கரோனா கட்டுப்பாடுகள் சுவிஸ் வாக்காளர்கள் ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 30, 2021

கரோனா கட்டுப்பாடுகள் சுவிஸ் வாக்காளர்கள் ஒப்புதல்

பெர்லின், நவ. 30- கரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க, சுவிட்சர்லாந்தில் வாக்காளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அய்ரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கரோனா முதல் அலை பரவிய போது சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரு வதையடுத்து கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி, மக்களிடம் கருத்து கேட்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

ஓட்டெடுப்பில் 63 சதவீதத்துக்கும் அதிகமானோர் கரோனா பரவலை தடுக்க, கட்டுப்பாடுகள் விதிக்க ஆதரவு தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டோர், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்போர் ஆகியோரை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிப்பது பற்றி சுவிட்சர்லாந்து அரசு ஆலோசித்து வருகிறது.

கரோனா அதிகரிப்பு - நியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை

நியூயார்க், நவ. 30- அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. வியாழக்கிழமையன்று (25.11.2021) ஒரே நாளில் 6,295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 3.45 சதவீதமாக உள்ளது. 28 பேர் ஒரே நாளில் இறந்தும் உள்ளனர். மருத்துவமனைகளில் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. சராசரியாக ஒரு நாளில் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் கரோனா மேலும் பரவுவதைத் தடுக்க அந்த மாகாணத்தில் பேரழிவு அவசர நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாகாண ஆளுநர் கேத்தி ஹோசுல் பிறப்பித்துள்ளார். இந்த மாகாணத்தில் புதிய வகை வைரசான ஒமிக்ரான் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் உருவாகி நியூயார்க்கில் முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆளுநர் கேத்தி ஹோசுல் கூறி உள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதோடு முன் எச்சரிக்கை வழி முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

No comments:

Post a Comment