- ஒன்றிய அரசு அறிவிப்பு
புதுடில்லி, நவ.28 இணையம் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு ஒன்றிய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை.
இந்த இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இணையம் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு ஒன்றிய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1ஆம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
இதனால், இணையம் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.
இந்த உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், இணையம் மூலம் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள்
7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு
சென்னை, நவ.28 மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன்பெற்று உள்ளனர். இந்த நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், புதிதாக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்தவகையில் 4 ஆயிரத்து 848 செவிலியர்கள், 2 ஆயிரத்து 448 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 296 பேரை பணியில் அமர்த்திக் கொள்வதற்கான அரசாணை 25.11.2021 அன்று வெளியிட்டப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.
இந்தியாவில் தெருவில் சுற்றித்திரியும்
6.2 கோடி நாய்கள் - ஆய்வில் தகவல்
புதுடில்லி, நவ.28 இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் வீடற்ற செல்லப் பிராணிகளின் நிலை பற்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியாவில் 6.2 கோடி தெருநாய்கள் இருப்பதும், 91 லட்சம் பூனைகள் ஆதரவற்றநிலையில் தெருவில் விடப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் 88 லட்சம் தெருநாய்களும், பூனைகளும் காப்பகங்களில் பராமரிக்கப்படுகிறது. அதே சமயம் சீனாவில் 7.50 கோடி தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும், அமெரிக்காவில் 4.80 கோடி, ரஷ்யாவில் 41 லட்சம் தெருநாய்கள் மற்றும் பூனைகள் இருப்பதாகவும் அந்தக் கணக்கெடுப்பு கூறுகிறது.
தமிழ்நாட்டில் சராசரி அளவைவிட
கூடுதலாக 70 சதவீதம் மழை
சென்னை, நவ.28 தமிழ்நாட்டில் கொட்டித்தீர்த்த வடகிழக்குப் பருவமழை: சராசரி அளவைவிட கூடுதலாக 70 சதவீதம் மழை என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மய்யத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்பு சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டின் அக்டோபர் 25ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்துவருகிறது. 26ஆம் தேதி வரை 580.84 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது, சராசரி மழையளவான 341.33 மில்லி மீட்டரைவிட 70 சதவீதம் கூடுதல் ஆகும். கனமழை, அதி கனமழை காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அரியலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 152 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 637 குடிசைகள் பகுதியாகவும், 44 குடிசைகள் முழுமையாகவும், 120 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment