கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு கரோனா தொற்று

 புதுடில்லி, நவ.28 நாட்டில் நேற்று (27.11.2021)  ஒரே நாளில் 8,318 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 8,318 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். பெருந்தொற்றால் பாதிக்கப்படு வோரை விட அதிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில்,நேற்று ஒரே நாளில் 10,967 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் நாட்டில் தற்போது 1,07,019 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 465 பேர் வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,67,933 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 0.86 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 0.88 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

121.06 கோடி தடுப்பூசி

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 73.58 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, இதுவரை121.06 கோடி தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

மாஸ்கோ, நவ.28 இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

இந்தியா  - ரஷ்யா இடையே யான இருதரப்பு உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் டிசம்பர் 6ஆம் தேதி டில்லியில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரவுள்ளார். அவருடன் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷோய்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஆகியோரும் இந்தியா வருகை தருகின்றனர்.

அன்றைய தினமே பிரதமர் நரந்திர மோடியை விளாடிமிர் புதின் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதேபோல, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த சந்திப்பின் போது ராணுவம், வணிகம், முதலீடு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment