‘மூடநம்பிக்கை' விழாவான தீபாவளியால் ஏற்பட்ட ‘கேடு'களும்-உயிரிழப்புகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, November 5, 2021

‘மூடநம்பிக்கை' விழாவான தீபாவளியால் ஏற்பட்ட ‘கேடு'களும்-உயிரிழப்புகளும்!

சென்னை, நவ.5 ‘மூடநம்பிக்கை' விழாவானதீபாவளியால் உயிரிழிப்புகளும், காற்று மாசும் ஏற்பட்டுள்ளன.

அதன் விவரம் வருமாறு:

தலைநகர் டில்லியில்...

தலைநகர் டில்லியில் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது.

தலைநகர் டில்லியில் பல மாதங்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான அளவில் உள்ளது. வாகன நெரிசல், அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரித்தல் உள்பட பல்வேறு காரணங்களால் டில்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

இதற்கிடையில், காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிக்க டில்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால், தீபாவளி யான நேற்று (4.11.2021) டில்லியின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று காற்றின் தரம் மிகவும் அபாய அளவை எட்டியுள்ளது. நகரின் ஒருசில பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையில் இருந்து நேற்று அபாயகரம் என்ற அளவை எட்டியது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

சென்னையில்...

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு புகையால் காற்று மாசு பலமடங்கு அதிகரித்துள்ளது.

முன்னதாக பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணிமுதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணிமுதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது.

ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நேரக் கட்டுப் பாட்டையோ அல்லது சரவெடி கட்டுப்பாட்டையோ யாரும் மதித்ததாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பட்டாசு புகை சூழ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது. காற்று மாசின் அளவு 100 அய் கடந்தது. குறிப்பாக வடசென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடின் அளவு 344 என்றளவை எட்டியது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் காற்று மாசு பாட்டின் அளவு 270க்கும் மேல் அதிகரித்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டின் அளவு:

மணலி - 344, நுங்கம்பாக்கம் -272,  பொத்தேரி -151, அம்பத்தூர் - 150, சேலம் - 275, திருப்பூர் - 233, மதுரை -188, கோவை -178.

தமிழ்நாட்டிலேயே கடலூர் மாவட்டத்தில் தான் பட்டாசு குறைவாக வெடிக்கப்பட்டது. அங்குதான் காற்று மாசுபாட்டின் அளவும் குறைவாக இருந்தது.

சென்னையில் 294 வழக்குகள் பதிவு

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணிவரையும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.  அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது சென்னை காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்படும் என தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்த நபர்கள் மீது சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ராயப்பேட்டை, அய்ஸ் அவுஸ், கீழ்ப்பாக்கம், அயனாவரம், டி.பி.சத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பட்டாசு வெடித்து தந்தை, மகன் பலி

புதுச்சேரி அருகே இருச்சக்கர வாகனத்தில் பட்டாசு மூட்டைகளை ஏற்றி வந்தபோது திடீ ரென்று வெடித்ததால் தந்தை, மகன் உடல் சிதறி பலியானார்கள். விபத்தின் போது சாலையில் வந்த இருவர் வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் (வயது 32). இவர் தமிழ்நாட்டுப் பகுதியான கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபனாவை பார்ப்பதற்காகச் சென்று விட்டு தனது 7 வயது மகன் பிரதீசுடன் தீபாவளி கொண்டாட என்று இருசக்கர வாகனத்தில் இரண்டு சாக்கு மூட்டைகளில் பட்டாசுகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி நோக்கி வந்தார்.

அப்போது புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டமான கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரை சாலை சந்திப்பில் வந்து கொண்டிருக்கும்போது எதிர் பாராத விதமாக, இருசக்கர வாகனத்தில் இருந்த நாட்டு பட்டாசுகள் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலே தந்தையும் மகனும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

சாலை முழுவதும் இவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. அருகே இருந்த வாகனம் மற்றும் வீட்டின் கூரைகள் சேதமடைந்து அந்த சாலை முழுவதும் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த வெடிவிபத்து சம்பவம் நடைபெறும்போது அந்த சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த ஷர்புதீன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் இருமாநில எல்லைகளில் நடந்ததால் இருமாநில காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து வெடிவிபத்து குறித்து விசாரனை நடத்தினர்.

மேலும் நிகழ்விடத்திற்கு விழுப்புரம் டிஅய்ஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி.சிறீநாதா வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment