கலைஞருக்குப் பிறகு வெற்றிடம் அல்ல - கற்றிடம்!
திண்டுக்கல்: ‘நீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
திண்டுக்கல் நவ.3 கலைஞருக்குப் பிறகு கட்சி இருக் குமா? என்று கேட்டனர்; கேட்டவர்கள் இருக்குமிடம் தெரியாமல் போனார்கள்; கலைஞருக்குப் பிறகு வெற் றிடம் அல்ல - கற்றிடம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?'' கருத்தரங்கம்
கடந்த 19.10.2021 அன்று திண்டுக்கல் ஜி.எஸ்.மீட்டிங் ஹாலில் (நாயுடு மகால்) நடைபெற்ற ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? தலைப்பில் கருத்தரங்கம், ‘கற்போம் பெரியாரியம்', ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' ஆகிய நூல்கள் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
திண்டுக்கல் மாநகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக - இந்தக் கரோனா கட்டுப்பாடு மிகுந்த காலத்திலும், வெளியில் பெருந்திரளாக மக்களைச் சந்தித்துப் பேசக்கூடிய நாங்கள், இன்றைக்கு ஓர் அரங்கத்தில் உங்கள் எல்லோரையும் சந்திக்கக் கூடிய அளவிற்கு - இந்த அரங்கம் ஒரு முழு அரங்கமாக இருக்கக்கூடிய அளவிற்கு, எல்லா வகைகளிலும் சிறப்பான ஏற்பாடுகளை - அறிவிக்கப்பட்டு, ஒரு வார காலத்திற்குள்ளாக இவ்வளவு அற்புதமான ஏற்பாடுகளை செய்வதற்குக் காரணமாக இருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தினுடைய தலைவர் மானமிகு செயல்வீரர் திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் அருமைத் தோழர் வீரபாண்டியன் அவர்களே,
இரண்டு நூல்கள் அறிமுகம்!
இந்த நிகழ்ச்சியில், இரண்டு நூல்கள் ‘‘கற்போம் பெரியாரியம்‘‘, நூலும், ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ என்ற ஆர்.எஸ்.எஸ்.பற்றிய பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தக் கூடிய அந்த நூலும் அறிமுக விழா என்ற பெயராலே, நம்முடைய மாண்பமை கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள், இங்கே சிறப்பான ஓர் உரையை நிகழ்த்திய இந்த வாய்ப்பும் இருக்கக் கூடிய அளவிற்கு - அருமையான இந்த விழாவைப் பயன்படுத்தி, ஓர் நல்ல உரையை ஆற்றியிருக்கக்கூடிய இந்த மாவட்டத்தினுடைய திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான - எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக வந்தாலும் சரி, எந்த நிலையிலும் கொள்கை வீரராகவே, லட்சிய வீரராகவே திகழ்ந்து கொண்டிருப்பவர் நம்முடைய அமைச்சர் அவர்கள் என்ற பெருமைக்குரிய அமைச்சர் அவர்கள், இந்த நூல்களை அறிமுகப்படுத்தி, எங்களுக்குச் சிறப்பு செய்த அமைச்சர் அய்.பெரியசாமி அவர்களே,
அதேபோல, வரவேற்புரை நிகழ்த்திய மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களே,
தொடக்கவுரை நிகழ்த்திய நகர செயலாளர் வழக் குரைஞர் ஆனந்த பூமிதாசன் அவர்களே,
வழக்குரைஞர் சுப்பிரமணியம்
முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பொதுக்குழு உறுப் பினர் நாராயணன் அவர்களே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், என்னுடைய நெருங்கிய குடும்பத் தோழரும், கொள்கை வீரரருமான வழக்குரைஞர் சுப்பிரமணியம் அவர்களே,
தேனி மாவட்ட கழகத் தலைவர் ரகுநாதன் அவர் களே, மண்டல தலைவர் நாகராஜன் அவர்களே, மண் டல செயலாளர் கருப்புச் சட்டை நடராஜன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் ராஜப்பா அவர்களே, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் செல்வேந்திரன் அவர்களே, தமிழக வாழ்வுரிமை கட்சிப் பொறுப்பாளர் அந்தோணி அவர்களே,
அருமைத் தோழர் பாலபாரதி
இவ்வளவு சிறப்பான இந்த நிகழ்ச்சியில், ஒரு முத்தாய்ப்புப் போன்ற ஓர் அருமையான உரையை இன்றைக்கு எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினை என்ன என்பதையெல்லாம் சிறப்பான முறையில் எடுத்து வைத்து, ஒரு சிறந்த போராளியாகவே என்றைக்கும் இருக்கக்கூடிய, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்று சொல்வதைவிட, எந்நாளும் ஒரு சமூகப் போராளி என்ற பெருமையைப் பெற்றிருக்கக்கூடிய அருமைத் தோழர் பாலபாரதி அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, சிறப்பான அளவிற்கு பெரியார் உலகத்திற்கு உதவியும், எங்களுக்கெல்லாம் பெருமை சேர்த்துக் கொண்டு, சென்னையில் பெரியார் நூலக வாசகர் வட்டம் என்ற அமைப்பிற்கு ஏறத்தாழ 41 ஆண்டுகள் அங்கே பணிபுரிந்து, இந்த மண், சொந்த மண் என்கின்ற காரணத்தினால், திண்டுக்கல்லுக்கே வந்து, குடியமர்ந்து இருக்கக்கூடிய பெரியார் சுயமரியா தைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் டிரஸ்ட்டி களில் ஒருவரான அருமைத் தோழர் ந.கிருஷ்ணன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பரூக் அவர்களே,
மற்றும் மிகப்பெரிய அளவிற்கு ஓர் உரையை, வகுப் பறையைப் போன்று, அமைச்சர் அவர்கள் சொன்ன தைப்போல, ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை‘ என்ற நூலைப்பற்றி உரையாற்றிய பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் தலைவர் முனைவர் நேரு அவர்களே,
‘கற்போம் பெரியாரியம்‘ என்ற நூலைப்பற்றி மிகத் தெளிவாக உரையாற்றிய பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் - பெரியார் உயராய்வு சிந்தனை மய்யத்தின் தலைவர் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களே,
மேனாள் நகர மன்றத் தலைவர் தோழர் பஷீர் அகமது அவர்களே, வழக்குரைஞர் அன்பழகன் அவர்களே, நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மாவட்ட இணை செயலாளர் காஞ்சிதுரை அவர்களே,
சிறப்பாக இங்கே குழுமியுள்ள தாய்மார்களே, சகோ தரிகளே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னு டைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் ஓர் ஒப்பற்ற ஆட்சி
நீட் தேர்வு ஒழிப்பு என்ற ஒரு சுற்றுப்பயணம் - ஒரு பெரிய போராட்டத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. நம்மீது திணிக் கப்பட்டு இருக்கிறது - ஆகவே, அதைப்பற்றி யெல்லாம் மக்கள் மத்தியில் விளக்கியாகவேண்டும் - மேலும் மேலும். நல்ல வாய்ப்பாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் ஓர் ஒப்பற்ற ஆட்சி நம்முடைய சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்களின் தலைமையில் அமைந்து, அமைச்சர் போன்றவர்கள், அறிவார்ந்தவர்கள், செயலூக்கம் உள்ளவர்கள் அவர்களுக்குப் பக்க பலமாக இருந்து ஒரு நல்லாட்சியைக் கொடுத் திருக்கிறார்கள்.
இந்த நல்லாட்சி- உள்ளாட்சி வரையில் தொடருகிறது என்பதை தெளிவாக இன்றைக்குக் காட்டி, ஒரு வெற்றி வீரராக இன்றைக்கு இருக் கிறார்கள்.
திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதை சொல்லும்
நாடாளுமன்றத் தேர்தலானாலும் சரி, சட்டப்பேர வைத் தேர்தலானாலும் சரி, உள்ளாட்சித் தேர்தலானாலும் சரி - திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதை சொல்லும் என்பதை மிகத் தெளிவாக இன்றைக்கு உணர்த்தக் கூடிய ஒரு நல்ல சூழல் ஏற்பட்டு, அந்த மகிழ்ச்சியோடு இருக்கக்கூடிய நேரத்தில், கவலை தரக்கூடிய விஷயங்களையும் நம் வாழ்க்கையில் மறந்துவிடக் கூடாது.
எவை எவையெல்லாம் ஆபத்துகள் - நம்முடைய பயணங்களில், நம்முடைய என்று சொல்கின்றபொழுது, திராவிடர் இயக்கத்தையோ அல்லது இடதுசாரியாக இருக்கக்கூடிய புரட்சி அமைப்புகளையோ அல்லது கூட்டணிக் கட்சிகளை மட்டும் சொல்லவில்லை. அனைத்து மக்கள் - இன்னுங்கேட்டால், ஆர்.எஸ்.எஸில் இருக்கின்ற பார்ப்பனரல்லாதார் - ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள்; பி.ஜே.பி.யில் தெரிந்தோ, தெரியாமலோ பாதை தவறிப் போயிருக்கின்றவர்கள் - பல்வேறு காரணங் களால் இருக்கக்கூடிய எனதருமை திராவிடப் பெருங்குடி மக்கள்.
யாரை, ஜாதி சூத்திரர்களாக ஆக்கியிருக்கிறதோ -
யாரை, ஜாதி வருணாசிரம தர்மம் பஞ்சமர்கள் என்று ஆக்கி இருக்கிறதோ-
அவர்கள் அத்தனை பேருடைய பிள்ளைகளும் எதிர்காலத்தில் படிக்கவேண்டும் - பதவிக்குப் போக வேண்டுமானால், ஒரே வழி இதுபோன்ற போராட்டங் களில் ஈடுபட்டு, அவர்களுடைய உரிமையைக் காப்ப தற்குத்தான் வழிகள் என்னவென்று நாம் பார்க்க வேண்டும்.
அனைத்து மக்களுக்காகவும் போராடக் கூடியவர்கள் நாங்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்துக்காரர், திராவிடர் கழகத்துக்காரர்களின் பிள்ளைகள் டாக்டர்களாக வரவேண்டும்; கம்யூனிஸ்ட்டு கட்சிக்காரர்களின் பிள் ளைகள், காங்கிரஸ் கட்சிக்கார்களின் பிள்ளைகள் டாக்டர்களாக வரவேண்டும் என்பதற்காக நாங்கள் போராடவில்லை. அனைத்து மக்களுக்காகவும் நடத்தப் படக் கூடிய போராட்டம்.
இன்னுங்கேட்டால், அவர்களால் பேச முடியாததை, நாங்கள் அவர்களுக்காகப் பேசுகிறோம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
அந்த வகையில், இந்த வாய்ப்பிலே இரண்டு நூல்கள்; மிகப்பெரிய அருமையான நூல்கள்.
உண்மையைச் சொன்ன
கூட்டுறவுத் துறை அமைச்சர்
எப்போதும், மற்றவர்களுக்கும், திராவிடர் இயக்கத்திற்கும் என்ன வேறுபாடு என்று சொன்னால், இங்கே அமைச்சர் மிக அழகாக உரையாற்றினார். கூட்டுறவுத் துறை அமைச்சர், இப்பொழுது மிக முக்கியமாகத் தேவையே கூட்டுறவுதான் - சமுதாயத்தில்.
எல்லா மக்களும், ஜாதியைவிட்டுவிட்டு, கூட்டுறவை நாட வேண்டும். அந்த உறவு - கூட்டுறவு - கூட்டுறவைப் பிரிப்பது ஜாதி, வருணாசிரம தர்மம்.
எனவே, நாட்டில் ஆயிரம் உண்டு ஜாதி என்று சொல்வதற்கு இடமே கிடையாது - இருக்கக் கூடாது என்று சொல்லுகின்ற நேரத்தில்,
அப்படிப்பட்ட அருமையான அமைச்சராக இருந்துகொண்டு, அவர் உரையாற்றும்பொழுது ஒன்றைச் சொன்னார்.
எப்பொழுதுமே நாங்கள் உண்மையைச் சொல்லக்கூடியவர்கள் என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இந்தப் புத்தகத்தை நான் இன்னும் படிக்கவில்லை என்றார். இந்த மாதிரி உண்மையை, ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் சொல்லக்கூடியவர் என்று சொன்னால், இந்த இயக்கம் உண்மையை பேசக்கூடிய இயக்கம்.
அவர் அடுத்து சொல்லிவிட்டார்; நாங்கள் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பதற்குக் காரணம் என்னவென்றால்,
வாழ்வியல் சிந்தனைப் போன்ற புத்தகங்களை பல நேரங்களில் படித்து, இதே திண்டுக்கல்லில் பல நேரங்களில் பேசியதைக் கேட்டிருக்கிறோம்.
கற்றலின் கேட்டலே நன்று
அதோடு, நம் நாட்டில் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு பழமொழியைச் சொல்லிக் கொடுத்தி ருக்கிறார்கள். கற்றலின் கேட்டலே நன்று.
அவர் இந்தப் புத்தகத்தை தனியே படிப்பதைவிட, நாங்கள் பேசும்போது கேட்டாலே, அது அவருக்குப் போதும்; நூறு மேடைகளில் அதைப் பயன்படுத்திக் கொள்வார்.
அவருக்கு இருக்கின்ற பல பணிகளில், இவ்வளவு நேரம் அமர்ந்து கேட்கிறாரே, அதுவே பெரிய விஷயம்.
புத்தகங்கள் அறிவாயுதங்கள்
காரணம், அவர் வகுப்பறையில் இருப்பதுபோன்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் புத்தகங்கள் ஆயுதங்கள் - அறிவாயுதங்களாகும்.
இன்றைக்கு உலகம் முழுவதும், ஒரு பெரிய போராயுதம் என்று எல்லா மக்களும், பல இடங்களில் கலந்துகொண்டு, ஆய்வு செய்கின்ற - தேடுகின்ற போராயுதம் எது தெரியுமா? பேராயுதம் எது தெரியுமா?
பெரியார் என்ற போராயுதம் என்பதை மறந்து விடாதீர்கள். நாங்கள் அலங்காரத்திற்காக இதைச் சொல்லவில்லை.
ஒரே ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல்லுக்கு வந்தி ருக்கின்றோம். இது ஓர் அறிவார்ந்த அரங்கம் - இங்கே மட்டும் பேசவில்லை - ‘‘To Speak for wider Audience’’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
‘பெரியார் வலைக்காட்சி’யின்மூலமாக உலககெங்கும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது
இங்கே இருப்பவர்களுக்கு மட்டுமல்ல - எங்கும் இருக்கின்றவர்கள் கேட்கக்கூடிய அளவிற்கு, பெரியார் வலைக்காட்சியின்மூலம் உலககெங்கும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. நான் உரையாற்றி முடித்தவுடன், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து தொலைப்பேசியில் தொடர்பு கொணடு, மிகச் சிறப்பாக இருந்தது கூட்டம் என்று சொல்வார்கள்.
ஏனென்றால், இன்றைக்கு அறிவியல் வளர்ந்தி ருக்கிறது. இது பழைய காலம் போன்று இல்லை.
எத்தனை தூரமோ பண்டரிபுரம் என்று அண்ணா அவர்கள் சொல்வார், அந்தக் காலத்தில்.
‘‘எத்தனை தூரமோ பண்டரிபுரம்‘‘ என்று தாளம் தட்டிக்கொண்டு பஜனை பாடுகிறாயே, ரயில்வே கைடை எடுத்துப் பார்த்தால், எவ்வளவு தூரம் என்று தெளிவாகத் தெரியுமே - இதுகூட புரியாமல் இருக் கிறாயே என்று அண்ணா அவர்கள் அந்தக் காலத்தில் கூட்டங்களில் சொல்வார்.
தாளம் தட்டிக்கொண்டு பஜனை மடத்தில் இருக்கவேண்டியதில்லை.
இன்றைய காலகட்டத்தில், செல்போன் இல்லாமல் ஒருவர்கூட கிடையாது. எந்த ரிஷிக்காவது, முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒரு பயலுக்காவது செல்போன் என்றால், என்னவென்று தெரியுமா?
அதை எப்படி வித்தியாசமாகப் பயன்படுத்தி, பொய்யையைத் தொடர்ந்து சொல்லிக் கொடுப்பதற்கு ‘‘‘Traps’’ என்று ஆங்கிலத்தில் வைத்திருக்கிறார்கள். அதை சொல்கின்ற அமைப்பே ஆர்.எஸ்.எஸ்.தான். அதற்காக பயிற்சி கொடுத்து, சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள்.
கலைஞருக்குப் பிறகு வெற்றிடமா? கற்றிடமா?
நம்முடைய பயணங்களிலே, நம்முடைய என்று சொல்லும்பொழுது மீண்டும் நினைவூட்டுகிறேன், அனைவருடைய - ஏனென்றால், சமூகநீதிக்குப் பெரியார் சொன்ன விளக்கம் - அதைத்தான் உறுதி மொழியாக, நம்முடைய முதலமைச்சர் - இந்தியா விலேயே முதல் முதலமைச்சர் என்று பெயரெடுத்த நம்முடைய முதலமைச்சர்.
இவருக்குப் பிறகு இருக்குமா?
அவருக்குப் பிறகு இருக்குமா?
பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் இருக்குமா?
கலைஞருக்குப் பிறகு வெற்றிடம் என்று சொன் னார்கள்; வெற்றிடம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்றைக்கு அடையாளம் தெரியாமல் இருக்கிறார்கள்.
நாங்கள் அன்றைக்கே சொன்னோம் - இது வெற்றிடம் அல்ல - இது கற்றிடம் - கற்றுக் கொண்டு போகவேண்டிய இடம்.
ஆகவே, அதற்கான ஆயுதங்கள் புத்தகங்கள்.
சமூகக் கட்சியில் இவ்வளவு இளைஞர்களா?
புத்தக அறிமுக விழா சிறப்பாக நடக்கிறது. நம்முடைய அமைச்சர் சொன்னார், அரசியல் கட்சிகளில்கூட அண்மைக்காலத்தில் இவ்வளவு இளைஞர்கள் வருவதில்லை; சமூகக் கட்சியில் இவ்வளவு இளைஞர்கள் வந்திருக்கிறார்களே என்று.
நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது; உரிமை எடுத்துக்கொண்டு ஒன்றைச் சொல்கிறேன்.
இளைஞர்கள் மற்ற அரசியல் கட்சிகளுக்குச் சென்றார்கள் என்றால், பஞ்சாயத்துத் தலைவர், ஒன்றிய தலைவர் போன்ற பதவிகளாவது உண்டு. திராவிடர் கழகத்திற்கு வந்தால், அமைச்சர் இங்கே சொன்னார் - ‘‘எதையும் எதிர்பார்க்காதவர்கள்’’ என்று - எதையும் எதிர்பார்க்காதவர்கள் மட்டு மல்ல - ஒன்றை எதிர்பார்க்கவேண்டும் - அது என்னவென்றால், போராட்டக் காலத்தில், சிறைச்சாலைக்குச் செல்லவேண்டும் என்பதை எதிர்பார்க்கவேண்டியவர்கள்.
எனவே, எங்கள் பின்னால் வந்தால், இந்தப் பதவி கிடைக்கும் - அந்தப் பதவி கிடைக்கும் என்பது கிடையாது. பதவிக்கு என்ன மரியாதை என்று பெரியார்தான் சொல்வார், இறந்து போன பிறகுகூட சிவலோக பதவி - வைகுண்ட பதவி என்று. இரண்டு ரூட் வைத்திருக்கிறார்கள் - ஒன்று மேல் சபை - இன்னொன்று கீழ் சபை - நாமம் போட்டால், வைகுண்ட பதவி; விபூதி பூசினால் சிவலோக பதவி என்று சொன்னார்.
சிறைச்சாலைக்குப் போவதற்குத் தயாராக இருக்கவேண்டும்!
ஒரு லோகப் பதவியும் வேண்டாம் என்று சொல்லி, எங்கள் பின்னால் இளைஞர்கள் வந்தால், சிறைச் சாலைக்குப் போயும், இந்தக் கொள்கையை அமல்படுத்தி, புதிய சமுதாயத்தை, புதிய உலகத்தை, பெரியார் உலகத்தை, நவீன உலகத்தை உருவாக்குவோம் என்று காட்டக் கூடிய வாய்ப்பு இன்றைக்கு வந்திருக்கிறது.
புத்தகங்கள் அதற்கு ஒரு நல்ல அறிவாயுதங்கள்.
(தொடரும்)
No comments:
Post a Comment