தடைபடாத பயணமாக - வெற்றி, இலக்கை நோக்கிப் போகக்கூடிய பயணமாக ஆக்குவதுதான் எங்கள் பணி!
திண்டுக்கல் நவ.4 இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான ஆட்சி ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி; தடைபடாத பயணமாக - வெற்றி, இலக்கை நோக்கிப் போகக்கூடிய பயணமாக ஆக்குவதுதான் எங்கள் பணி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக?'' கருத்தரங்கம்
கடந்த 19.10.2021 அன்று திண்டுக்கல் ஜி.எஸ்.மீட்டிங் ஹாலில் (நாயுடு மகால்) நடைபெற்ற ‘‘நீட் தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? தலைப்பில் கருத்தரங்கம், ‘கற்போம் பெரியாரியம்', ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' ஆகிய நூல்கள் அறிமுக விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான ஆட்சி தமிழ்நாட்டில்!
இன்றைக்கு ஆட்சியைப் பிடித்திருக்கிறோம்; இந்தி யாவிற்கே எடுத்துக்காட்டான வகையில் ஆட்சி நடை பெறுகிறது. பல பேருக்கு உறுத்துகிறது - ஏன்? குற்றம் சொல்வதற்கு எதுவும் கிடையாது. தேடுகிறார்கள், தேடு கிறார்கள் எதுவுமே கிடைக்கவில்லை அவர்களுக்கு.
உடனே, கோவில்களைத் திறக்கவேண்டும் - அதற்காக நாங்கள் போராடுவோம் என்று சொல்கிறார், ஒருவர்.
கரோனா காலத்தில் உங்களைக் காப்பாற்றவேண்டும் என்று நினைத்தோம்.
கடவுளுக்கும் சேர்த்து முகமூடி போட்டு வைத்தி ருக்கிறான் வடநாட்டில் - ஏனென்றால், கரோனா கடவுளையும் அட்டாக் செய்யுமாம்.
தமிழ்நாட்டில்தான் அதுபோன்ற நிலை இல்லை. ஏனென்றால், இது பெரியார் மண் - பக்தனுக்கும் சேர்த்து பகுத்தறிவைக் கொடுத்திருக்கிறது.
நாட்டில், கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றன. அதைக் கண்டுபிடிப்பது எங்கள் வேலை. பின்னால் வரும் ஆட்சித் தேர்.
சேப்பர்ஸ் அண்ட் மைனர்ஸ் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். தூசிப் படைகள் - இராணுவம் வருவதற்கு முன்பாக.
தடைபடாத பயணமாக,
வெற்றியை, இலக்கை நோக்கிப் போகக் கூடிய பயணமாக..
எங்களுடைய வேலை - திராவிடர் கழகத்தின் வேலை என்னவென்றால், எல்லோரையும் ஒருங் கிணைத்து அழைத்துப் போவதற்கு முன்பாக - பாதையில் எங்கெங்கே கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு இருக்கின்றன என்பதைப் பார்த்து, அந்தக் கண்ணிவெடிகளையெல்லாம் அப்புறப் படுத்தி, இந்தப் பயணத்தை தடைபடாத பயணமாக, வெற்றியை, இலக்கை நோக்கிப் போகக் கூடிய பயணமாக ஆக்கக்கூடியதுதான் எங்களுடைய வேலை.
என்னுடைய கையில் இருப்பது இந்த மாதம் ஒன்றாம் தேதி வெளிவந்த ஆங்கில நாளிதழ் டைம்ஸ் ஆஃப் இந்தியா.
Periyar’s words are igniting minds again across languages
பெரியாருடைய சிந்தனைகள் - எந்த அளவிற்கு இருக்கிறது என்றால், பிற மொழிகள், பிற பகுதிகளில் இருக்கின்றவர்களுடைய எண்ணங்களையெல்லாம் அதுதான் கொளுத்தி விட்டுக் கொண்டிருக்கிறது - அறிவுச் சுடராக ஆக்குகிறது என்கிற தலைப்பில் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார்கள்.
இதுபோன்ற புத்தகங்களை ஏன் வெளியிடுகிறோம்- ஏன் புத்தகங்களைப் படிக்கவேண்டும் என்று சொன் னார்கள் - இந்த அரங்கத்தில் இவ்வளவு புத்தகங்களை ஏன் வாங்கியிருக்கிறீர்கள்? ஒரு மாத காலத்திற்குள்ளாக ‘கற்போம் பெரியாரியம்‘ என்ற புத்தகம் அய்ந்து பதிப்புகள் வெளியாகி இருக்கின்றன.
இது வேடிக்கையான புத்தகமல்ல - கொஞ்சம் சீரியசான சிந்தனையுடைய புத்தகம். அப்படிப்பட்ட புத்தகம் அய்ந்து பதிப்புகள் வெளியாகி இருக்கிறது.
காரணம் என்ன?
இளைஞர்கள், பொதுவானவர்கள் எல்லோரும் பெரியாரைப் படிக்கவேண்டும் என்கின்ற தாகத்தோடு இருக்கிறார்கள். எப்படி தாகத்தோடு இருக்கிறவர்கள் தண்ணீர்ப் பானையைத் தேடுவார்களோ - அதுபோன்று இன்றைக்கு அந்த வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன.
‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்த செய்தியைப் படிக்கிறேன்.
In the past five years, more people have turned to Periyar’s writings, say publishers, and it is across languages.
தமிழில் மட்டும் பெரியாரைப் படிக்கவில்லை. மொழி வேறுபாடில்லாமல் பெரியாருடைய கருத்துகள் மிக வேகமாகப் போகின்றன.
78 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் கிடைத்திருக்கின்ற அருமையான பயன்!
அந்தக் காலத்தில் சுயமரியாதை இயக்கத் தளபதிகளில் ஒருவரான பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி அவர்கள் ஆறடி உயர முள்ளவர் - கம்பீரமாக நின்று கொண்டு பேசுவார். நான் சிறு பையனாக இருந்து அவரின் உரையைக் கேட்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன். அதுதான் 78 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் கிடைத்திருக் கின்ற அருமையான பயன் எனக்கு.
அப்படிப்பட்ட அழகிரி அவர்கள் சொல்லுவார்,
‘‘ஈட்டி இருக்கிறதே, அது எட்டியவரையில் பாயும்; பணம் இருக்கிறதே, அது பாதாளம் வரையில் பாயும்; ஆனால், எங்கள் பெரியாரின் கொள்கை இருக்கிறதே, அது அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனைக்கும் பாய்ந்து, அதற்கப்பாலும் பாயும்‘‘ என்பார்.
அது எப்படி சரியானது என்பதற்கு அடையாளம், மொழி வேற்றுமையில்லாமல் பெரியார் கருத்துகள் பரவுகின்றன என்று சொல்லிவிட்டு, மேலும் அந்த நாளிதழில்,
Rajkamal Prakashan, a publication in Hindi, has come out with three volumes of Hindi translation of Periyar’s writing by Pramod Ranjan since July 2020. They are ‘Jati Vyasvstha aur Pitrisatta’, ‘Sacchi Ramayan’, and ‘Dharm aur Vishvadrishti’. These books were a hit among women and students belonging to marginalised sections of society in Bihar, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, and Delhi, said Pramod Ranjan. “Periyar is re-emerging as an icon among the younger generation in the Hindi heartland,” he said.
என்று செய்தி வெளியிட்டுள்ளது.
‘‘ஜூலை 2020 ஆம் ஆண்டிலிருந்து மூன்று பதிப்புகளாக வெளியிட்டு இருக்கிறோம் - ஏராளமான விற்பனை. ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மத்தியில், மாணவர்கள், பெண்கள் மத்தியில்'' என்று அந்தப் பதிப்பகத்தினர் கூறுகின்றனர்.
இப்பொழுது எப்படி தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி அமைந்திருக்கிறது - தெளிவான ஆட்சி நடைபெறுகிறது - கொள்கை ரீதியான ஓர் ஆட்சி நடைபெற்றுக் கொண் டிருக்கின்றது என்பது எப்படி மகிழ்ச்சியோ - அதற்கெல் லாம் அடித்தளமாக இருக்கக்கூடிய தத்து வார்த்தங்கள் - ஆயுதங்கள் - போர்க் கருவிகளில் புத்தகங்கள் என்பவை மிக முக்கியமானவை.
கொள்கைப் போர் - இலட்சியப் போர் - கருத்துப் போர்
இப்பொழுது நடந்துகொண்டிருப்பதே ஒரு கொள்கைப் போர் - இலட்சியப் போர் - கருத்துப் போர்.
நம்முடைய ஆட்சி அங்கே இல்லை - ஆனால், பெரியார் ஆட்சி அங்கே நடக்கக்கூடிய அளவிற்கு, முன்னோட்டம் நடந்துகொண்டிருக்கிறது ஹிந்தியில்.
அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனைக்கும் பாயும் என்பதற்குப் பொருள் தெரிகிறதா? இப்பொழுது.
அதுவும் ஹிந்தி மொழியில் - இதுதான் தீர்ப்பு - இதுதான் கருவி. ஆகவேதான், இவ்வளவு இளைஞர்கள்.
இந்த இளைஞர்களை நாங்கள் எதையும் கொடுத்து கூப்பிடவில்லை. அவர்களே இணைய தளம்மூலம் முழுமையாகப் படித்து, இந்தக் கொள்கையில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு எங்களிடம் விடை கேட்டனர்.
அவர்கள் கேட்ட கேள்விகளெல்லாம் பக்குவப்பட்ட கேள்விகள்.
நாங்கள் இந்தக் கரோனா காலத்தையும் பயன்படுத்திக் கொண்டோம். பகுத்தறிவுவாதிகள் எது பலகீனமோ, அதை பலமாக்கிக் கொள்வார்கள்.
பெரியாருக்குப் பற்கள் கிடையாது - பற்களைக் கட்டிக் கொள்ளச் சொன்னார்கள், அவருக்குப் பிடிக்க வில்லை. அதைத் தூக்கிப் போட்டுவிட்டார் - அவருடைய பல் செட் இன்னமும் இருக்கிறது. ஆனால், கறியை கடைசிவரையில் சாப்பிட்டார்.
95 வயது வரையில் தினமும் அவருக்கு ஆட்டுக் கறி இருக்கவேண்டும்; எந்தக் கறியை வேண்டுமானாலும் சாப்பிடுவார்.
எப்படி இது சாத்தியம் என்று எங்களுக்கெல்லாம் வியப்பு!
என்னுடைய துணைவியார் கேட்ட கேள்வியும் - பெரியாரின் பதிலும்!
என்னுடைய துணைவியார், சிறிய பிள்ளையாக இருக்கும்பொழுதிலிருந்தே பெரியாருடைய குடும்ப ரீதியாக இருக்கக் கூடியவர்.
பெரியாரிடம் இவர் கேட்டார், ‘‘அய்யா, எப்படி நீங்கள் கறி சாப்பிடுகிறீர்கள்; உங்களுக்கு எத்தனைப் பற்கள் இருக்கின்றன?’’ என்று கேட்டார்.
இங்கே வா என்று பெரியார் கூப்பிட்டார்,
வாயைத் திறந்து, எத்தனை பற்கள் இருக்கின்றன என்று நீயே எண்ணிக் கொள் என்றார்.
உள்ளே பார்த்தால், வெறும் கம்ஸ்தான் இருக்கிறது.
ஆனால், பாக்கு வெட்டி நறுக்குவதுபோன்று, அந்த கம்சை வைத்து, கறியை சதக் என்று தட்டினார் என்றால், அந்தக் கறி பஞ்சு பஞ்சாகிவிடும்.
எது பலகீனமோ, அதையே பலமாக்கிக் கொள் வதுதான் பெரியாரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.
அதுதான் பகுத்தறிவு.
அந்த வகையில், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், டில்லி போன்ற மாநிலங்களில் அந்தப் புத்தகங்கள் பரவியிருக்கின்றன.
ஆகவேதான் இந்தப் புத்தகங்கள் சாதாரண மானவையல்ல.
அய்யா அவர்கள், அறிவுத் தேடலைக் கொடுத்தார்.
பெரியார் நான்காம் வகுப்புக்குமேல் படிக்கவில்லை. அதுதான் பெரியாருடைய பலமே! அவர் படித்திருந்தால், நமக்கு ஒரு பெரியார் கிடைத்திருப்பாரா என்று சொல்ல முடியாது. அதனால், எல்லோரும் படிக்கக்கூடாது என்று அர்த்தம் இல்லை.
ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார்!
பெரியார் அவர்கள் ஒப்பற்ற சுயசிந்தனையாளர்!
அண்ணா சொன்னார், ‘‘மாலை நேரத்தில் கல்லூரி - தமிழ்நாட்டினுடைய முதல் பேராசிரியர் தந்தை பெரியார் - அவருடைய வகுப்பு மாலை நேர வகுப்பாக இருக்கும்; மூன்று மணிநேரம் நடைபெறும்'' என்றார்.
அப்படிப்பட்ட தந்தை பெரியார் அவர்கள் சொல்லாத விஷயமே கிடையாது.
‘பெண் ஏன் அடிமையானாள்?'
இன்றைக்குப் பைத்தியக்காரன் போன்று, பெரியாரை அழிப்பதற்காக - ஒரு புத்திசாலி - பிம்பத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து சில முயற்சிகளை செய்து வருகிறார்கள். பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் பல லட்சக்கணக்கில் பரவியிருக்கிறது. எல்லோருமே அதனைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். பல மொழிகளில் அப்புத்தகம் அச்சாகியிருக்கிறது.
பிரெஞ்சு மொழியில் அதனை மொழி பெயர்த்துக் கொண்டு போயிருந்தோம். இன்டர்நேஷனல் ஹூமனி சம் அசோசியேசன் - உலக மனிதநேய அமைப்பின் பேரில், திராவிடர் கழகத்தின் சார்பில், கடந்த 20 ஆண்டு களுக்குமுன் பாரீசுக்கு நான் சென்றிருந்தேன்.
20 ஆண்டுகளுக்குமுன்பு ஒரு பிரெஞ்சுக்காரரின் வியப்பு!
அந்தப் புத்தகத்தை அந்த கருத்தரங்கில் வந்தவர் களுக்கெல்லாம் கொடுத்தோம். 80 வயது மதிக்கத்தக்க ஒரு உள்ளூர்க்காரர் அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்றார். மறு நாள் கருத்தரங்கத்திற்கு வந்த அவர், என்னை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொரு வராகப் பார்த்துக் கொண்டே வந்தார்; என்னைப் பார்த்தவுடன், என் கைகளைப் பிடித்துக்கொண்டு,
‘‘நான் உங்களோடு பேசவேண்டும்; தயவு செய்து எனக்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள்'' என்று ஆங்கிலத்தில் சொன்னார்.
நானும் சரி என்றேன்.
கருத்தரங்கம் முடிந்தவுடன் அவரை சந்தித்தபொழுது, என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு சொன்னார்,
‘‘நேற்று நீங்கள் கொடுத்த பெண் ஏன் அடிமை யானாள்? புத்தகத்தை பிரெஞ்சு மொழியில் நான் படித்தேன். இப்படி ஒரு தலைவர் - இப்படி ஒரு சிந்தனையாளரை உலகத்தில் முதன்முறையாக நான் பார்க்கிறேன். இவ்வளவு தெளிவான சிந்தனை உள்ளவர் தந்தை பெரியார்'' என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்.
பெரியார் 1928 இல் எழுதினார் - பெட்ரண்ட் ரசல் 1929 இல் எழுதினார்
இன்றைக்கு அந்த நூல் பல மொழிகளில் வெளி வந்திருக்கிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.
ஒரு பைத்தியக்காரன், அந்தப் புத்தகத்தைப் பெரியார் பெட்ரண்ட் ரசல் எழுதியுள்ள ஆங்கிலப் புத்தகத்திலிருந்து காப்பியடித்து எழுதியிருக்கிறார் என்று சொல்கிறார்.
அதற்கு நம்ம தோழர்கள் பதில் எழுதினார்கள். அதை நான் பொருட்படுத்துவது கிடையாது.
இளைஞர்கள் அதற்குப் பதில் சொன்னார்கள், ‘‘பெரியார் அந்தப் புத்தகத்தை ஒரே நேரத்தில் எழுத வில்லை. ‘குடிஅரசு' இதழில் அத்தியாயம் அத்தியாயமாக நிறைய ஆண்டுகள் எழுதினார். அதுமட்டுமல்ல, தந்தை பெரியார் அவர்கள் ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகத்தை 1928 இல் எழுதினார். பெட்ரண்ட் ரசல் 1929 இல்தான் அந்த ஆங்கிலப் புத்தகத்தை எழுதினார். இந்த விவரம் உனக்குத் தெரியுமா?'' என்று.
அவனுக்குத் தெரியாது.
ஏனென்றால், பெரியாரை சிதைக்கலாமா? என்று நினைப்பவர்களுக்கு நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது.
மக்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்ன தலைவர் தந்தை பெரியார்.
கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வது இன் றைக்கும் திராவிடர் கழகம். இடதுசாரிகள்,
யாரும் கேள்வி கேட்காதே, அப்படி கேட்டால், நரகத்திற்குப் போவாய் என்பார்கள்.
ஆனால், பெரியார் கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாக, நான் பேசுவதை நம்பாதே - யார் சொல் வதையும் நம்பாதே என்றார்.
நான் சொல்வதை நம்பாதே! உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதை நம்பு!
ஒருமுறை குடியாத்தம் கல்லூரியில் உரையாற்றிக் கொண்டிருந்தபொழுது, ஒரு கல்லூரி மாணவன் கேட்டார், ‘‘அய்யா நீங்கள் சொல்வதை நம்புவதா? வேண்டாமா?'' என்று.
உடனே அய்யா அவர்கள், ‘‘நான் சொல்வதை நம்பாதே! உன் அறிவு என்ன சொல்கிறதோ, அதை நம்பு'' என்றார்.
இப்படி சொல்லக்கூடிய இயக்கம். உங்களுக்குக் கருத்துச் சுதந்திரத்தைக் கொடுத்திருக்கின்ற இயக்கம் இது.
கீதையைப்பற்றி இங்கே சொன்னார்களே - எங் களுக்கெல்லாம் கீதையைக் குறை சொல்லவேண்டிய அவசியம் என்ன? கடவுளைப்பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன? மதத்தைப்பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன?
அதுதானே இன்றைக்கு ஜாதியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற பிரிவுகளை பலமுறை திருத்தியிருக்கிறார்கள்!
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம்
‘‘நான்கு வர்ணங்களை நானே உருவாக்கினேன். நானே நினைத்தாலும் சுதர்மா என்று சொல்லக்கூடிய தர்மத்தை, வர்ண தர்மத்தில் இருக்கக்கூடிய நெறியை மாற்ற முடியாது'' என்கிறது கீதை?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற பிரிவு களை 103 முறை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், அவனே நினைத்தாலும் வர்ண தர்மத்தை மாற்ற முடியாதாம்.
இதைப்பற்றி பெரியார் சொன்னார், யாராவது எழு துங்கள்; நான் எல்லாவற்றையும்பற்றி எழுதிவிட்டேன். கீதையைப்பற்றி எழுதுங்கள் என்றார். நான் சன்மானம், பரிசு, பணம் கொடுக்கிறேன் என்று சொன்னார். ஆனால், யாருக்கும் துணிவில்லை - அறிவில்லை என்று சொல்ல முடியாது; ஆனால், எழுதுவதற்குத் துணிவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்; ஆனால், எழுதுவதற்குத் துணிவில்லை.
‘‘கீதையின் மறுபக்கம்'' புத்தகம்!
பெரியார் சொன்னதையெல்லாம் முடிப்பது எங்களுடைய வேலை என்கிற முறையில், நூறு புத்தகங்களுக்குமேல் படித்து, இங்கே எழுதினால், இடையூறுகள் இருக்கும் - கவனச் சிதறல்கள் இருக்கும் என்பதினால், ஒரு குளிர்காலத்தில், அமெரிக்காவில் உள்ள என்னுடைய மகள் வீட்டிற்குச் செல்லும்பொழுது, இரண்டு பெட்டி நிறைய பழைய புத்தகங்களைக் கொண்டு சென்றோம்.
அங்கே சென்று ஒரு மாதம் முழுவதும் எழுதினேன். அதற்காக எத்தனை புத்தகங்களை ஆய்வு செய்தேன் என்கிற விவரம் அந்தப் புத்தகத்திலேயே இருக்கிறது.
கீதையின் மறுபக்கம் இப்பொழுது 26 ஆவது பதிப்பு வெளிவந்திருக்கிறது.
26 பதிப்பு என்பதைவிட, இந்தப் புத்தகத்திற்கு மிக முக்கியமான ஓர் அம்சம் உண்டு.
இராம.கோபாலனுக்கு கீதையின் மறுபக்கம் புத்தகத்தை கொடுத்தார் கலைஞர்!
எதிர்க்கட்சித் தலைவராக நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இருக்கிறார். அவருடைய வீட்டிற்குத் திடீரென்று ஒரு நாள் இந்து முன்னணியின் தலைவர் மறைந்த இராம.கோபாலன் அவர்கள் கோபாலபுரத்திற்கு வருவதாக தகவல் வந்திருக்கிறது.
கலைஞர் அவர்கள் வெளியில் சென்றுவிட்டு, மாலையில் கோபாலபுரம் வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வெளியே தி.மு.க. தோழர்கள் எல்லாம் திரண்டிருந்தார்கள்.
கலைஞர் அவர்கள் தோழர்களைப் பார்த்து, ‘‘என்ன இவ்வளவு தோழர்கள் கூட்டம்'' என்று கேட்கிறார்.
இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் இங்கே வருவதாக தகவல் வந்திருக்கிறது. ஏதோ பிரச்சினை செய்யவேண்டும் என்று வருகிறாரோ என்பதற்காக தோழர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள் என்றனர்.
கலைஞர் அவர்கள் ‘‘வரட்டும், நம்முடைய வீட்டிற்குத்தானே வருகிறார். தாராளமாக வரட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எல்லாம் அமைதியாக இருங்கள். வீட்டிற்கு வருகிறவர்கள் எதிரியாக இருந்தாலும், அவர்களை வரவேற்பதுதான் நம்முடைய பண்பாடு என்று சொல்லிவிட்டு, அவர் வந்தால், மேலே அனுப்புங்கள்'' என்றார்.
வீட்டிற்குள் கலைஞர் அவர்கள் சென்றதும், சிறிது நேரத்தில் இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் அவர்கள் வந்தார்.
தலைவர் மேலே இருக்கிறார் என்று சொல்லி, அவரை மாடிக்கு அனுப்பினார்கள்.
இராம.கோபாலனைப் பார்த்ததும் கலைஞர் அவர்கள், ‘‘வாங்க, வாங்க, வணக்கம்!'' என்றார்.
இதுதான் எங்களுடைய பண்பாடு,.
நாளைக்கு சங்கராச்சாரியே பெரியார் திடலுக்கு வந்தால், அவருக்கு கருப்புக் கொடியா காட்டுவேன்?
அவரை வரவேற்று, இவையெல்லாம் பெரியார் செய்தது பாருங்கள்; முடிந்தாலும் நீங்களும் செய்யுங்கள் என்றுதான் சொல்லுவோம்.
இதுதான் திராவிட இயக்கப் பண்பாடு.
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு மிகவும் முக்கியம்.
அந்த நயத்தக்க நாகரிகத்தோடு கலைஞர் அவர்கள், இராம.கோபாலனைப் பார்த்து, உட்காருங்கள் என்று சொன்னார்.
அவர், ‘‘பகவத் கீதை''யைக் கொண்டு வந்திருக்கிறேன்; இந்த நூலை நீங்கள் படிக்கவேண்டும்'' என்று சொல்லி கொடுக்கிறார்.
கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, ‘‘கொடுங்கள், கொடுங்கள்; எல்லா புத்தகங்களையும் படிக்கின்ற பழக்கம் எனக்கு உண்டு. இப்படிப்பட்ட நூலை ஏற்கெனவே நான் ஒன்றைப் படித்திருக்கிறேன். இருந்தாலும், நீங்கள் கொடுக்கின்ற நூலை நான் அவசியம் படிக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு,
அவருடைய மேசையின் டிராயரைத் திறந்து, ‘‘நீங்கள் ஒரு புத்தகம் கொடுத்தீர்கள். நான் ஒரு புத்தகம் உங்களுக்குக் கொடுக்கிறேன், அதை நீங்கள் படிக்கவேண்டும்'' என்று சொல்லி,
நான் எழுதிய ‘‘கீதையின் மறுபக்கம்'' புத்தகத்தை எடுத்து அவரிடம் கொடுத்தார்.
நாங்கள் எதையும் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப்பட்டவர்கள்
இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும்; நாங்கள் எதையும் ஆதாரத்தோடு சொல்லி பழக்கப்பட்டவர்கள்.
‘‘8.9.2004 அன்று இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன், கலைஞர் அவர்களது இல்லத்தில் அவரை சந்தித்து, பகவத் கீதை புத்தகத்தை வழங்கினார். உடனே கலைஞர் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘‘கீதையின் மறுபக்கம்'' நூலினை இராம.கோபாலனுக்கு வழங்கினார்'' என்று ‘முரசொலி', 9.9.2004 இல் படத்தோடு செய்தி வந்திருக்கிறது.
அப்படி அந்தப் புத்தகத்தை வழங்கிவிட்டு, என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்.
‘‘என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்; ஒரு முக்கியமான செய்தியை உங்களிடம் சொல்லவேண்டும். இராம.கோபாலன் வந்து ‘பகவத் கீதை' புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். நான் அவருக்கு நீங்கள் எழுதிய ‘கீதையின் மறுபக்கம்' நூலை கொடுத்துவிட்டு, இந்தப் புத்தகத்தை வீரமணி எழுதியிருக்கிறார்; அவர் எந்தெந்த இடத்தில் தவறு செய்திருக்கிறார்? எந்ததெந்த இடத்தில் சரியாக எழுதவில்லை? என்பதை நீங்கள் எழுதுங்கள்; அவரிடம் சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கும்'' என்று சொன்னதாகச் சொன்னார்.
திராவிடர் இயக்கக் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாது
இராம.கோபாலன் அவர்கள் மறைகின்ற வரையில் எழுதவில்லை. இன்றைக்கு வரைக்கும் வேறு யாரும் எழுதவில்லை.
எழுத முடியாது.
ஏனென்றால், திராவிடர் இயக்கக் கருத்துகளுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாது. அண்ணா அவர்கள் எழுதிய ‘‘ஆரிய மாயை'' நூலுக்கு மறுப்பு எழுத முடியுமா?
உண்மையைப் பேசுகின்ற இயக்கம்தான் திராவிடர் இயக்கம்
இங்கே அமைச்சர் சொன்னாரே, ‘‘கற்போம் பெரியாரியம் இந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை. இனிமேல்தான் படிப்பேன். பேசுவதைக் கேட்டால் போதும், நூறு கூட்டங்களில் அதையே பேசுவேன்'' என்று.
உண்மையைப் பேசுகின்ற இயக்கம்தான் திராவிடர் இயக்கம்.
அந்த அளவிற்கு, இன்றைக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு - பெரியார் என்கிற பேராயுதம் கிடைத்திருக்கிறது; ஆகவே, அதை பயன்படுத்துகிறோம்.
மீண்டும் இந்தப் பிற்போக்குச் சக்திகள் இந்த இயக்கத்தை நேரிடையாக அழிக்க முடியவில்லை என்பதினால், முகமூடி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
முகக்கவசம் வேறு; முகமூடி என்பது வேறு.
முகமூடியைப் போட்டுக்கொண்டு ஏ.டி.எம். இயந்திரங்களை உடைக்கிறார்கள்.
பிறந்த மேனியாக வருகிறார்கள் - அவனுக்கு நிர்வாணமாகப் போவதைப்பற்றி கவலையில்லை- கொள்ளையடிப்பதுதான் மிகவும் முக்கியம்.
அவனுக்கு மானம் முக்கியமல்ல - அவனுக்குக் கொள்ளைதான் முக்கியம்.
ஆனால், நம் இனத்திற்கு மானம்தான் மிகவும் முக்கியம். மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு.
டிரோஜன் குதிரைகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மட்டுமல்ல - இந்த திண்டுக்கல் நகரம் அரசியலில் தெளிவுள்ள நகரமாகும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழா? திராவிடமா? என்று சொல்லி முகமூடிப் போட்டுக்கொண்டு சில டிரோஜன் குதிரைகள் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றன. எனவே, அந்த டிரோஜன் குதிரைகளையும் நீங்கள் தெளிவாக அடையாளம் காணவேண்டியது உங்களுடைய பொறுப்பாகும்.
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் தீர்மானத்தை நிறைவேற்றினார்
புதிதாக சில பேர், ஜாதிப் பட்டத்தைப் போடுகிறார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினார்.
அதைத்தான் கலைஞர் அவர்கள் செய்தார்.
நம்முடைய பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்கள் உரையாற்றும்பொழுது, பெண்களுக்கு சொத்துரிமைபற்றியும், ஜாதி ஒழிப்பைப்பற்றியும் சொன்னார். இன்னொரு செய்தியை அவர் விட்டுவிட்டார்.
இந்தியா முழுவதும் பெண்களுக்கு சொத்துரிமை சட்டப்படி வந்தது?
அது என்னவென்றால், தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் செய்தது மட்டுமல்ல - பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களை, இந்து கோட் பில் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க முடியாது என்பதற்காக வெளியேற்றினார்கள் ஒன்றிய அமைச்சரவையிலிருந்து - அந்த அமைச்சரவையில், மன்மோகன்சிங் அவர்களுடைய தலைமையில், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (யு.பி.ஏ.)யில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றதினுடைய விளைவாக, பெண்களுக்கு 2006 இல் இந்தியா முழுவதும் சொத்துரிமை சட்டப்படி வந்தது என்பது வரலாறு
(தொடரும்)
No comments:
Post a Comment