சென்னை, நவ.28 அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர்காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார்.
அதையேற்று பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதியான பட்டதாரிகள் மூலம் நிரப்பிக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி பள்ளியின் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுநிலை ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் காலிப் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.
ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம்
அத்தகைய முதுநிலை ஆசிரியர்கள் 5 மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மட்டும் பணியில் நீடிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக 5 மாதங்களுக்கு தேவையான ரூ.13.87 கோடி நிதியும் விடுவிக்க ஆணை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில்
தடுப்பணை அமைக்கும் பணி தீவிரம்
விழுப்புரம், நவ.28 தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்துள்ளது. இதனால் கரையோரம் உள்ள நிலங்களில் மண் அரிப்பு உருவாகி உள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வந்தால் அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக 300 மீட்டர் தொலைவுக்கு தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பார்வையிட்ட விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment