100 நாள் வேலை ஊதிய நிலுவை ரூ.1,178 கோடியை வழங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 3, 2021

100 நாள் வேலை ஊதிய நிலுவை ரூ.1,178 கோடியை வழங்க வேண்டும்

பிரதமர் மோடிக்கு

முதலமைச்சர் மு..ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.3  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1,178 கோடி நிலுவையை உடனடியாக வழங்கும்படி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு..ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் 100 நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப் பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டமும் ஒன் றாகும். இந்த 2021-2022 நிதியாண்டில் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப் பட்ட ரூ.3,524.69 கோடியில் மொத்த தொகையும் கடந்த செப்.15-ஆம் தேதி வரை தொழிலாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு, முழுமையாக பயன்படுத்தப் பட்டுள்ளது.

அதன்பிறகு இத்திட்டத்துக்கு நிதி விடுவிக்கப் படாததால் நவம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி ரூ.1,178.12 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப் படாமல் நிலுவையாக உள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் கிராமப் புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாக கருதப்படுகிறது. தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பல ஆயிரம் கிராமப் புறக் குடும்பங்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றன. பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதி யத்தை வழங்க ஏதுவாக உடனடியாக நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது, கோரிக்கையில் உள்ள நியாயத்தை நீங்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப சாதகமான நட வடிக்கையை எடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment