சின்னசேலம், நவ.5 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுகா கடத்தூர் கிராமத்தில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சின்னசேலம் தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார். தேர்தல் தனி தாசில்தார் மணி, சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் பேபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு வரவேற்றார். மாவட்ட வழங்கல் அலுவலரும், முகாம் கண்காணிப்பு அலுவலருமான சிவக்கொழுந்து முகாமை தொடங்கி வைத்து 50-க்கும் மேற்பட்டவர்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது ஆய்வுக்கு வந்த ஆட்சியர் சிறீதர், கடத்தூரில் வீடுகட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 102 வயதான முத்தாலம்மாள் கொடுத்த மனு மீது விசாரித்து, உடனடியாக தீர்வு கண்டதோடு, முத்தாலம்மாளின் வீட்டுக்கே நேரில் சென்று, பட்டா மாற்ற உத்தரவுக்கான நகலை அந்த மூதாட்டியிடம் வழங்கினார். அப்போது கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், வருவாய்த்துறை உதவியாளர்கள் சுமதி, உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் நாகராஜ், ஜெயபால் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது வழக்கு
பேரையூர், நவ.5 சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதன்குளத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). இவரும் 15 வயது சிறுமியும் பழகி வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பம் ஆனார். இதனால் பிரகாசின் பெற்றோரும், சிறுமியின் பெற்றோரும், இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பம் ஆன நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்த விவரம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலராகப் பணிபுரியும் கருப்பாயிக்கு தெரியவந்தது. அவர் சிறுமியிடம் விசாரணை செய்து பின்னர் டி.கல்லுப் பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் பிரகாஷ், மற்றும் பிரகாசின் பெற்றோர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர்கள் மீது குழந்தை திருமணம் செய்து வைத்தல், மற்றும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment