புதுடில்லி, நவ. 4 - 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதே சத்திற்கு உட்பட்ட 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 30.10.2021 அன்று இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், 2.11.2021 இல் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில், தற்போது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் கூட பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் அதிகமான இடங்களை கைப்பற்றி யுள்ளன. பாஜக ஆட்சி நடக்கும் இமாசலப் பிரதேசத்தில், அக்கட்சிக்கு பலத்த அடியை மக்கள் கொடுத்துள்ளனர். இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற பதேபூர் அர்கி, ஜுப்பல், கோட்காய் ஆகிய 3 தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, கோட்காய் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் 29 ஆயிரத்து 955 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 23 ஆயிரத்து 662 வாக்கு களும் பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் ரோகித் தாக் குல் வெறும் 2644 வாக்குகளுடன் மூன்றாவது இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டுள்ளார். வைப்புத் தொகையையும் பறி கொடுத்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மேனாள் முதலமைச்சர் வீரபத்திர சிங்கின் மனைவி பிரதிபா சிங்கும், பாஜக சார்பில் கார்கில் போரின் கதாநாயகனாக பாராட்டப்படும் பிரிகேடி யர் குஷால் தாக்கூரும் போட்டியிட்ட நிலையில், பிரதிபா சிங் வெற்றி பெற்றார். மறைந்த ராம் ஸ்வரூப் ஷர்மா இரண்டு முறை மோடி அலையால் மண்டி தொகுதியில் வென்றார். 2019-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் இப்போது அந்த தொகுதியை பாஜக பறிகொடுத்துள்ளது.
பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான கருநாடகத்தில் சிந்தகி, ஹனகல் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வென்றுள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த ஊரை உள்ளடக்கிய ஹனகல் தொகுதியை காங்கிரசிடம் பாஜக பறிகொடுத்துள்ளது.
பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் அரியானா மாநிலம் ஏல்னாபாத் தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக தோல் வியைச் சந்தித்துள்ளது. இங்கு பாஜக வேட்பாளர் கோவிந்த் காண்டாவை 6,739 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய தேசிய லோக் தள் கட்சி வேட்பாளர்அபய் சிங் சவுதாலா தோற்கடித்துள்ளார். அபய் சிங் சவுதாலா அரியானா மேனாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் ஆவார். மகாராட்டிராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற டெக்ளூர் (தனி) தொகுதியில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றுப் போயிருக்கிறது. தாத்ரா நாகர் - ஹவேலி மக்களவைத் தொகுதியிலும் பாஜக தோற் றுள்ளது. இவற்றில் முறையே காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. டெக்ளூர் ஏற்கெனவே பாஜக வசம் இருந்தது ஆகும். பாஜக, தொடர்ச்சியாக ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்ற முயற்சிக்கும் ராஜஸ் தானில் இடைத்தேர்தல் நடைபெற்ற தரியவாட், வல்லப்நகர் ஆகிய 2 தொகுதிகளிலுமே பாஜக படுதோல்வி அடைந் துள்ளது. இதில், தரியவாட் பாஜக கைவசம் இருந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக படுதோல்வி அடைந்த மற்றொரு முக்கியமான மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். இங்கு இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் பாஜக தோற்றுப் போனது. 3 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜக-வுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. பாஜக வேட்பாளர்களால் அதிகபட்சம் 20 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்துள்ளது. பாஜக வசமிருந்த தின்ஹாடா தொகுதியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 5 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணாமுல் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் முதல மைச்சராக இருக்கும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை அனைத்திலுமே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றி ருந்தாலும், மிகுந்த இழுபறிக்கு இடையிலேயே இங்கு வெற்றி கிடைத்துள்ளது. சில ஆயிரம் வாக்குகளே வெற்றி வித்தியாசமாக இருந்துள்ளது. காண்ட்வா மக்களவைத் தொகுதியையும், காங்கிரஸ் கட்சியிடம் இருந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியுள்ளது. மறுபுறம், பாஜகவிடம் இருந்த ராய்கோன் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இந்த தொகுதி 31 ஆண்டு களாக பாஜகவிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு மாநிலமான அசாமிலும் பாஜக-வும் அதன் கூட்டணி கட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளன. அசாமில் தேர்தல் நடைபெற்ற 5 தொகுதி களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ளது. 3 தொகுதி களில் பாஜகவும், 2 தொகுதிகளில் அதன் கூட்டணி கட்சி யான அய்க்கிய மக்கள் லிபரல் கட்சியும் (யுபிபிஎல்) வெற்றி பெற்றுள்ளன. தெலங்கானா மாநிலம் ஹூசாராபாத் தொகு தியில் நடைபெற்ற இடைத்தோர்தலில் எதிர்பாராத வெற் றியை பாஜக பெற்றுள்ளது. இங்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதியிலிருந்து வெளியேறி வந்த மூத்த தலைவரும், மேனாள் அமைச்சருமான எட்டலா ராஜேந்தரை, தனது வேட்பாளராக நிறுத்தி, பணத்தை தண்ணீராகச் செல வழித்து பாஜக வென்றுள்ளது. ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி வேட்பாளர் 23 ஆயிரத்து 855 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போயிருக்கிறார். தெலங்கா னாவில் பாஜக தொடர்ச்சியான வளர்ச்சியைப் பெற்று வரு கிறது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘துப்பாக்’ சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, கடந்த 2020 டிசம்பரில் நடைபெற்ற அய்தராபாத் மாநகராட்சி தேர்தலிலும் கணிசமான இடங்களைப் பிடித்தது.
ஆந்திராவின் பத்வேலு தொகுதி இடைத்தேர்தலில், முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் போட்டியிடாத நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 2 மடங்கு வாக்குகளை அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் தாராபூர், குஷேஷ்வர்ஸ்தான் ஆகிய 2 தொகுதிகளையும் ஆளும் அய்க்கிய ஜனதா தளம் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற ராஜாபாலா, மாவ்ரிங்நெங், மாப்லாங் ஆகிய 3 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியிலுள்ள அய்க்கிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது. மிசோரத்தில் உள்ள துய்ரியல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மிசோரம் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 29 சட்டப்பேரவைத் தொகுதி களில் 15 தொகுதிகள் ஏற்கெனவே பாஜக வென்ற தொகுதி கள் ஆகும். 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய இடங்கள் மாநிலக் கட்சிகளின் வசமிருந்தவை ஆகும். இந்நிலையில், இடைத்தேர்தலில் தன் கைவசம் இருந்த பல தொகுதிகளை பாஜக பறிகொடுத்துள்ளது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் உள் ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 13 மாநில இடைத் தேர்தல் முடிவுகள் பாஜகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment