புதுடில்லி, நவ. 3- இந்தியாவில் சுமார் 92%க்கும் அதிகமான பள்ளி ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டு கொண்டு உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இதையொட்டி பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஒன்றிய இணையமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.. இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தற்போது நாட்டில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்வி நிறுவனங்களில் இயல்பு நிலை மற்றும் ஆர்வம் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
இதுவரை பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பணி புரிவோரில் 92 வழுக் காடுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 96%க்கும் அதிகமான ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.
ஜாதிவாரியாக மாணவர்கள் பிரித்து வரவழைப்பு: விளக்கம் கேட்கப்படும்
சென்னை, நவ. 3- சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஜாதிவாரியாகப் பிரித்து மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, தொடர்புடைய பள்ளி யின் தலைமை ஆசிரியருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை எம்ஜிஆர் நகரில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், மாணவர்களை ஜாதிவாரியாகப் பிரித்து, வருகைப் பதிவேடு தயாரித்து, அதைப் பின்பற்றி வந்த தாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், கரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு அறிவித்த தளர்வுகளின் அடிப்படையில் நேற்று முன்தினம் (1.11.2021) இப்பள்ளி திறக்கப்பட்டது. வருகைப் பதிவேடு ஜாதிவாரியாகப் பிரித்து வைக்கப்பட்டு உள்ளதால், சுழற்சி முறையில் மாணவர்களும் ஜாதிவாரி யாகப் பிரித்து வரவழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``தொடர்புடைய பள்ளியில் ஜாதி வாரியாக மாணவர்களைப் பிரித்து பள்ளிக்கு வரவழைத்தது தொடர்பாக விசாரணை நடத்தினோம். மாணவர்களை ஜாதிவாரியாகப் பிரிக்கக் கூடாது. வருகைப் பதிவேட்டில், அகர வரிசைப்படி பெயர்களை பதிவு செய்து, மாணவர் களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
அதனடிப்படையில், தற்போது அகர வரிசையில் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். மேலும், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு தொடர்புடைய பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு தாக்கீது அனுப்பியுள்ளோம். அவரிடம் விளக்கம் கேட்கப் படும். விசாரணையில், ஜாதிவாரியாகப் பிரித்து மாணவர் களை வரவழைத்தது உறுதி செய்யப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
நாட்டில் புதிதாக 10,423 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதுடில்லி, நவ. 3- நாடு முழுவதும் நேற்று (2.11.2021) ஒரே நாளில் 10,423 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக கரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 24மணிநேரத்தில் 10,423 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இது,கடந்த 259 நாட்களில் பதிவான குறைவான தினசரி பாதிப்பு அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நாட்டில் இதுவரை வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,42,96,237-ஆக உயர்ந்துள்ளது. தற்போது பெருந்தொற்று பாதிப்புக்கு 1,53,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை காட்டி லும், அதில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 15,021 பேர்கரோனா விலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் விகிதம் 98.21% ஆக இருக்கிறது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து, பெருந்தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,58,880-ஆக உயர்ந்திருக்கிறது. நாட்டில் நேற்று (2.11.2021) 10.09,045 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை
அரசாணை வெளியீடு
சென்னை, நவ. 3- தமிழ்நாட்டில் அரசுப் பணியாளர்களின் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்குவதற் கான புதிய வழிகாட்டுதல் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்.7ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ‘‘அரசுப் பணியாளர் கள் தங்கள் பணிக்காலத்தில் பெறும் கூடுதல் கல்வித் தகுதிகளுக்கான ஊக்க ஊதிய உயர்வு 2020ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
அரசுப் பணியாளர்கள் பெறும் கூடுதல் கல்வித்தகுதி மூலம் அவர்கள் பணித்திறன் மற்றும் செயல்பாடுகள் மேம் படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு உயர்கல்வித் தகுதிக் கான ஊக்கத் தொகை, ஒன்றிய அரசால் அண்மையில் அறிவித்துள்ள வழிகாட்டுமுறைகளின் அடிப்படையில் விரைவில் அறிவிக்கப்படும்’’ என அறிவித்தார்.
அதன்படி, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு முறைகளின் அடிப்படையில் மாநில அரசுப் பணியாளர்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊக்கத் தொகையாக, முனைவர் படிப்பு முடித்தால் ரூ.25 ஆயிரம், பட்ட மேற்படிப்பு அல்லது அதற்கு சமமாக படித்திருந்தால் ரூ.20 ஆயிரம், பட்டம், பட்டயப்படிப்பு முடித்திருந்தால் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment