கரியமிலவாயுவை விட ஆபத்தானது மீத்தேன் வெளியேற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 6, 2021

கரியமிலவாயுவை விட ஆபத்தானது மீத்தேன் வெளியேற்றம்

 உலக நாடுகள் கரியமிலவாயுவைக் குறைக்க தங்களுக்குள் கலந்தாய்வு செய்துகொண்டு இருக்கும் அதே வேளையில் அதைவிட ஆபத்தான மீத்தேன் வெளியேற்றம் குறித்து கவனம் செலுத்தாமல் உள்ளது கவலை அளிக்கிறது என்று சூழியல் ஆர்வலர்கள் கவலைதெரிவித்துள்ளனர்.

 காரணம், கரியமிலவாயுவை விட மீத்தேன் மிகவும் ஆபத்தானது. இதன்  வெளியேற்றத்தைக் குறைத்துப் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்ற பேச்சும் எழுகிறது.

படிம எரிபொருளை எரிப்பதால் மீத்தேன் வாயு வெளியாகிறது. ஆதலால், படிம எரிபொருளை எரிக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் மீத்தேனைக் குறைக்கும் வழிகளை ஆய்வாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

மீத்தேன் என்றால் என்ன?

நிறமற்ற வாயு, வாசனை இல்லை, சூரிய சக்தியை உள்வாங்கும் - அதனால் சூட்டை அதிகரிக்கும் - அத்தகைய வெப்பம் நூறாண்டுகள் வரை நீடிக்கும். கரியமிலவாயுவைவிட 80 மடங்கு அதிக வெப்பத்தை உள்வாங்கும் மீத்தேன் எதிலிருந்து வரும்?

மனித நடவடிக்கைகள், மீத்தேன் வெளியேற்றத்தில் 60 விழுக்காடு பங்களிக்கின்றன: அதில் 35 விழுக்காடு, படிம எரிபொருள் பயன்பாட்டினால் வெளியாகிறது. எண்ணெய், நிலக்கரி போன்றவற்றை உற்பத்தி செய்யும்போது, மீத்தேன் வெளியாகலாம்

இயற்கையாக வெளியாகும் மீத்தேன்:

பூமிப்பந்தின் பிளவுகளிலிருந்து இயற்கையாக மீத்தேன் வெளியாகும்.

எரிமலைகள், மண், ஈர நிலம் ஆகியவற்றிலிருந்தும் வெளியாகும்.

இயற்கையாக வெளியேறும் மீத்தேன் எக்காலத்திலும் புவியின் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணியாக இருக்காது, காரணம் இயற்கை சமமான மீத்தேனை வெளியிடும். அந்த மீத்தேன் புவியில் இயற்கை சுழற்சியில் அது வினைபட்டு புவிக்குத் தேவையான பொருளாக மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக கடலின் ஆழத்தில் உள்ள வெடிப்புகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் ஒளிபுகா பகுதிகளில் வாழும் உயிரினங்களின் ஆற்றல் மூலமாக உள்ளது, அதன் மூலம் பெரும்பாலான மீத்தேன் புரதமாக மாற்றப்படுகிறது, இந்த சிறிய உயிரினங்களை சாப்பிடும் மீன்கள் அவற்றை உண்ணும்பெரிய மீன்கள் என்று சுழற்சி முறையில் மீத்தேன் புவிக்குத் தேவையான பொருளாக மாற்றப்படுகிறது.

 அதே நேரத்தில் ஆய்வகம் மற்றும் இதர மனிதர்களின் தேவைகளுக்காக எடுக்கப்படும் மீத்தேன் தேவையில்லாமல் காற்றில் கலக்கப்படுகிறது. இதனைக் குறைக்கவும் உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஆய்வுகள் நடத்தப்படுகிறது,

 பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்று என்ற பெயரில் புவியின் ஆழத்தில் உள்ள மீத்தேனை பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியே எடுக்கின்றன. இதற்கு அரசுகளும் துணை போகின்றன.

 எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் காவிரி கடலில் கலக்கும் மாவட்டங்களில்(டெல்டா) தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் வேலையை விடாப்பிடியாக பிடிவாதமாக ஒன்றிய அரசு செய்துகொண்டு இருக்கிறது.

சில தனியார் நிறுவனங்கள் செல்வத்தில் செழிக்கவேண்டும் என்பதற்காக நமது மண்ணை அந்நியர்களுக்கு விற்று மக்களின் உரிமைகளையும் பிடுங்குகிறது, அதே போல் புவிமாசையும் ஏற்படுத்துகிறது, இதே நிலைதான் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் கென்யா, தான்சானியா உள்ளிட்ட பகுதிகள் மற்றும் தென் அமெரிக்கக் கண்டத்தின் அர்ஜண்டைனா, பிரேசில் மற்றும் கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட பகுதிகளிலும் அங்குள்ள அரசுகள் கார்ப்பரேட்டுகளிடம் மக்களின் நிலங்களை அள்ளிக் கொடுத்து மீத்தேன் எடுக்க அனுமதி அளித்துள்ளன.  இவற்றை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது,

No comments:

Post a Comment