மாதம் தவறினாலும் பண்டிகைகள் தவறுவதில்லை - இந்து மதத்தில்; காரணம் பண்டிகைகள் என்பது பார்ப்பனர்களின் சுரண்டல் கருவியாகும்.
ஆண்டில் பகுதி நாட்கள் பண்டிகை, கெட்ட நாள், சகுனம் இத்தியாதி இத்தியாதி மூடத்தனங்களால் நாசமாகப் போகின்றன. இழந்த பணத்தைக்கூட மீண்டும் பெற்றுவிட முடியும். ஆனால் காலத்தை இழந்தால் மீண்டும் பெறுவது என்பது இல்லை. இந்து மதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம் அறிவுக்குப் பொருத்தமற்றது. குறிப்பாக தீபாவளியை எடுத்துக் கொண்டால் நமக்குச் சற்றும் சம்பந்தமற்றது.
தீபாவளி இங்கு திணிக்கப்பட்டது எப்போது? இதுகுறித்து பேராசிரியர் அ.கி. பரந்தாமனார் என்ன கூறுகிறார்.
"தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும், மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராட்டிரர்களும் இதைக் கொண்டாடி வரு கிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.
வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று; வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.
மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழ்நாட்டில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
(பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் எழுதிய "நாயக்கர் வரலாறு" என்னும் நூலில் பக்கம் : 433-434)
தீபாவளிக்காகக் கூறப்படும் கதை - அசல் கட்டுக் கதையே, அறிவுக்குச் சற்றும் பொருந்தக் கூடியதல்ல.
இரண்யட்சகன் என்ற ஒருவன் பூதேவர்களுக்குத் தொல்லை கொடுத்தானாம். பூமியைப் பாயாகச் சுருட்டிக் கடலில் ஒளிந்தானாம்! பூதேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்களாம்.
மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டுக் கொண்டு வந்தானாம். அந்தப் பூமியும், பன்றியும் காதல் புரிந்தனராம், புணர்ந்தனராம். அதன் விளைவாக குழந்தை ஒன்றுபிறந்ததாம் - அவன்தான் நரகாசுரனாம்!
பூமி தட்டை என்று நினைத்த காலத்தில் எழுதப்பட்ட சரக்கு. உருண்டையான பூமியைப் பாயாக எப்படி சுருட்ட முடியும்? பூமியில் தானே கடலும் இருக்கிறது. இந்நிலையில் பூமியைச் சுருட்டிக் கடலில் எப்படி ஒளிய முடியும்?
கடலில் பன்றி மூழ்கினால் பன்றியின் உயிர்தான் தப்புமா? பன்றிக்கும், பூமிக்கும் பிள்ளை பறக்குமா? இதுபோன்ற கேள்விகள் ஏராளம் உண்டு.
பூமிக்கும், பன்றிக்கும் பிறந்த நரகாசுரன் பூதேவர்களுக்குத் தொல்லை கொடுத்தானாம். மறுபடியும் பூதேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டார்களாம்.
மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனிடம் சண்டையிட்டானாம்.
கிருஷ்ணக் கடவுள் மயக்கம் போட்டு விழுந்தானாம். ஆனால் கிருஷ்ணன் மனைவியான சத்தியபாமா அம்பு எய்து, நரகாசுரனைக் கொன்றாளாம்.
நரகாசுரன் மரண வாக்கு மூலமாக - தான் மரணித்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டானாம் - அந்நாள் தான் தீபாவளியாம். எப்படி இருக்கிறது இந்தக் கதை? பட்டைச் சாராயம் குடித்தவனை தேள் கொட்டினால் எப்படி எல்லாம் உளறித் தொலைப்பானோ அவ்வாறான உளறல் எனறு தந்தை பெரியார் தமக்கே உரித்தான முறையில் விமர்சித்ததுண்டு.
மகாவிஷ்ணுவுக்குப் பிறந்த பிள்ளை எப்படி அசுரன் ஆனான்? வரலாற்றாசிரியர்கள் என்ன சொல்லுகிறார்கள்? "வேதங்கள், புராணங்களில் சொல்லப்படும் பூதேவர்கள் என்னும் சுரர்கள் எல்லாம் ஆரியர்கள்தாம். அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள்தான். அந்த ஆரிய - திராவிடப் போராட்டத்தைத்தான் இப்படி புராணங்களாக சித்தரித்துள்ளனர்" என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
புராணங்கள் வரலாறாக மாட்டா என்பது கோவணம் கட்டா சிறுவர்களுக்குக் கூடத் தெரிந்த ஒன்று.
இதுபோன்ற அர்த்தமற்ற புராணக் குப்பைகள்தான் அர்த்தமுள்ள (?) இந்து மதத்தின் பொக்கிஷமாம். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கதைக்கிறார்கள் பார்ப்பனர்கள்.
"கடைசிக் குழவிக் கல்லு ஒன்று கடவுள் என்ற பெயரால் இருக்கும் வரை ஆரியப் பார்ப்பனர் ஆதிக்கத்தை அழிக்க முடியாது" என்று கூறுகிறார் தந்தை பெரியார்.
அதனால்தான் 'மானமுள்ள திராவிடன் தீபாவளி கொண்டாடலாமா?' திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
மானமுள்ள பார்ப்பனர் அல்லாத பெருங்குடி மக்களே, தீபாவளியைப் புறக்கணிப்பீர்! மானமுள்ள இனம் என்பதை நிரூபிப்பீர்!!
No comments:
Post a Comment