ஊட்டி மெக்கன்ஸ் கட்டடக் கலைக் கல்லூரியின் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் (1.11.2021) பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தரும், திராவிடர் கழகத் தலைவருமான ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவியல் ரீதியான சிறந்த கருத்துகளை எடுத்துரைத்தார்.
“கட்டடக் கலையில் அய்ந்து ஆண்டுகள் அளவிற்குப் படித்து பட்டம் பெறும் மாணவர்களே! உங்களுக்கு எல்லாம் தெரியாத கட்டடக் கலையின் தொழில்நுட்பத்தை, வாஸ்து சாஸ்திர ‘மேதைகள்’ அறிவார்களாம்!” என்று சொன்னபொழுது மாணவர்கள் கேலியாக சிரித்தார்களாம். அறிவியல் உலகத்தால் நகைக்கப்படும் செய்தி தானே அது அந்தக் க«ண்ணோட்டத்தில்.
கட்டடக் கலை என்பது அறிவியல் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, வாஸ்து போன்ற மூடநம்பிக்கைகளை நம்பி பொருளையும், உழைப்பையும் வீணாக்கக்கூட கூடாது என்று சொன்ன ஆசிரியர் வீரமணி அவர்கள் நாளேட்டில் வெளியான தகவல் ஒன்றையும் எடுத்துக் காட்டினார்.
‘வாஸ்து’ ஜோதிடத்தால் பைனான்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட செய்திதான் அது.
திருப்பூர் விஜயாபுரம் அடுத்துள்ள அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (43). பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி சங்கீதா (38). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு சந்திரசேகரன் வெளியே சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தனர். ஆனால் சந்திரசேகரனை கண்டு பிடிக்கமுடியவில்லை.
திருப்பூர் நல்லூர் காவல்துறையில் புகார் செய்தனர். காவலர்கள் வழக்குப்பு திவு செய்து சந்திரசேகரனை தேடி வந்தனர். இந்நிலையில் பொங்கலூர் அலகுமலையில் உள்ள ஒருகாட்டில் 40 வயது மதிக்கத்தக்கவர் மரம் ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்குவதாக அவிநாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பிணமாக தொங்கியவரின் உடலை மீட்டு உடல் கூராய்விற்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்துகொண்டவர் விஜயாபுரத்தை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் சந்திரசேகரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சந்திரசேகரனின் மனைவியை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாயின. சந்திரசேகரன் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக புதிய வீட்டை மிகுந்த ரசனையுடனும் கலைநயத்துடனும் கட்டியுள்ளார். கட்டி முடித்த பின்னர் பிரபல வாஸ்து ஜோதிடரிடம் வீடு குறித்து கேட்டார்.
அப்போது அந்த ஜோதிடர் வீடு ‘வாஸ்து’ பார்த்து கட்டப்படவில்லை. புதிய வீட்டில் குடியேறினால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்தில் குடியேறுமாறு கூறியதாக தெரிகிறது. இதில் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த சந்திரசேகரன் இதுகுறித்து மனைவியிடம் கூறி புலம்பி வந்தார். மனைவி அவருக்கு ஆறுதல் கூறினார். ஆசையாக கட்டிய வீட்டில் குடியேற முடியவில்லையே என்ற கவலை அவரை வாட்டியது. ஒருகட்டத்தில் விரக்தியடைந்த சந்திரசேகரன் வீட்டைவிட்டு வெளியேறி அலகுமலை அடிவாரம் சென்று அங்கு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது - விசாரணையில் தெரியவந்தது. இது குறித்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாஸ்து மூடத்தனம் ஒரு குடும்பத் தலைவரின் உயிரைப் பறித்து விடவில்லையா? என்னே கொடுமை!
இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏ(எச்) என்ன கூறுகிறது? அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுவதை எடுத்துக்காட்டி, வாஸ்து போன்ற மூடநம்பிக்கையின் விபரீதத்தை ஆசிரியர் அவர்கள் மாணவர்களிடம் விளக்கியபோது, மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள் கூட ஜோதிடப் பித்துப் பிடித்து அலைவது பரிதாபமே! நம் நாட்டுக் கல்வி பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் வகையில் அமையாதது தான் முக்கியக் காரணமாகும்.
ஜோதிடத்தில் ‘வாஸ்து’ என்ற ஒன்று உண்டாம், அதன்படி தான் வீடுகள் கட்டப்பட வேண்டுமாம். கோவில்கள்கூட வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்டப்படுகிறதாம். அப்படி இருக்கும்பொழுது அய்யப்பன் கோவிலும், சிறீரங்கம் கோவிலும் பற்றி எரிந்து புதுவிக்கிரகங்கள் வைக்கப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்ததாம்?
ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் தலைமைச் செயலகத்தை வாஸ்துவின்படி மாற்றி அமைத்தாரே - வாஸ்தவமாக என்ன நடந்தது? அவர் ஆட்சியில் நீடிக்க முடியவில்லையே ஏன்?
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் முதலமைச்சர். மூடநம்பிக் கைகளில், ஜோதிட வாஸ்துகளில் அசையாத நம்பிக்கையாளர். ஏழுமலையானுக்கு அரசு பணத்தில் ரூ. 5 கோடி செலவில் தங்க நகை கிரீடம் காணிக்கையாக கொட்டியவர். வாஸ்து சாஸ்திரப்படி தலைமைச் செயலகத்தையும் தமது இல்லத்தையும் சீரமைக்கும் வகையில் ரூ. 25 கோடி செலவில் கட்டடத்தை உருவாக்கியவர். அவர் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி முக்கியமானது.
திப்பண்ணப்பேட்டை என்னும் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருபது பயனாளிகள் தேர்வு செய்யப் பட்டனர். அதில் 16 பேர்கள் ஆதி திராவிடர்கள் ஆவார்கள். உயர்ஜாதிக்காரர்களால் அதனை சீரணித்துக் கொள்ள முடிய வில்லை.
கட்டிய வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளது என்று உயர்ஜாதிக்காரர்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்தனர். அந்த இடத்தில் அவசர அவசரமாக பிள்ளையார் கோவில் ஒன்றையும் கட்ட ஆரம்பித்தனர்.
பிள்ளையார் கோவில் கட்டினால் வாஸ்து குறைபாடு நீங்கும் என்று கதை அளந்தனர். அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்தினர்.
"வாஸ்து” என்னும் கவைக்குதவாத மூடநம்பிக்கை காரணமாக ஒடுக்கப்பட்ட ஏழை எளிய 16 பேர்களுக்கு கிடைக்க இருந்த வீடுகள் கிடைக்காமல் போனதுதான் மிச்சம்!
மக்கள் நல அரசாக இருக்குமானால் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி நடப்பது உண்மையானால் இதுபோன்ற மூட நம்பிக்கைகளைத் தடை செய்ய வேண்டாமா?
No comments:
Post a Comment