முரசொலி செல்வம்
உ.வே.சாமிநாத அய்யர் பரிதிமாற் கலைஞர் சுப்ரமணிய பாரதியார்
இதே தலைப்பில் துக்ளக் ஆசிரியர் மறைந்த சோ, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு தொடர் எழுதி வந்தார். இது பலருக்கும் நினைவிருக்கக் கூடும். இந்தக் கட்டுரைக்கும் - அதற்கும் தலைப்பு ஒன்றைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் பாஷையில் கூற வேண்டுமானால் எந்த ஸ்நான பிராப்தியும் இல்லை!
இன்றைய தினம் ஊடக விவாதங்களில் வலதுசாரி எனும் போர்வையில் பலர் (பெரும்பாலும் பிராமணர்கள்) பங்கேற்று, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதரித்து அதற்கு முட்டுக் கொடுத்து வருகின்றனர். அந்த பிராமண நண்பர்களில் (அவர்கள் நம்மை நண்பர்களாக ஏற்பார்களா என்பது சந்தேகமே!) பெரும்பாலானோரைப் பொறுத்த வரை நாம் அவர்களை நண்பர்களாகப் பாவித்தாலும், நம்மைத் தீண்டத்தகாதவர் களாகவே கருதி வெறுப்பு உமிழ்பவர்கள்!
ஆர்.எஸ்.எஸ். வழி நடத்தும் மோடி ஆட்சி எது செய்தாலும் அவர்களுக்குத் தித்திக்கும். பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் தளபதி ஸ்டாலின் ஆட்சி அவர்கட்கு எட்டிக் காயாகக் கசக்கும்!
இந்த பிராமணர்கள் முரட்டுத்தனமாக மட்டுமின்றி, குருட்டுத்தனமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரிப்பது அந்த சமூகத்தின் நலனுக்கு உகந்ததல்ல - என வரலாற்று ஆய்வாளரும், டில்லி அம்பேத்கர் பல்கலைக் கழகப் பேராசிரியரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன் எழுதிய ஆய்வுக் கட்டுரை மூலம் அந்த சமூக மக்களை எச்சரித்துள்ளார்.
பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த நான், (பேராசிரியர் ராஜன்குறை) எல்லாக் காலத் திலும் தமிழ் பார்ப்பனர்களில் பெரும்பான்மையானோர் பாரதிய ஜனதாவை ஆதரித் ததாக நினைக்கவில்லை. இப்போது உருவாகியிருப்பது; (அதாவது, பாரதிய ஜனதாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பது) ஒரு புதியதொரு போக்கு- அவர்களுக்குத் தீங்கு தரும் போக்கு என்றுதான் நினைக் கிறேன் எனக் குறிப்பிட்டு பேராசிரியர் ராஜன் குறை `இன்றைய சில தமிழ் பிராமணர்கள் செல்லும் பாதை சரியான பாதையல்ல; அவர்களுக்கு அவர்களே தீங்கிழைத்துக் கொள்ளும் செயல் என்று பல வரலாற்று ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர்களாக பார்ப்பனர்கள் இருந்தார்கள். அவர்களில் கணிசமானோர் காலனிய நிர்வாகத்திலும் பொறுப்பில் இருந்தார்கள் - என்று கூறி அதற்கு விளக்கமளித்துள்ள பேராசிரியர் ராஜன்குறை, எப்படிப்பட்ட புத்தி சாதுர்யத்தோடு அவர்கள் செயல்பட்டனர் என்பதை விளக்குகிறார். `
ஆங்கிலேய அரசை ஆதரித்ததற்குக் காரணம்; தங்களது (பிராமணர்களது) மேலாதிக்கத்தைக் காத்துக்கொள்ள என்றும் காங்கிரசை ஆதரித்தது வருங்காலத்தில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த என்றும் குறிப்பிடுகிறார்!
பிராமணர்களைப் பொறுத்தவரை, தங்களது (கருத்தியல்) மேலாதிக்கத்தையே தேச நலன் எனக் கருதுவார்கள், என துல்லியமாகக் கணித்துள்ளார்.
அந்தக் கணிப்பு உண்மை மட்டுமல்ல; மிகச் சரியானது என்பதைத்தான் இன்று ஊடகங் களில் வலதுசாரிகள் போர்வையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் சேஷாத்திரிகளும், சிறீராம்களும், சத்திய நாராயணாக்களும், பரத்களும் பா.ஜ.க. மீது விருப்பையும் தி.மு.க. மீது வெறுப்பையும் உமிழ்ந்துகொண்டிருக்கும் செயல்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன!
தி.மு.க.வைப் பொறுத்தவரை அதன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று ஆதிக்க மற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம் என்பது! அந்த ஆதிக்கம், மொழி ஆதிக்கமாக இருந்தாலும், ஜாதி ஆதிக்கமாக இருந்தாலும், இன ஆதிக்கமாக இருந்தாலும், மத ஆதிக்கமாக இருந்தாலும் அதனைத் தகர்த்திட வேண்டும் என்ற உணர்வில் உருவான இயக்கம்!
தனிப்பட்ட எந்த ஒரு ஜாதியையோ, மொழி யையோ, மதத்தையோ எந்தக் காலக் கட்டத்திலும் வெறுத்ததில்லை! தந்தை பெரியார் கூட, வர்ணாசிரம தர்மத்தைத்தான் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்தார். `மனித நாகரி கத்துக்கும், சுயமரியாதைக்கும் எதிரான ஒன்று அது என்றார்; வர்ணாசிரம தர்மத்தை தூக்கிப்பிடித்து பெரியாருக்கு எதிராக பிராமணர்கள் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த நடத்திய சதிகளின் விளைவால் பார்ப்பனிய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பாக தோற்றமளிக்கத் தொடங்கியது. சில ‘ஆதிக்கத் திமிர்’ கொண்ட பார்ப்பனர்கள் தங்களது மேதாவிலாசத்தைக் காட்ட நினைத்து எடுத்த தொடர்நிலைப்பாடுகள் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்தின் தலையில் விடிந்தது!
பேரறிஞர் அண்ணா, தி.மு.கழகத்தை துவங்கிய பின்னர், மிகமிகத் தெளிவாக, `நாங்கள் பார்ப்பனர்களின் எதிரிகள் அல்ல; பிராமணியத்தின் எதிரிகள் - என்று பல முறை விளக்கியுள்ளார்!
திராவிட இயக்கம் சமூக நீதிக்காகப் போராடுவதும், அதனை அடைந்திட தி.மு.கழக அரசு உருவாக்கிடும் சட்டங்களும், தங்களுக்கு எதிரானதாக பிராமணர்கள் அவர்களில் சிலர் கருதி துடிப்பதோடு மட்டுமின்றி அந்தச் சமுதாய மக்களிடம் நச்சுக் கருத்துகளை, திராவிட இயக்கத்துக்கு எதிராக விதைக்கின்றனர். பிராமணர் அல்லாத சமுதாயத்தினர் தங்களது உரிமைகளைக் கேட்பது, பிராமணர்களின் உரிமைகளைப் பறிப்பதாகக் கருதிக்கொண்டுவிஷத்தைக் கக்குகின்றனர்.
பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மணிவிழாவின்போது உரையாற்றிய தலைவர் கலைஞர் மிகத் தெளி வாக இதனைக் குறிப்பிட் டுள்ளார்.
சமூக நீதியைப் பெறுவதற்கு பல ஆண்டு காலம் போராட வேண்டிய காலகட்டத்தில் நம்மால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறோம். அதற்கு எத்தனையோ இடையூறுகள். பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத் தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மைச் சமுதாயத்து மக்கள் - என்று இவர்களுக் காகப் பாடுபடுகிறோம் என்றால், அவர்களுக்கு சமூகநீதி கோருகிறோம் என்றால், ஏற்கெனவே முன்னேறிய சமுதாய மக்களுக்குச் சமூக அநீதி வேண்டுமென்று நாம் கருதவில்லை. அப்படி யாரும் பொருள் கொள்ளக் கூடாது.
ஏற்கனவே முன்னேறியவர் களை - காலைப்பிடித்து இழுத்துக் கீழே தள்ளாமல் முன்னேறி யவர்களோடு போட்டி போடுகின்ற அளவிற்குப் பின்தங்கியிருக்கின்ற மக்களை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கொள் கையின் தாத்பரியம்.
அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படி இல்லாமல் ஏதோ பிற்படுத்தப் பட்டவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மைச் சமுதாயத்தினரும் முன்னேறி, ஏற்கனவே முன்னேறிய மக்களை எல்லாம் அழித்துவிட வேண்டும், அந்த சமுதாயத்தையே வீழ்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு சமூக நீதியைப் பற்றி நாம் பேசவில்லை. (கலைஞரின் முத்துக் குவியல்: பாகம் 11 பக்கம் 221)
இத்தனை தெளிவாக - நியாய உணர்வோடு நமது சமூக நீதிப் போராட்டம் தொடர்கிறது! இடஒதுக்கீடு என்பது முன்னேறிய சமுதாயத் துக்கு எதிரானது அல்ல; அதேநேரத்தில் முத்தமிழறிஞர், நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர் குறிப்பிட்டதைப் போல ஆண்டாண்டு காலமாக மனுதர்மம் என்ற பெயரில் உரிமைகளை இழந்து அழுத்தப்பட்டுக் கிடந்த சமூகத்தின் எழுச்சிக்காக உருவானது!
பேராசிரியர் ராஜன்குறை தனது ஆய்வுக் கட்டுரையில் பார்ப்பன சமூகம் அடிப்படையில் மிகவும் பன்மைப்பட்ட சமூகம்; வைணவம், சைவம் போன்ற பிரிவுகள் மட்டுமின்றி நிறைய உட்சாதிப் பிரிவுகளும் உண்டு. இவர்களிடத் திலே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கடுமை யானவை. எனவே ஓர் ஒன்றுபட்ட சமூகமாக மூன்று சதவிகித பார்ப்பன சமுதாயம் விளங்கிய தில்லை என்று குறிப்பிடுகிறார்!
பேராசிரியர் ராஜன்குறையின் கருத்து உண்மைதான்! ஆனால் இன்றைய நிலை என்ன? பி.ஜே.பி. ஆதரவு, திராவிட இயக்க எதிர்ப்பு என்றால் அந்த உட்பகைகளைப் பின் தள்ளிவிட்டு, பல பிராமணர்கள் ஒன்றி ணைந்து நிற்கின்றனர்! பி.ஜே.பி. ஆதரவு, தி.மு.க. எதிர்ப்பு என வந்தால் பிராமணர் களிடையே இருக்கும் சைவமும், வைணவமும் கைகோர்க்கின்றன! தமிழ் செய்தி ஊடகங்களில் வரும் விவாத நிகழ்வுகளில் இதனைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனுமின்றி அவர்கள் வஞ்சனைகளை உமிழும்போது அவர்களது விஷமத்தனம் வெளிப்படை யாகவே தெரிகிறது! இன்னும் சில பிராமணர்கள், மொழிசார்ந்த விவாதங் களில் கலந்துகொண்டு, தாங்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறோம், இல்லங்களில் தமிழ் பேசுகிறோம் என்பதை எல்லாம் மறந்து, இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிவருவதும் அவர்களது உள்ளத்தில் உறைந்துள்ள வன்ம உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
தமிழ்மீது கொண்ட பற்றால், பாசத்தால் தனது பெயரான சூரிய நாராயண சாஸ்திரியை பரிதிமாற் கலைஞராக மாற்றிக்கொண்ட பிராமணர்கள் உலவிய மண் இது!
தமிழைச் செம்மொழி என உரைத்தவர், பல்கலைக்கழக பட்டப் படிப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டபோது தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டியவர் பரிதிமாற் கலைஞர்!
இன்று ஊடகங்களில் தமிழுக்காக வாதாடாமல் - இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கும்போது, பரிதிமாற் கலைஞர், தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் போன்ற பிராமணர்கள் இன்று எங்கே போனார்கள்? யாமறிந்த மொழிகளிலே, தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் எனப் பாடிய பிராமணர் எங்கே? - என கேள்விகள் எழுகின்றன.
இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டில் சில பிராமணர்கள் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு தமிழுக்கு, தமிழர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.
ஒருசில இந்துத்துவா வெறியர்களின் இதுபோன்ற போக்குகள் ஒட்டுமொத்த பிராமணச் சமுதாயத்தின் மீதும் விடிகிறது.
பேராசிரியர் ராஜன் குறை, தனது ஆய்வுக் கட்டுரையின் இறுதியில் தெளிவாக எடுத் துரைத்துள்ளதையே, தி.மு.கழகத்தை எதிர்ப்பதே தங்களது பிறவிப் பயனாக எண்ணி செயல்படும் சில பிராமணர்களுக்கு நாமும் எடுத்துக் கூற விரும்புகிறோம்! பிராமண சமூகத்தின் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இளைஞர்களுக்கு அவர் வைக்கும் வேண்டுகோள் அவர்களால் பரிசீலிக்கப்பட வேண்டியது.
"சுதந்திரவாத, முற்போக்குச் சிந்தனை களுக்கு முகம் கொடுத்து தங்கள் சாதிய மனோபாவத்தை, சனாதனத்தை, மேட்டிமை வாதத்தைக் கைவிட்டு, மக்களாட்சி விழு மியங்களுக்கு நகர முயன்ற ஒரு சமூகம், இப்படியான ஒரு இந்துத்துவா பாசிச அணியில் ஒன்றுபட்டு அடையாள அரசியலை முன்னெடுப்பது விபரீதமான போக்காகும். இது பார்ப்பனர்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயப்பதல்ல. குறுகிய கால பாசிச மயக்கம் நீண்டகாலப் பெருந் தீங்காக மாறிவிடும்."
நன்றி: 'முரசொலி' (26.10.2021)
No comments:
Post a Comment