தலைவர்களே, பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் இறங்குங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

தலைவர்களே, பேசுவதை நிறுத்தி விட்டு செயலில் இறங்குங்கள்

பருவநிலை மாநாட்டில் தமிழ்நாட்டு மாணவி கோரிக்கை

கிளாஸ்கோ, நவ.5 பருவ நிலை மாநாட்டில் பேசிய வினிஷா உமாசங்கர் தனது தலைமுறையில் பலர் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர் என கூறினார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த பருவநிலை மாநாட்டில், காடுகள் மற்றும் நிலம் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து ஏற்பாட்டில் தனி அமர்வு நடைபெற்றது. அதில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில், 2030ஆம் ஆண்டுக்குள் காடுகள் அழிப்பு மற்றும் நிலம் சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர்கள் உறுதி எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான பிரகடனத்தில் சீனா, பிரேசில் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.

மாநாட்டில் நிகழ்வு ஒன்றில்  கலந்துகொண்டு பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி வினிஷா உமாசங்கரின் உரை அனைவரையும் கவர்ந்து.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர்.  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்   தொடங்கிய எர்த்ஷாட் விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.

மாநாட்டில்  தூய்மை தொழில்நுட்பம் குறித்து  பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் மாநாட்டில் பேசிய வினிஷா கூறியதாவது:-

இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபடத் தொடங்குங்கள்.

புதைபடிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான  எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும். 

பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும்.

எங்களுடன் சேர உங்களை அழைக்கும்போது, நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம்.

 தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்த காலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

எனது தலைமுறையில் பலர், வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால் எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது.

நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான்.  நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன் என்று பேசினார். 

No comments:

Post a Comment