள் போன் றவர்களே இப்படி உட்காரும் காட்சிகளைகாகப்பார்த்து வந்தவர்களுக்கு, ஒரு ஜீயர் முன்பாக மாநில அமைச்சர் ஒருவர் சரிக்கு சமமாக உட்கார்ந்திருந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கும். அந்த அமைச்சர், ஹிந்து அறநிலையத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பி.கே. சேகர்பாபு. அவர் சரிக்கு சமமாக உட்கார்ந்திருந்தது திருவில்லிப்புத்தூர் ஜீயர் முன்பாகத்தான்.
‘ஜீயரா’ என்கிறதா உங்கள் மைன்ட்வாய்ஸ்? யெஸ்.. அவரேதான். தமிழாற்றுப்படை என்ற இலக்கிய உரையின் வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் பற்றி எழுதிய கட்டுரையின் கடைசி வரியில் எடுத்துக்காட்டியிருந்த ஒரு கருத்துக்காக அரசியல் தாதா எச்சு.ராஜா போல ஆன்மிக தாதாவாக ‘நானும் ரவுடிதான்’ என்று வரிந்து கட்டிய அதே ஜீயர்தான். சோடா பாட்டில் வீசுவேன் என்ற அதே பார்ட்டிதான்.
அமைச்சரை அவர் நேரில் சந்தித்தபோது, இருவரும் சம உயரத்திலான இருக்கையில்தான் உட்கார்ந்திருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட படத்தில், அமைச்சரின் உடல்மொழியே, ஜீயரைப் பார்த்து, “அய்யோ பாவம்” என்று சொல்வது போல இருந்தது.
தி.மு.க., என்பது ஹிந்து விரோதி என்றும், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்து விடுவார்கள் என்றும், அதனால் ஹிந்து அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை ‘மீட்டு’ தங்களிடம் கொடுக்க வேண்டும் என்றும் கொள்ளையர்கள் கூடி மாநாட்டுத் தீர்மானம் நிறை வேற்றியதுபோல பரிவாரங்களும் அவர்களை இயக்கு வோரும் கூவிக் கொண்டே இருந்தனர். தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து, தி.மு.க.வை தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சியில் உட்கார வைத்துவிட்டனர்.
எம்டன் குண்டு சென்னையில் விழுந்ததுமே இனி ஆங்கிலேயனுக்குப் பதில் ஜெர்மனியன் ஆட்சி வந்துவிடும் என்று ஜெர்மன் மொழி கற்கச் சென்ற வர்களின் வழித்தோன்றல்களுக்கா வழி தெரியாது? அதனால்தான், அமைச்சர் இருக்கும் இடத்தின் வழி தேடி வந்திருக்கிறார் ஜீயர். வந்தவரை மதிப்பது தமிழர் பண்பாடு. அதனை மேம்படுத்தியது திராவிட இயக்கம். எதிரியாக இருந்தாலும்-வயதில் இளையோ ராக இருந்தாலும் தன்னைத் தேடி வருபவரை எழுந்து நின்று வரவேற்கும் பண்பு கொண்டவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போலவே அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திராவிடப் பெருந்தலைவர்களும், மாற்றுக்கருத்துக் கொண்டோர் தங்களை நாடி வந்தால் அவர்களுக்குரிய மரியா தையை வழங்கினார்கள்.
அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஹிந்து அறநிலை யத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் பி.கே. சேகர்பாபு அவர்களும், தன்னைத் தேடி வந்த ஜீயருக்கு தன் வீட்டு சோபாவை வழங்கியது அவ ருக்கான மரியாதை. அதேநேரத்தில், சங்கராச்சாரி யையோ, ஜீயரையோ மற்ற அமைச்சர்கள் சந்திக்கும் போது தரையிலோ-தாழ்வான இருக்கையிலோ உட்காராமல் சமமான உயரம் கொண்ட நாற்காலியில் உட்கார்ந்தது, நூற்றாண்டு கால திராவிட இயக்கம் உருவாக்கித் தழைக்கச் செய்த சுயமரியாதை.
வரலாறு அறியாதவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அற்பத் தனமான 'மீம்ஸ்'களும் அபத்தமான 'ஹேஷ்டேக்'கு களும்தான். அமைச்சரும் ஜீயரும் சந்தித்த போது ஜீயர் சோபாவில் உட்கார்ந்திருந்தார் என்றும், அமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் என்றும் வலிய வம்பிழுத்து சிலர் வைரலாக்கப் பார்த்தார்கள்.
தேடி வருபவர்களை தங்கள் இல்லத்தின் வசதி யான இருக்கையில் உட்கார வைப்பது நமது பண்பாடு என்பதால், குறுக்குசால் ஓட்ட நினைத்தவர்களின் குறுக்குப் புத்தி தமிழ்நாட்டில் எடுபடவில்லை. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், ஆன்மிக நெறியில் வாழ்ந்த குன்றக்குடி அடிகளாரும் ஒருவருக் கொருவர் எந்தளவு மதிப்பளித்தார்கள் என்ற வரலாறு இந்த மண்ணுக்குரியது.
இது பற்றி அறியாத-பிரேக்கிங் நியூஸ்களை பிரசவிக்கும் இன்றைய செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியபோது, “அவர் சந்திக்க வந்தார். அவருக்குண்டான மரியாதையை நான் கொடுத்தேன். எனக்குண்டான மரியாதையை அவர் கொடுத்தார். மனிதனை மனிதனாக மதிக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். மனிதனை மனிதனாக நடத்து என்று சொல்பவர் மாண்புமிகு தமிழ் நாட்டினுடைய முதலமைச்சர் அவர்கள்” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டுச் சென்றார்.
தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து செம போடாகத் தான் இருக்கிறது.
- கோவி.லெனின்
நன்றி: 'தி நியூஸ்லைட்' இணையம், 21.10.2021
No comments:
Post a Comment