உடல் கொடை கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 28, 2021

உடல் கொடை கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழப்பு

புதுடில்லி, நவ.28  அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் தேசிய உடல் உறுப்பு கொடை தினம் நேற்று (27.11.2021) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைநகர் டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல டாக்டர் மனோஜ் குமார் சாகு கலந்து கொண்டு இந்தியாவில் உடல் உறுப்பு கொடை குறைந்து வருவது குறித்து பேசினார்.

அப்போது அவர் அறுவை சிகிச்சைக்கு தேவையான உடல் உறுப்புகள் கிடைக்காததால் இந்தியாவில் ஆண்டு தோறும் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்  1.5 லட்சம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் தேவை என்ற நிலையில், நாட்டில் ஆண்டுக்கு 5,000 பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை நடக்கிறது. அதே போல் சுமார் 2 லட்சம் பேர் கல்லீரல் கொடை கிடைக்காததால் இறக்கின்றனர் என்றார்.

மேலும் இந்தியாவில் உடல் உறுப்பு கொடை விகிதம் 0.01 சதவிகிதம் மட்டுமே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை

பிரியங்கா காந்தி சாடல்

புதுடில்லி, நவ.28 ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை என்று பிரியங்கா காந்தி பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் மாவட்டத்தில் நேற்று  (27.11.2021) நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் உறுதிமொழி கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

பிரதமரின் பெரும் தொழிலதிபர் நண்பர்களின் வருமானம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தினமும் ரூ.10 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறார்கள். நீங்களோ தினம் ரூ.27 ஈட்டுகிறீர்கள். இந்த அரசு உங்களுக்காக எதுவுமே செய்யவில்லை.

மோடி பயன்படுத்தும் விமானத்தின் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? ரூ.8 ஆயிரம் கோடி. அதில்தான் அவர் இங்கு வந்து உங்களிடம் பேசிச் செல்கிறார். ஆனால் உங்களின் வருமானம் உயரவில்லை. ரூ.8 ஆயிரம் கோடி விமானத்தில் பறக்கும் மோடியால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு; விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடில்லி, நவ.28 நாளை (29.11.2021) நடத்துவதாக இருந்த டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தையடுத்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை வரவேற்ற விவசாயிகள் மேலும் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.

விவசாய சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருகின்ற  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்க இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29ஆம் தேதி  நாடாளுமன்றம்  நோக்கி டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்தனர்.  இந்த நிலையில்,  டிராக்டர் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்றைய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த விவசாய சங்க நிர்வாகி ராஜ்வீர் சிங் ஜடவுன் கூறியதாவது: குறைந்த பட்ச ஆதார விலை, போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகள், லகிம்பூர் வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டத்தை தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார்.

3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா-2021- வரும் 29ஆம் தேதி தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment